07

07

யாழில் மெடிக்கல் மாஃபியாக்களுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் – டொக்டர் அர்ச்சுனனுக்கு ஆதரவாக திரளும் மக்கள்!

யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!

“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரசு மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர், இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பேர் பெற்றுக்கொண்டுள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் அரசு மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப் பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்குச் சேவை வழங்கிய டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொளியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்க்க வேண்டும்” – அங்கஜன் – “வைத்தியர் அர்ச்சுனாவே பிரச்சினைகளுக்கு காரணம் ” – என்கிறார் கஜேந்திரன்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியைப் பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்.

வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாததாலும், அதற்கான மின்பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் அறிய முடிந்தது.

இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தையும் உணர்ந்து, இவ்விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும் வரை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க அன்பர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

இதனூடாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டுவந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்கமுடியும் என கருதுகிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 06 ஜுலை 2024 தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடயம் தொடர்பில் பேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் குறிப்பிடும்போது , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைக்கு காரணமாக புதிதாக வந்துள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனே காரணம் என்பதால் அவருக்கு பதவி இடமாற்றம் வழங்கி இயல்புநிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை ஆளுநரிடம் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கள தேசம் யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்கும் தேசம் கிடையாது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று (05) காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் இடையேயான கலந்துரையாடல் அமர்வொன்றும் இடம்பெற்றது.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

 

“இன்று நாம் பொருளாதாரத்தில் வெகுதூரம் வந்துவிட்டோம். அன்று ஜெட்விங் ஹோட்டலில் இருந்து இந்த காலிமுகத்திடல் ஹோட்டல்வரை என்ன நடந்தது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பயணத்தில் எனது வீடும் எரிந்து நாசமானது. இன்று ஓரளவு முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். ஆனால் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாக்காவிட்டால், பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாது என்பதை நான் அப்போதே தெளிவாகக் கூறியிருந்தேன். வங்கிக் கட்டமைப்பு சீர்குலைந்தால், பொருளாதாரமும் நிலைகுலைந்துவிடும்.

அன்று நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பணியை ஆரம்பித்தோம். இன்று அதன் பெறுபேறுகள் கிடைக்கின்றன. அனைத்துப் பலன்களும் ஒரே தடவையில் கிட்டிவிடாது.

 

வௌிநாட்டுக் கடன்களை செலுத்த 4 வருடகால அவகாசம் கிடைத்துள்ளதோடு, மீள் செலுத்துகை தொகையிலிருந்து 8 பில்லியன் டொலர் கடன் தொகையை தள்ளுபடி செய்யவும் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது நாம் ஒரு நாடாக ஒரு மைல்கல் இலக்கை அடைந்துள்ளோம். எமக்கு 8 பில்லியன் டொலர் கடன் நிவாரணம் கிடைத்துள்ளதால், புதிய பொருளாதாரத்திற்கு செல்வதற்கான சுதந்திரமான சூழல் உருவாகியுள்ளது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்.

 

நாம் இங்கிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்குள் வங்கிக் கட்டமைப்பின் வகிபாகம் முக்கியமானது. இதற்கான பணத்தை எவ்வாறு தேடப் போகிறோம்? வௌிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வங்கிகள் செழிப்படையும். இந்த இலக்கை நாம் இன்னும் அடையவில்லை.

 

சரிவடைந்த பொருளாதாரத்தை நாம் சரிசெய்து முன்னோக்கிச் சென்றாலும், சீர்குலைந்த அரசியல் கட்டமைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. அன்று சில தலைவர்கள பயந்தோடினர். அதனால் இந்த நாட்டில் அரசியல் தலைமைத்துவம் எவ்வாறானது என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய தலைவர்களால் நாட்டை முன்னேற்ற முடியுமா? நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாததன் காரணமாகவே அன்று அவர்கள் பயந்தோடினர்.

 

முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் நாட்டின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஆட்டம் கண்டது. சிலர் என்னை பிரதமர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். அவ்வாறான அரசியல் முறையுடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. நாட்டின் பொருளாதார மாற்ற சட்டமூலத்தை நாம் சமர்பித்த வேளையில் அதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வழக்குத் தாக்கல் செய்தார்.

“இறக்குமதி அடிப்படையிலான பொருளாதாரம் தேவை” என்று அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்றும் இறக்குமதிப் பொருளாதாரத்தை மையமாக கொண்டு செயற்படுவதாலேயே பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்.

 

இன்னும் சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானைப் பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். அதேபோல் மற்றும் சிலர், உலகம் முழுவதும் சென்று தலைவர்களிடம் பணம் கேட்கச் செல்கிறார்கள். நான் யாசகன் அல்ல. சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல. மேலும் சிலர் இறக்குமதி சார்ந்த பொருளாதாரம் தொடர்பில் பல விடயங்களை கூறுகிறார்கள்.

 

“சர்வதேச நாணய நிதியம் வேண்டாம் என்று கூறியபோதும் பொருளாதார நெருக்கடி இருப்பதை கருத்தில் கொள்ளாமல் எதற்காக வரிகளை குறைத்தீர்கள்” என ஒருநாள் நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டேன், தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாகவே அதனைச் செய்ததாகக் கூறினார். அவர் சொன்னதுதான் உண்மை. அதனை நானும் அறிவேன். நீங்கள் ஏன் வரியைக் குறைக்கவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்களை இன்று தேடிக்கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 

நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும். கனவுலகில் இருப்பது நல்லதல்ல. உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய நடவடிக்கைகளே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும். நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம். புதிய அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு உண்மை நிலவரத்தை அச்சமின்றி பேசக்கூடியவர்களையும் உருவாக்க வேண்டும். இல்வாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது.

 

நாம் எப்போதும் உண்மையைச் சொல்வோம். அரசியலில் உண்மையைச் சொல்ல அச்சப்பட வேண்டாம். அனைத்து கட்சியினரையும் ஒன்றிணைத்துதான் இந்த அரசாங்கத்தை நடத்தினேன். சில கட்சிகளில் ஒழுக்கம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்துக்குள் ஒழுக்கம் உள்ளது. அதனால் அச்சமின்றி எம்மோடு இணைந்துகொள்ளுங்கள். பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் எம்முடன் இணைந்துள்ளனர். இன்று நாம் பொருளாதாரத்தை தயார் செய்துள்ள நிலைக்கு அரசியல் முறைமை வரவில்லை. அது பற்றிய சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியில்லாத கடன் – இலங்கை கல்வி அமைச்சு

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 08 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

 

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இந்தக் கடன் திட்டத்தின் எட்டாவது தொகுதியாக உள்வாங்கப்படவுள்ளதுடன், அது தொடர்பில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவுள்ள உத்தேச கற்கைநெறிகள் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்ற மகிந்த ராசபக்சவும் பொதுஜன பெரமுனவும் ஆதரவு வழங்கினர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

நாடு நெருக்கடியை எதிர்நோக்கி சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய போது பதில் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றேன்.அதன்பின்னர் நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவது தொடர்பாக சிந்தித்தேன்.

அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. சஜித்திடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அனுரகுமாரவும் அப்போது எதனையும் தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆதரவு கோரியிருந்தேன்.

அதன்பின்னர் கட்சி தரப்பினரும் கலந்துரையாடி பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எனது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அதன்பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றிலும் பொதுஜன பெரமுனவினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களின் ஒத்துழைப்பினால் தடையின்றி என்னால் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.

 

இரா சம்பந்தனின் பூதவுடலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி!

மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் இடம்பெற்ற  நிலையில், சம்பந்தனின் வீட்டுக்குச் சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.