தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
தமது போராட்டம் மீதான நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, இந்த ஆசிரியர் போராட்டத்தினால் நாட்டில் நேற்றையதினம் மொத்தமாக 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று (27) வழமை போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.