தியாகியின் திருவிளையாடல்கள் அம்பலத்துக்கு வர தியாகி அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை மீள் பிரவேசத்திற்கு தயாராகின்றார். ஒரு ஸ்ரன்ட் அடித்துள்ளார்.’தற்காலிகமான ஓய்வு எடுக்கிறேன், நிரந்தரமா என்று காலம் தான் முடிவு செய்யும்’ என யூன் 10இல் அறிவித்து உதவி வழங்குவதை நிறுத்தியுள்ளார். இது தன்னை நியாயப்படுத்துவதற்கு வாமதேவன் தியாகேந்திரன் அடித்த அந்தர் பல்டி. இவ்வாறு செய்தால் தனக்கு ஆதரவான ஒரு அலையை தன்னுடைய உதவி வேண்டும் என்று கேட்பவர்கள் எழுப்புவார்கள் எனத் தியாகேந்திரன் கருதியிருக்கலாம். மேலும் அவரால் வளர்க்கப்பட்ட யூரியூப்பேர்ஸ் மற்றும் சமூக வலைத்தள பிரகிருதிகள் அவருக்காகக் குரல் கொடுப்பார்கள் அதன் மூலம் றீ-என்ரி (re-entry) ஆகலாம் எனப் பார்க்கின்றார். ஆனால் அது அவ்வளவாக வாய்க்கவில்லை. தம்மன்னா – இந்திரன் கோஸ்டியையே மூடிக்கட்டிக்கொண்டு போக வைத்தது யாழ்ப்பாணம். தியாகியெல்லாம் மற்றரே (matter) கிடையாது. ஆனாலும் தியாகி இன்னுமொரு முயற்சி எடுப்பார், மக்களுக்கு தன்னுடைய உதவி தேவைப்படுகின்றது. மக்கள் கேட்கிறார்கள் என்று ஒரு ரீலோடு இன்னுமொரு என்ரிக்கு இடமிருக்கிறது.
உதவி வழங்குகிறேன் என்ற பெயரில் அண்மைக்காலமாக பணத்தை விட்டெறிந்து வரும் தியாகி என அறியப்பட்ட 74 வயதான வாமதேவன் தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தை தன்னிடம் தந்தால் ரணில் விக்கிரமசிங்கவை தான் ஆதரிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்துக் கோடி வழங்குவதாகவும் தெரிவித்து வருகின்றார். மதியாதார் முத்தம் மிதிக்கமாட்டேன் என்றவர் ரணில் விக்கிரமசிங்க தன்னை வந்து சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றார். அண்மையில் சிறிதுகாலமாக பிரபல்யம் அடைந்து வரும் திடீரென முளைத்துள்ள இந்தத் தியாகி யார்? இவருக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? ஏன் இந்த நிதியை இவர் இவ்வாறு செலவு செய்கின்றார்?
தியாகி யாழ்ப்பாணம் நல்லூரடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர்கள் யாழ் மேட்டுக்குடியினர். தியாகேந்திரனின் தாயார் சொர்ணாம்பிகை இவர் முன்னாள் யாழ்ப்பாணச் சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் ஒன்றுவிட்ட சகோதரி. அதாவது யோகேஸ்வரனின் தந்தை மருத்துவர் ஏ எஸ் வெற்றிவேலுவின் சகோதரன் புகழ்பெற்ற சட்டத்தரணி ஏ எஸ் நவரத்தினத்தின் ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருவர். தியாகேந்திரனுக்கு யோகேஸ்வரன் மாமா முறை. தியாகேந்திரன் இனப்பிரச்சினை பூதாகாரமாவதற்கு முன்பே புலம்பெயர்ந்து சுவிஸில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இவருடைய மனைவி நந்தினி தியாகேந்திரன். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் நிலாயினி, தக்சாயினி ஆகிய இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். நிலாயினி அறக்கட்டளை ஒன்றை நடத்துகின்றார். தக்சாயினி மருத்துவ நிலையம் ஒன்றை இயக்குகின்றார். மற்றும் மகன் அர்ச்சுனா கனன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளார். இக்குடும்பத்தினர் சுவிஸில் தமிழ் சமூகத்தோடு ஒன்றியிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை. அவர்கள் கண்ணியமானவர்களாக அந்நாட்டோடு இயைந்து வாழ்பவர்களாகவே உள்ளனர்.
ஆனால் இவருடைய மகன் அர்ச்சுனா தியாகேந்திரனின் திருமணத்தின் போது கொழும்பில் ஒரு சீதன வீட்டைக் கேட்டு துன்புறுத்தி இறுதியில் அத்திருமணம் முறிந்தது கிளைக்கதை.
தியாகேந்திரன் 2000ம் ஆண்டு சமாதான காலத்தில் தனியாக இலங்கைக்குத் திரும்பி வாழ்கின்றார். தியாகேந்திரன் கோடிக் கணக்கில் உதவி வழங்குவது பாராட்டுக்குரியது தான். இவருக்கு இவ்வளவு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகின்றது என்பதும் ஏன் இதனை இப்படி வழங்குகிறார் என்பதும் சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டிய கேள்வி.
தியாகேந்திரனுக்கு சட்டப்படி பணம் வருகிறதோ சட்ட விரோதமாக வருகின்றதோ என்பதற்கு அப்பால் அவற்றை ஏன் அவர் விசுக்குகின்றார் என்பதை அறிந்தால் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம்.
விளக்கம் 1: தன்னை எம்ஜிஆர் ரசிகனாகக் காணும் அவர் அவ்வாறான கோமாளித் தனங்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றார். இவ்வாறு அள்ளிக் கொடுப்பதால் தன்னை ஒரு கொடைவள்ளல் என உலகம் போற்றும் என நினைக்கலாம். அவருக்கு 74 வயதாகிவிட்டது. பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இருக்கிறதை வாரிக் கொடுத்து பெயரெடுக்க எண்ணி இருக்கலாம். இந்த மனநிலை வருவது மிகக்குறைவு. பணத்தை வைத்திருப்பவர்கள் எப்பவும் அதனை மேலும் மேலும் சேர்க்கவே முனைவார்கள். அவர்களின் மரணத்தின் விளிம்பில் கூட. அந்த வகையில் தியாகேந்திரன் வித்தியாசமானவர்.
விளக்கம் 2: தன்னை கொடையாளியாக அறிமுகப்படுத்தி ஒரு அரசியல் வாதியாவது. பிரித்தானியாவில் இருந்து ஊருக்குச்சென்ற தொழிலதிபர் கணேஸ் வேலாயுதம், நெதர்லாந்தில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள ஐபிசி பாஸ்கரன் வரிசையில் தியாகேந்திரனுக்கும் ஒரு முதலமைச்சர் கனவு இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களிடம் இருக்கின்ற அரசியல் விழிப்புணர்வால் அவர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கணக்குப் பார்க்கத் தெரியாத முட்டாள் அல்ல தியாகேந்திரன். ஏற்கனவே தேர்தலில் நின்று மண்கவ்விய அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் தான் தேர்தலில் நின்று கஸ்டப்படாமல் யாழ்ப்பாணத்தைக் கேட்கின்றார். மிகத் தெளிவாக ஆளுநர் பதவியைக் கேட்கின்றார். போர்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர் வந்து ஆண்ட யாழ்ப்பாணத்தை சுவிஸில் இருந்து வந்த தான் ஏன் ஆளமுடியாது என்று நினைக்கின்றார் போலும். அவர் ரிசிரி (TCT: Thiyagi Charitable Trust) சுப்பர் மாக்கற் லெவலுக்கு யாழ்ப்பாணத்தை கொண்டிழுக்கலாம் என நினைக்கிறாரா? அல்லது தனது திருகுதாளங்களைத் தொடர அது வசதியாக இருக்கும் என நினைக்கின்றாரா?
விளக்கம் 3: பணத்தை தேக்கி வைக்காமல் அதனைப் பாய விடுவதன் மூலமே மேலும் பணத்தை சம்பாதிக்க முடியும். அறக்கட்டளைகள் மூலமாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பல நடவடிக்கைகள் உலகம் பூராகவும் நடக்கின்றது. ஆனால் மேற்கு நாடுகளில் இந்த பண பரிவர்த்தனை முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை உச்சுவதற்காக உண்டியல் என்ற பண மாற்று முறைமையூடாக கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் பத்து வீதத்தை அவர்கள் தங்களுக்கு பெற்றுக்கொண்டு மிகுதி தொண்ணூறு வீதத்தை பணம் அனுப்பியவர் தருகின்ற வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும். இதன்படி பத்துக்கோடி பரிவர்த்தனை இடம்பெற்றால் உண்டியலில் பெற்று வங்கியில் வைப்பிட ஒரு கோடி கிடைக்கும். இவ்வாறான நடவடிக்கையில் உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு இரகசிய வலைப்பின்னல் இருப்பதாகவும் அவ்வாறான வலைப்பின்னல் உள்ளவர்களுக்கு தான் சிலரை அறிமுகப்படுத்தியதாக சுவிஸ்லாந்தில் வாழும் போராட்ட அமைப்பொன்றின் முன்னாள் உறுப்பினர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
தியாகேந்திரன் தான் எவ்வளவு பணத்தை மக்களுக்கு கொடுத்தார் என்பதையோ பணம் எங்கிருந்து வருகின்றது என்பதையோ குறிப்பாகச் சொல்லவில்லை. தன்னுடைய பிள்ளைகளதும் அல்ல, தன்னுடைய சொந்தப் பணம் தனது பென்சன் பணம், தான் கார்களை பழுது பார்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என்று சொல்கின்றாரேயல்லாமல் அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவர் தன்னுடைய வீட்டில் நிற்கும் கார்களைக் காட்டுகின்றார். ஆனால் பா உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் பென்ஸ் மொடலில் வந்த அத்தனை கார்களும் அருங்காட்சியகம் போல உள்ளது. அவரிடம் உள்ள சொத்துக்கள் தியாகேந்திரனிடம் உள்ளதா தெரியவில்லை. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கும் தியாகேந்திரன் பல வேலைத்திட்டங்களைச் செய்துள்ளார். தியாகேந்திரன் இராணுவத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகேந்திரனிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கின்றது. ஆனால் மணிவண்ணன் கோஸ்டி இன்னமும் ஒட்டுறவாகவே உள்ளது. ஆரிய குளத்தை ஒரு சுற்றுலாப் புள்ளியாக்கியது தியாகேந்தரனின் உதவித்திட்டம் தான். மணிவண்ணன் மேயராக இருந்தும் அப்பதவியைப் பயன்படுத்தி எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.
தியாகேந்திரன் சமூக அக்கறையுடைய ஒரு மனிதராகத் தெரியவில்லை. தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்தவும் ஒரு பிரபலமாக ஆவதையும் விரும்புகின்றார். அதில் எந்தத் தவறும் கிடையாது. அதற்காக சட்டபூர்வமான பணமோ சட்டத்துக்கு புறம்பான பணமோ அதனை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். ஆனால் எம்மத்தியில் ஒரு பழமொழி உண்டு. வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று. இன்றைய சூழலில் சந்தைப்பொருளாதாரச் சூழலில் எல்லாமே சந்தைக்கு வந்துவிட்டது. அறக்கட்டளைகளும் அப்படித்தான். ஆனால் தியாகேந்திரன் உதவி கேட்பவர்களை தனக்குக் கீழானவர்களாக ஆட்டுவிப்பது, நலிந்தவர்களை, நடக்க முடியாத வயதானவர்களை, நோய்வாய்ப்பட்டவர்களை, உடல் ஊனமுற்றவர்களை அவர்களது தனித்துவத்தை ஏறி மிதிக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி தனதிடத்திற்கு வரவழைத்து, நெரிசல்படவிட்டு, காத்திருக்க வைத்து இவ்வாறு நடந்துகொள்வது ஒரு சமூக அக்கறையுடையவர் செய்யும் சேவை கிடையாது. தியாகேந்திரன் காசை நிலத்தில் போட்டு மிதித்தது ஒன்றும் பெரிய குற்றமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் காசை மிதித்தன் மூலம் அதனை வேண்ட வந்த சமூகத்தின் நலிந்த மக்களைப் போட்டு மித்திதுள்ளார். அந்த மக்களைக் கேவலப்படுத்தியுள்ளார்.
யாழ் மேட்டுக்குடியிலிருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் தம்பதிகளுக்குப் பிறந்து கல்வியிலும் முன்னேற்றம் கண்டு வாழுகின்ற இவருடைய பிள்ளைகள் பொருளாதார ரீதியில் மேன்நிலையிலிருப்பது ஆச்சரியமல்ல. இவர்களைக் காட்டிலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்நிலையில் உள்ள பலரைத் தமிழ்ச் சமூகம் கண்டுள்ளது. இலங்கையிலேயே இந்நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இலைமறைகாயாக வாழ்கின்றனர். சிறந்த பெறுபேறு பெற்றவர்களையும் பல்கலைக்கழகப் பட்டதாரியானவர்களையும் அவர்களுடைய சுயமரியாதையை மிதிக்கும் வகையில் கேவலப்படுத்துவது அழகல்ல. வடக்கு கிழக்கில் பல கொடையாளிகள், தொண்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான உதவிகளை நாளாந்தம் எங்கோ ஒரு மூலையில் மேற்கொண்டு வருகின்றன. அவற்றை இன்னமும் வினைத்திறனோடும் சீரான முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்கள் வருகின்ற போது, தியாகேந்திரனின் ரிசிரி நடவடிக்கைகள் காலனித்துவ கால பிரபுக்கள் அடிமைகளுக்கு உதவி வழங்குவது போன்ற தோற்றப்பாட்டையே கொடுக்கின்றது. மேற்குலக நாகரீகத்தில் வளர்ந்த தியாகேந்திரனின் பிள்ளைகள் அவருக்கு இவற்றைச் சுட்டிக்காட்டவில்லையா என்பது ஆச்சரியமானது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தியாகேந்திரன் நடத்திய சிறுவர் இல்லம் 2016இல் விசாரணைகளின் பின் மூடப்பட்டதும் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டதும் பலருக்குத் தெரியாது. தெரிந்த பலரும் அரசியல் வாதிகளும் அதனைக் கண்டுகொள்வதில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சியின் தலைவர் பா உ எஸ் சிறிதரன் போன்றவர்கள் ‘நக்கினார் நாவிழந்தார்’ என அந்தச் சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட விடயத்தில் மௌனமாகவே உள்ளனர். இலங்கை விமானப்படை விமானத்தை பார்வையிடச் சென்ற மாணவிகளை பெற்றார் ‘கூட்டிக்கொடுப்பதாகக் கூக்குரலிட்ட செல்வராஜா கஜேந்திரன் இலங்கை இராணுவத்தோடு இணைந்து கொடை செய்யும் தியாகேந்திரனின் திருவிளையாடல் பற்றி மௌனமாகவே உள்ளார். யூரியூபேர்ஸ்ம் தியாகேந்திரன் வானத்திலிருந்து குதித்த வள்ளல் என்ற போர்வையில் கதை அளக்கின்றனர். இது பற்றி பயிற்சிபெற்ற மனித உரிமைக் காப்பாளர் செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி:
இச்சிறுவர் இல்லத்திலிருந்த பதின்ம வயதுச் சிறுமிகளை தியாகேந்திரன் ‘நான் அப்பா ஸ்தானத்தில் உள்ளவர்’, ‘அப்பா மாதிரி’ என்ற தோரணையில் அணைப்பது, மடியில் இருத்துவது, முத்தமிடுவது போன்ற சிலுமிசங்களை மேற்கொண்டதால் சிறுமிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரேயே தியாகி அறக்கட்டளையால் நடாத்தி வரப்பட்ட இல்லம் மூடப்பட்டுள்ளது.
வாமதேவன் தியாகேந்தரனுக்கு ஒன்றுவிட்ட ஒரு சகோதரர் உள்ளார். தியாகேந்தரனின் தாய் சொர்ணாம்பிகை யின் சகோதரி யோகசோதியின் மகன் குடுமி ஜெயா என்ற வெ ஜெயந்திரன். இவரும் இளம்பெண்களை வளைத்துப் போட்டு திருமணம் செய்தும் செய்யாமலும் கைகழுவிவிடுபவர். இவர் இதற்கு முன் திருமணம் செய்த – கூடி வாழ்ந்த பெண்களும் இவரைக்காட்டிலும் முப்பது வயதுவரை குறைந்தவவர்கள். அப்படி வாழும் போதே இவர் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமிகளை அணைப்பது, முத்தமிடுவது, மடியிலிருத்துவது என்று போய் கட்டிலுக்கும் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருந்தாலும் இரு சகோதரர்களுக்கும் இடையே மிக நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பிரபல்யம் தேடுவது, சுயபுலம்பல், இளம்பெண்கள் மீதான பரிவு கனிவு, அரசியல் நாட்டம் என்று பல ஒற்றுமைகள். இருவரது முகநூல்பக்கதிலுமே தங்களை நியாயப்படுத்துகின்ற வாசகங்களை குறிப்புகளைப் பதிவிட்டிருப்பார்கள்.
குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன் தற்போது சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ‘காமவிடுதி என அறியப்பட்ட ஜெயந்திரனின் லக்ஸ் ஹொட்டல் ஐக்கிய மக்கள் கட்சியின் அலுவலகமாக திறந்துவைக்கப்பட்ட போது அதில் வாமதேவன் தியாகேந்திரனையும் காணலாம்.
ஒரு காலத்தில் தமிழர்களின் காலாச்சாரத் தலைநகரம் என்று அறியப்பட்ட கல்வியின் மகுடம் என்று அறியப்பட்;ட யாழ்ப்பாணத்தில் தற்போது ஹொட்டலியர்கள் புகுந்து அதனை அந்தப்புரமாகவும், மது, மாது, போதை களியாட்ட கொட்டகையாகவும் மாற்றி வருகின்றனர். இவற்றை முன்னெடுப்பவர்கள் தான் கட்சிகளின் அமைப்பாளராக உள்ளனர். அல்லது முதலமைச்சர்களாக வரத் துடிக்கின்றனர். இன்னுமொருவர் யாழ்பாணத்தை தாருங்கோ என்கிறார். யாழ் பல்கலையின் கலைப்பீடத்திற்குள் ஆரம்பித்து இப்போது இந்த சுகர் டாடி கலாச்சாரம் எங்கும் பரவிக் கிடக்கின்றது. இளம்பெண்கள் இந்த சுகர் டாடிகள் விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.