23

23

யாழ்ப்பாணத்தின் கோடீஸ்வரர் தியாகி அறக்கட்டளை தியாகேந்திரனிடம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரன் இலங்கையின் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண காவல்துறை பிராந்தியத்தின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் காவல்நிலையத்துக்கு நேற்று(22) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இவர், பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும். எனவே, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரனின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் தொடர்பில் அலசி ஆராயும் தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

சுவிஸ் தொலைக்காட்சி: வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை அம்பலப்படுத்தியது!

வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை சுவிஸின் தேசியத் தொலைக்காட்சியான SRF “தமிழ்ப்புலிகளின் நன்கொடை ஊழல் : புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா?” என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டது. சில தினங்களுக்கு முன் யூன் 19, 2024 அன்று ஒளிபரப்பப்பட்ட 14 நிமிடங்கள் ஏழு விநாடிகள் நீண்ட இந்த ஆவணப்படத்தில் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் முக்கிய புள்ளிகள் மற்றும் துவாரகாவாகத் தோண்றுவதாக சொல்லப்படும் பெண்ணுடனான உரையாடல்கள் மற்றும் இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் பணத்தை இழந்து சிலரின் பதிவுகளும் ஒளிபரப்பப்பட்டது. தேசம்நெற் உட்பட தமிழ் சமூக வலைத்தளங்களில் நன்கு அலசி அம்பலப்படுத்தப்பட்ட வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை தற்போது ஐரோப்பிய நாடொன்றின் தேசியத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருப்பது இந்த மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

யாழில் ஆலய மகோற்சவத்தில் கைகலப்பு – ஆலய குருக்கள் மூவர் கைது !

யாழ்ப்பாணம்  வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர். அதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரணப்பாடு காணப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொந்தக்காலில் நிற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளோம் – பிள்ளையான்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை (22) மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களுக்கு சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் இங்கு தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுடன் இனப்பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்படும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்ததுடன், எதிர்வரும் 05 வருடங்களில் கிழக்கு மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு கொண்டு செல்லும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் அதேவேளையில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண நாம் பாடுபட வேண்டும். மேலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். கிழக்கு மாகாணம் வளர்ச்சி குறைந்த மாகாணமாகும். அடுத்த 05 வருடங்களிலும் கூட இந்த மாகாணத்தை அபிவிருத்தி குறைந்த மாகாணமாக கைவிட்டுவிட முடியாது. எனவே கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்போது மக்களின் வருமான நிலையை உயர்த்த வேண்டும்.

மேலும், நாட்டின் வளர்ச்சியடையாத ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுல்படுத்தி வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். மேலும் இப்பகுதிகளுக்கு புதிய தொழில்களையும், முதலீடுகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தால், புதிய நிலம் விளைச்சளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் பெருமளவு வருமானம் ஈட்ட முடியும். மேலும், இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். ஹிகுரக்கொட விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, தம்புள்ளை, அனுராதபுரம் ஆகிய பிரதேச மக்களும் நன்மையடைவார்கள். மட்டக்களப்பு விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். அந்த சவாலை வென்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். மேலும், இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, அதனை விரைவாக தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிக்கையில்,

‘’இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு நாளாகும். கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் தலைவிதியிலும் எதிர்கால அபிவிருத்தியிலும் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை.  எமது மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்படித் துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இந்த மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் இங்கு உள்ள வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அவர் இருக்கின்றார். அதனால்தான்  நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாகாண சபை மூலம் இயன்றளவு வழங்குவதுடன் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எதிர்காலத்தில் இந்த தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே அதற்கு அவசியமான சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு அவசியமான நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். நாம் அவற்றுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் நிர்மாணத்துறை, உற்பத்தித் துறை, விவசாய நவீனமயமாக்கல், மீன்படித்துறை,  தொழில்நுட்பத் துறை மற்றும் AI தொழிநுட்பம் போன்றவற்றை உயர் மட்டத்திற்கு  கொண்டு வரக்கூடிய ஆற்றல், அறிவு மற்றும் திட்டமிட்ட அடிப்படையில் பணியாற்றக்கூடிய தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். இவற்றை முன்னேற்றும் வேலைத்திட்டங்களை அமுலாக்கக் கூடிய நிர்வாக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தால்  மண்ணை நம்பி வாழும் கிழக்கு மாகாண மக்கள் நிச்சயமாக சொந்தக் காலில் நிற்பார்கள். எமது அழைப்பையேற்று எமது அலுவலகத்திற்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ‘’ என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதேவேளை, முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எஸ். வியாழேந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அங்கு கட்சி உறுப்பினர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார சாதக தன்மைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பெரும்பாலும் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை டெல்லியில் சந்தித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று முதலாவது விஜயமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் விசேட செய்தியுடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்தார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இராஜதந்திர வழிமுறைகளுக்கு அமைய சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், இரு தரப்பு கலந்துரையாடலுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கிடையில் மாத்திரம் பிரத்தியேகமான விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உத்தேச தேர்தல்கள் மற்றும் நாட்டின் அரசியல் – பொருளாதார ஸ்தீரதன்மைக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தேச ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணியின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வினாவியுள்ளார்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குறிய வகையில் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் பொது வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புடன், மேலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்க உள்ளார். இந்த அறிவிப்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில் உள்ள பன்னாட்டு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையை அறிவிக்க உள்ளார்.

இலங்கையின் கடன் மேலாண்மை வசதிகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்புகளுக்கு உறுதியளித்துள்ளன.

குறிப்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் இருநாட்களுக்குள் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த தகவலையும், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் நாடு அடைந்த பொருளாதார வெற்றிகளையும் நாட்டு மக்களுக்கு கூறவுள்ள ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.