வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருத்தல் இதற்கு காரணமாகும். அவ்வாறே மக்களுக்கான காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று (06) வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1985 ஆம் ஆண்டு நில அளவீட்டு வரைபடத்தின் படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் எஞ்சிய காடுகள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள அல்லது பிரதேச செயலாளர்களினால் விடுவிக்கக் கோரப்பட்டுள்ள காணியின் அளவு என்னவென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அம்பாறை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களுக்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த போது அவர்களது பாரம்பரிய விவசாய நிலங்கள் பறிபோயுள்ளமை தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் தரப்படும் என அரசு கூறினாலும் அது இன்றுவரை வார்த்தையோடு சுருங்கிப்போயுள்ளது. அரசாங்கம் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் திகதியை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
2383/5 வர்த்தமானி மூலம், வனவுயிர் மற்றும் விருட்சங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உத்தேச நீர்வாழ் உயிரின வளர்ப்பு பேட்டையை தாபிக்கும் பொருட்டும் அல்லது கடல் பாதுகாப்பு என இனங்காணப்பட்டுள்ள நிலப்பிரதேசத்தை விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இதன் உண்மையை நிலை என்னவென எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவளத்தைப் போன்று விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின் போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. பதவி ஸ்ரீபுர, கோமரங்கடவல, மொரவெவ, கந்தளாய், சேருவில, வெருகல், அம்பாறை, மொனராகலை மாவட்டங்களிலும் வடக்கிலும் இந்தப் பிரச்சினை நிலவி வருகிறது. அவர்களின் விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் வரை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.