யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்;திருந்தார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி அதற்குப் பின் 2023 இல் இன்னுமொரு குற்றச்சாட்டையும் டொக்டர் வி நாகநாதன் மீது எழுப்பியிருந்தார். டொக்டர் வி நாகநாதன், தனது முகநூலில் தங்களுடைய ஸ்தாபனப் பணிக்கோவைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அக்கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனுக்கு எதிராக பனிப்போர் தொடுக்க என்ன காரணம்? இதற்குப் பின்னாலும் ஒரு மோசடி அம்பலப்படுத்தப்பட்டது காரணமாக இருந்துள்ளது. டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனை தற்காலிகமாக இடைநிறுத்தி அவரது சம்பளமும் நிறுத்தப்பட்ட ஓகஸ்ட் 2017க்கு ஆறு மாதங்கள் முன்பாக பெப்ரவரி 2017இல் “கைபடாத என்டஸ்கோபி இயந்திரம்: கன்னி கழிவது எப்போது” என்ற யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடியை அம்பலப்படுத்தும் அகரன் என்பவர் எழுதிய கட்டுரை புதுவிதி என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அக்காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்தவர் இன்றும் அதே பதவியில் இருப்பவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இந்த ஊழல் குற்றச்சாட்டுக் கட்டுரை பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தியை வெகுவாகப் பாதித்திருக்கும் என்பது பொதுப்புத்திக்கு தெரிந்த விடயம். “இக்கட்டுரையை அகரன் என்ற பெயரில் எழுதியது புலனாய்வு ஊடகவியலிலும் தேர்ச்சி பெற்ற டொக்டர் வி நாகநாதன் அல்லது இவர் இக்கட்டுரைக்கான தகவலை அகரன் என்ற புனைப்பெயரில் எழுதியவருக்கு வழங்கியிருக்கு வேண்டும்” என்ற எண்ணப்பாடு அங்கு இருந்து என்கிறார் டொக்டர் வி நாகநாதன். ஆனால் அவர் அதனைத் தான் எழுதியதாகவோ அல்லது அதற்கான தகவல்களை வழங்கியதாகவோ குறிப்பிட மறுத்துவிட்டார். இந்தப் பின்னணியிலேயே டொக்டர் விநாகநாதன் சக மருத்துவர்களோடும் சக மருத்துவப் பணியாளர்களோடும் தகாதமுறையில் நடப்பதாகவும் இவருக்கு மனநோய் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பணிப்பாளர் த சத்தியமூர்த்தி இவரைத் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியதுடன் அவருடைய சம்பளத்தையும் எவ்வித மனிதாபிமானமும் காட்டாமல் நிறுத்தியுள்ளார்.
டொக்டர் த சத்தியமூர்த்தியால் வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீண்ட போராட்டத்தினூடாக வெற்றிகொண்ட டொக்டர் வி நாகநாதன் மருத்துவத்துறையில் யாழ் வைத்தியசாலையில் கட்டமைப்பு ரீதியான (பழிவாங்கல்கள்) செயல்கள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டினார். இன்றும் இக்குற்றச்சாட்டுக்களை வைத்துவிட்டு அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிக்குத் திரும்புகின்றார். டொக்டர் த சத்தியமூர்த்தியின் நிர்வாகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் – பணியில் உள்ளவர்கள் ஒரு நச்சுச் சூழலிலேயே பணியாற்றுவதாக தெரிகின்றது. தானோ சத்தியமூர்த்தியோ ‘ஒரு குட் மோர்னிங்’ கூடப் பரிமாறிக்கொண்ட ஞாபகம் தனக்கில்லை என்கிறார் டொக்டர் வி நாகநாதன்.
பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுகளை டொக்டர் வி நாகநாதன் மீது மட்டும் எழுப்பவில்லை. இவ்வாண்டு ஏப்ரலில் டொக்டர் என் ஜெயகுமரன் தொழில்முறை தவறி தன்னால் சிகிச்சை அளிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிகளை யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாக டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றம்சாட்டி கடிதம் அனுப்பி இருந்தார். பொது அறிவின் அடிப்படையில் மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமான யாழ் நோயாளிகள் தொடர்ந்தும் மகரகம சென்று செக்அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் அலைக்கழியாமல் அந்தச் செக்அப்பை யாழிலேயே செய்ய முடியும். ஆனால் அதனைச் செய்யாமல் டொக்டர் ஜெயக்குமரன் மீது குற்றம்சுமத்தி த சத்தியமூர்த்தி கடிதம் எழுதியது ஏன்? என்ற கேள்வி அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்படவில்லை. த சத்தியமூர்த்தியும் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. “எனது கடமையைச் செய்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது எனது பொறுப்பல்ல என்ற வகையிலேயே அப்பதில் அமைந்தது.
டொக்டர் அர்ச்சுனா எய்த அம்பில் சிக்கிய டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் பிரணவன் வரிசையில் டொக்டர் த சத்தியமூர்த்தி தொடர்ந்தும் பலரினால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றார். முள்ளிவாய்க்கால் முடிவுவரை மருத்துவப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இவர் மனித உரிமைக் கவுன்சிலில் அரசுக்கு சாதகமாக சாட்சியமளித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை யாரும் ஒரு தவறாகக் கருதவில்லை. தொடர்ந்தும் அவர் மக்களுக்கு சேவை வழங்க வந்திருப்பதை பலரும் வரவேற்றனர். அதன் காரணமாக இன்னும் பலருக்கும் டொக்டர் த சத்தியமூர்த்தி மீது ஒரு மென்போக்கு உள்ளது.
டொக்டர் என் ஜெயக்குமரன் யாழ் போதனா வைத்தியசாலையில், இடம்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே அவர் குடும்பத்தின் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, குடும்பத்துடனேயே யாழில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓட நிர்ப்பந்திக்கப்பட்டார், இச்சம்பவம் டொக்டர் பவானி பணிப்பாளராக இருந்த போது அவரின் பின்னணியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. 2012 இல் இடம்பெற்ற அச்சம்பவத்திற்கும் டொக்டர் பவானிக்குப் பின் 2015இல் பணிப்பாளராக பொறுப்பேற்ற டொக்டர் த சத்தியமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. டொக்டர் ஜெயகுமரனுக்கும், டொக்டர் சத்தியமூர்த்திக்கும் எவ்வித முன் விரோதமும் இல்லை. அப்படியிருந்தும் டொக்டர் த சத்தியமூர்த்தி எதற்காக டொக்டர் என் ஜெயகுமரனைக் குற்றம்சாட்டி அக்கடிதத்தை ஏப்ரல் 2024இல் எழுதினார். டொக்டர் த சத்தியமூர்த்தி அப்பாவி ‘அம்பியா ?’மாபியா கும்பலைத் திருப்திப்படுத்த அந்த முறையற்ற கடிதம் அனுப்பப்பட்டதா? இல்லை அவர் ‘அந்நியனா’ அவரும் மாபியா கும்பலின் பிரதிநிதியா?
டொக்டர் த சத்தியமூர்த்தி யாழ் சைவ வேளாள மேட்டுக்குடியைச் சேர்ந்தவரல்ல. யாழ் போதனா வைத்தியசாலைக்கு இவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதில் யாழ் சைவ வேளாள மேட்டுக்குடிக்கு எப்போதும் ஒரு புகைச்சல் இருந்துள்ளது. இன்றும் இப்புகைச்சல் இருக்கின்றது. கிளிநொச்சியில் வாழ்ந்த மலையகப் பின்புலத்தைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து மேலெழுந்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. அவர் பணிப்பாளராகப் பொறுப்பேற்றதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சாதகமான பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவ்வாறான பல குற்றச்சாட்டுகளில் கை படாத என்டோஸ்கோபி இயந்திரம், கன்னி கழியாது சில ஆண்டுகள் அங்கு இருந்ததும் ஒன்று.
யாழில் பரீட்சை எடுத்து மருத்துவம் கற்கும் யாழ் மருத்துவ மாணவர்கள், ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து மருத்துவம் கற்க வருகின்ற மாணவர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத டொக்டர். ஏனைய தமிழ் மாவட்டங்களில் மருத்துவத்துறைக்கான வெட்டுப்புள்ளி யாழ் மாவட்டத்தைவிட குறைவாக இருப்பதால் அவர்கள் பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகம் புகுந்தகாலம் முதல் நையப்புடைக்கப்பட்டு இரண்டாம் தரமானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் மருத்துவர்களாகி பதவிகளைப் பொறுப்பேற்றாலும் இந்தப் பேதமை அவர்களின் ஆழ்மனங்களில் இருக்கின்றது என்றும் அந்த வன்னி டொக்டர் தெரிவிக்கின்றார். அப்படி இருக்கையில் கிளிநொச்சியிலிருந்து மலையகப் பின்னணியோடு மருத்துவரான த சத்தியமூர்த்தி தன்னுடைய பதவியைத் தக்க வைப்பதென்பதே மிகுந்த நெருக்கடியானது.
நிலைமை இப்படி இருக்கையில், டொக்டர் த சத்தியமூர்த்தி அங்கிருந்து யாழ் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதனையும் எடுத்திருக்க முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் தான் அடைந்த அந்த முக்கிய பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் யாராக இருந்தாலும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் டொக்டர் த சத்தியமூர்தி அங்கு வெளித்தெரியாத மருத்துவ மாபியாக்களின் சூழ்நிலைக் கைதியாக ஒரு ‘அம்பி’யாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் டொக்டர் த சத்தியமூர்த்தியும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டு அதற்கு அடிமைப்பட்டு அவரும் ஒரு ‘அந்நியனாக’ மருத்துவ மாபியாக்களில் ஒருவராக மாறியிருக்கலாம். டான் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டது போல் “நான் எனது கடமையைச் செய்கிறேன். வரும் குற்றச்சாட்டுகள் பற்றி அக்கறையில்லை” என்று தொடர்ந்தும் தத்துவம் பேச முடியாது. வடக்கில் உள்ள பதினைந்து லட்சம் வரையான மக்களின் மருத்துவம் உயிர்வாழ்வு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக த சத்தியமூர்த்தியின் முடிவுகளில் உள்ளது. அவர் வடக்கு தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார். 2015 முதல் அவர் சம்பாதித்த அசையும் அசையாச் சொத்துக்களை வெளிப்படுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2015 முதல் என்ன நடந்தது என்று சத்தியம் பேச வெண்டும்.
கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும், வடக்குக்கு பொறுப்பான அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் புறம்தள்ளப்பட்டு அமைச்சராக இருந்தாலும் மக்களால் அணுகக் கூடிய ஒருவராக டக்ளஸ் தேவானந்த பார்க்கப்படுகின்றார். யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய அபிவிருத்திச் சங்கமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது. இவர்களோடு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்கு இன்று தெரிவிக்கையில், “டொக்டர் த சத்தியமூர்த்தியின் கைகளும் சுத்தமான கைகள் அல்ல. ஆனால் அங்கு பணிப்பாளர் பொறுப்பை ஏற்பதற்கு அவரிலும் பார்க்க மோசமானவர்களே உள்ளனர்” எனத் தெரிவித்தார். தாங்கள் டொக்டர் த சத்தியமூரத்தியை பணிப்பாளர் பதவியிலிருந்து இறக்குவதற்கு கோரியதாக குறிப்பிட்ட சமூக செயற்பாட்டாளர், அதனால் தான் தாங்கள் அவரை மகாணப் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
டொக்டர் சத்தியமூர்த்தியின் தொழில்முறைக்கு முரணாண செயற்பாடுகள், தனிப்பட்ட பழிவாங்கள்கள் தொடர்பில் GMOA – ஜிஎம்ஓஏ டொக்டர் மதிவாணன் 30 வரையான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார். இந்த விசாரணை தொடர்பிலேயே வெளிநாட்டில் கற்கைகளுக்காகச் சென்றிருந்த த சத்தியமூர்த்தி கற்கையை இடைநிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார். டொக்டர் அர்ச்சுனா பதவியை பொறுப்பேற்க முன்னமே அவரை யாழில் இருந்து விரட்ட விடாமுயற்சி எடுத்த ஜிஎம்ஓஏ, இறுதியில் அர்ச்சுனாவை வெளியேற்றும்வரை தென்மராட்சி மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால் டொக்டர் த சத்தியமூர்த்தி விடயத்தில் அவரைக் குற்றம்சாட்டுகின்ற அந்த அறிக்கை வெளியே வராமலேயே மூடி மறைக்கப்பட்டது. இந்த அறிக்கை மருத்துவ மாபியாக்கள் டொக்டர் த சத்தியமூர்த்தியை சூழ்நிலைக் கைதியாக்கும் ஆயதமா? என்ற கேள்வி எழுப்பப்படாமலிருக்க வாய்ப்பில்லை.
கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 25 டொக்டர் வி நாகநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியா உல் ஹஸனுடன் மேற்கொண்ட உரையாடல் மருத்துவத்துறையை குறிப்பாக மருத்துவ மாபியாக்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. டொக்டர் வி நாகநாதன் மேலும் தெரிவிக்கையில் சிறுநீரக மாபியாக்கள், கருவள மாபியாக்கள் எனப் பல்வேறு ஊழல்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களை வெளியிடுவது தனது உயிருக்கும் ஆபத்தாக முடியும் என்கிறார் டொக்டர் வி நாகநாதன். வரும்நாட்கள் அவருடைய பணிக்கும் உயிருக்கும் சவாலாக அமையுமா? என்பதை காலம்குறித்துக்கொள்ளும்.
தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: த சித்தார்த்தன், எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், செ அடைக்கலநாதன், செ கஜேந்திரன், இவர்களின் அடிப்பொடிகள் தேசியம் பேசாதவர்கள்: ரா அங்கஜன் அவர் அடிப்பொடிகள், இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ரமேஸ் பத்திரண சென்று மக்களின் குறைகளை விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்குக் காரணம் டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் ராஜீவ் போன்றவர்கள் இவர்களுக்குக் கொடுத்த அழுத்தம். இவர்களோடு மலையகப் பெண்களுக்கு குளியல் அறையை மறுத்து அவர்கள் வெளியே நீராடுவதை சிசிரிவியில் பதிவுசெய்து அச்சிறுமிகளை துன்புறுத்திய ஆறு திருமுருகன் நெருங்கிய நட்பிலும் உள்ளார். அண்மையில் அபயம் என்ற அறக்கட்டளை மேலுமொரு ஸ்கானிங் மெசினை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.
மேற்குறிப்பிட்டவர்களுடைய பிறந்த தினங்களில் பாராட்டு நிகழ்வுகளில் ஆளுக்கு ஆளாள் துதிபாடும் ஆறுதிருமுருகன் தனது பெயருக்கு வெள்ளையடிக்க அந்த ஸ்கானிங் மெசின் வழங்கப்பட்ட புகைப்படத்திலும் தன்னைச் செருகிக் கொண்டார். ஆனால் அந்த மெசினை வாங்கிக்கொடுத் கொடைவள்ளல் அங்கில்லை. இந்த ஸ்கானிங் மெசினில் யாருடைய கையாவதுபடுமா? அல்லது அதுவும் என்டோஸ்கோபி மற்றும் சாவகச்சேரியில் உள்ள மெசி;ன்கள் போல் மூடிக்கட்டி வைக்கப்படுமா என்பதை காலம் தெளிவாகச் சொல்லும். வழித்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு அதனை பொறுக்கிக்கொண்டு சென்று விற்கும் மாபியாக்கள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்க கள்ள உறுதி முடிப்பதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்ட குமாரவடிவேல் குருபரன் தலைமையிலான அப்புக்காத்துக்கள் பைலும் கையுமாகச் சுற்றுகிறார்கள். தமிழ் தேசியத்தை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியுமா?