30

30

ஆர் சம்பந்தன் காலமானார்: மரணம் யாரையும் மன்னிப்பதில்லை!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவருமான இரா சம்பந்தன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தனது 91வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என தன் நீண்ட அரசியல் பயணத்தைத் தொடர்ந்த இரா சம்பந்தன் இலங்கை அரசியலிலோ தமிழ் அரசியலிலோ ஒரு ஆளுமையாக உருவாகவில்லை. அ அமிர்தலிங்கத்தின் மரணமும் வி ஆனந்தசங்கரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடும் அவரைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பன்முக அரசியல் தன்மையைக் காட்ட வெளிப்படுத்திய முகம் தான் இரா சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானது. எஸ் ஜெ வி செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் வரிசையில் அடுத்து வந்த இரா சம்பந்தன் தமிழ் அரசியல் வரலாற்றில் போராடாத தோற்றுப் போன ஒரு தலைவராகவே பார்க்கப்படுவார். அவருடைய மரணத்துடன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் தமிழரசுக் கட்சியும் மரணத்தைத் தழுவும் வாய்ப்பே நிறைய உள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் (30) இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் ”எமக்கு சர்வதேச நீதியே வேண்டும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு வேண்டாம், கையில் கொடுத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் எதற்கு, நாம் இழப்பீட்டை கோரவில்லை, கையில் தந்த எமது சிறுவர்கள் எங்கே” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனீற்றா , “எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது.

சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு தேவையில்லை எனக் கூறிய போதும் அதனை இரகசியமாக எமது பகுதிகளில் நிறுவியுள்ளார்கள். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கிராம அலுவலர் ஊடக ஓ.எம்.பி அலுவலகத்தின் வேலைகளை முன்னெடுத்துள்ளார். வாழ்வாதார உதவிகளை வழங்கி எமது போராட்டத்தை மழுங்கடிக்க முற்படுகிறார்கள். இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும். எமக்கு நீதி வேண்டும். உயிர் உள்ளவரை நீதிக்காக நாம் போராடுவோம்” என தெரிவித்தார்.

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2024 – கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் சாதனை !

கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டது. குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் யூன் 28 இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளி விவேகானந்தா வித்தியாலயமும் லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையமும் சமகாலத்தில் தங்கள் பயணத்தை ஆரம்பித்ததுடன் நெருக்கமான உறவையும் பேணி வருகின்றன. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளி விவேகானந்தாவில் கல்வி கற்பவர்கள். கல்வி கற்றவர்கள். 2023 சிவஜோதி ஞாபகார்த்த விருது கிளி விவேகானந்தா வித்தியாலயத்திக் அதிபர் ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய கல்விச்சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டதுடன் அவர்களுடைய ‘இனியம்’ இசைக்குழவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த 1,50,000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளவிய ரீதியில் பாடசாலைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் என 902 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பாடசாலை சுற்று சூழல் அமைச்சின் இரண்டு சுற்றுச் சூழல் விருதினை பெற்றுள்ளதோடு, சுற்றுச் சூழல் தகவல் நிலையத்தினையும் பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் Green & Clean School 2017 விருதினை இலங்கையின் 5 பாடசாலைகளே பெற்றிருந்தன. அந்த விருதையும் வென்ற ஒரே ஒரு தமிழ் பாடசாலை கிளி விவேகானந்தா வித்தியாலயம்.

“என்னைப் பார்த்து இந்த பாடசாலையை ஆரம்பிப்பது தேவையற்ற விடயம் பயனில்லாததது என்றார்கள். அப்போது நாம் நம்பிக்கையுடன் நகர்ந்தோம். அதன் விளைவு நாம் பெறுபேறுகள் சார்ந்தும் சமூக மாற்றம் தொடர்பிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல சாதனைகளையும் எமது பாடசாலை பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இப்படியாக பல துறைகளில் நமது பாடசாலை நிமிர்ந்துள்ளது. எனக்கு இன்னுமொரு பாடசாலைக்கு இடமாற்றம் தந்தால் எந்த ஓர் கிராமத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே நான் தெரிவு செய்வேன்” எனக் கூறியவர் ஜெயா மாணிக்கவாசகன். லிற்றில் எய்ட் விருதைப் ஏற்று வழங்கிய சிற்றுரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.

கிளி விவேகானந்தா வித்தியாலயம் பற்றி லண்டனில் வதியும் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் வருமாறு குறிப்பிடுகின்றார்: “பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளில் அங்கு சென்றிருந்தேன். ஒரு கைவிடப்பட்ட வெளியில் அகோர வெய்யிலில் பாடசாலை இருந்தது. தோற்றத்தில் ஏனைய பாடசாலைகளிலிருந்து வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் அப்போது அங்கு கற்பவர்கள் பெரும்பாலும் மலையகத்தைப் பின்புலமாகக் கொண்டவர்களாக இருந்தனர். கல்வி விழிப்புணர்வு உடைய பெற்றோரின் பிள்ளைகளாக அவர்களில்லை. ஆனாலும் வடமாகாணத்திலேயே கணிதத்தில் 100 வீதம் சித்தியை அன்றே பெற்றுச் சாதனை படைத்தது அப்பாடசாலை. பத்து ஆண்டுகள் கழிந்து 2022இல் மீண்டும் அப்பாடசாலைக்குச் சென்றேன். பாடசாலை வளாகமே குளிரூட்டப்பட்டிருந்தது. ஏசி பூட்டப்பட்டல்ல. கடந்த பத்து ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்களால் சோலையாக பசுமையாக இருந்தது. மழை நீர் சேகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, அரிய மூலிகை வளர்ப்பு, விளையாட்டுத்துறை எனப் பாடசாலை வளர்ச்சி பிரமிக்க வைத்தது. ஐரோப்பிய நாட்டுப் பாடசாலைகளைக் காட்டிலும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி அதன் பலனையும் வெளிப்படுத்தி நின்றது அப்பாடசாலை. இவையெதுவுமே வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கத்தின் உதவியால் நிகழவில்லை. நடுத்தர வர்க்க, கூலித் தொழிலாளிகளான பெற்றோர் அவர்களின் பிள்ளைகளான மாணவர்களினால் மட்டுமே நிகழ்ந்தது. ஒவ்வொரு அதிபரும் ஜெயா மாணிக்கவாசகனானால் தமிழ் பிரதேசங்களில் கல்விப் புரட்சியொன்றே நிகழ்ந்துவிடும்” என்றார் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன்.

2011 ஆம் ஆண்டு அன்றைய பாராளுமன்ற உறுப்பின மு சந்திரகுமாரினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட கிளி விவேகானந்தா வித்தியாலயம் அதிபர் ஜெயா மாணிக்கவாசகனின் தலைமையில் மிக குறுகிய காலத்திற்குள் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய மட்டத்தில் சாதனை புரியும் அளவில் வளர்ந்துள்ளமை கிளிநொச்சி மண்ணுக்கே கிடைத்துள்ள பெருமையாக கொள்ளப்படுகின்றது.

 

பாரிய போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படை வீரர்கள் உதவி !

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (30) கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு ஆகியோர் உள்ளனர் – சிறீதரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு செல்வது எனது வீட்டின் கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது. எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.