July

July

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை !

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

மேலும் 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன நிலையில் இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை செய்யப் பட்டதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தகைய செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 250 ஐ தாண்டியது!

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 251-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும்.

சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.

மாநில மக்களிடத்தில் உணர்ச்சிமிகு அழைப்பு விடுத்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 2018 வெள்ளப் பேரழிவின் பின்னர் காட்டிய ஒருமைப்பாட்டை மீண்டும் பயன்படுத்தி, வாழ்வாதாரங்களை புனரமைக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டார்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவை வலியுறுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 வெள்ளங்களை நினைவுகூர்ந்து, பொதுமக்களும், நிர்வாகமும் இணைந்து செயல்பட்டதில் கிடைத்த சாதனையை மீண்டும் பெறும் நோக்குடன், கேரள முதல்வர் விஜயன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பாடசாலை மீது தாக்குதல் நடாத்திய இஸ்ரேல் – 30 பேர் பலி !

இஸ்ரேல் மற்றும் காஸா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பாடசாலையில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள போது , இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது – அநுரகுமார திசாநாயக்க

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக” தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “நாட்டில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி பிரதமர் நாடாளுமன்றில் கருத்துரைக்கின்றார்.

 

அதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுவாராயின் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

சபாநாயகரும் உயர்நீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

 

இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை முறைமை ஒன்று இல்லை. இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் உயர்நீதிமன்றம் பங்குபற்றாமல் உள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

 

பொலிஸாரை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைகின்றார். அதற்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவருக்கு மிகவும் தேவையாகவுள்ளது. இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம் அல்ல! – தம்பாபிள்ளை மகேஸ்வரன் ஒரு சாகசக்காரன் !

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம் அல்ல! – தம்பாபிள்ளை மகேஸ்வரன் ஒரு சாகசக்காரன்

சிறீரங்கன் விஜயரட்ணம் அவர்களுடனான தேசம் திரை நேர்காணல்.

 

ராஜபக்ஷக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்.. – வெளியானது புதிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ஷ சிறந்ததொரு தலைவராவார்.

 

ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.

 

அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ஷ ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.

 

ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம்;.

நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ஷ தான் பிரதமராக பதவியேற்பார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன.அவரால் தொடர்ந்தும் ராஜபக்ஷவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

 

அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

 

பாடசாலைகளுக்கு உதவிகள் வழங்கும் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

 

ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் திட்டங்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதித்த போதிலும்,

சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரபஞ்சம் திட்டத்தில் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

 

பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 

இதேவேளை மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

ஊழல் அமைச்சரவையில் ஆரம்பிக்கிறது! ஒரு டொக்டர் அர்ச்சுனாவால் முடியாது!! ஆட்சி மாற்றம் வேண்டும்!!! அருண் ஹேமச்சந்திரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி தொடர்பான நேர் – எதிர்மறையான கருத்துக்கள் வேகமாக பரவி வரும் நிலையில் இது தொடர்பான கருத்துக்களை ஜே.வி.பி கட்சியினுடைய திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரவுடன் கலந்துரையாடுகிறது தேசம்திரை.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

நாமல் ராஜபக்ச மீது பொலிஸில் முறைப்பாடு செய்த அமைச்சர் பந்துல குணவர்தன !

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி நாமல் ராஜபக்ஷ ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் இது போன்ற விஷயங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது

 

மேலும் இந்த தொகுதிக் குழுக் கூட்டத்தில் ஹோமாகம உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சிறு குழுவினர் பங்கேற்றுள்ளதாகவும், நாமல் ராஜபக்ஷ, காமினி லோககே, திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு எடுக்கும் அரசியல் தீர்மானத்தை இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.