09

09

திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று பதவிப்பிரமாணம்!

திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.

2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், 2020 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு , சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயத்தினை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது,

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜீன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில், பெண் நோயியல் பிரிவு, சந்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை செயற்படுத்தியுள்ளார்.

மேலும், சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதேபோன்று, குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மருந்துப் பொருட்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றி, தரையில் போடப்பட்டிருந்ததுடன், குறித்த வைத்தியசாலையில் 22 வைத்தியர்கள் கடமையாற்றி வந்ததுடன், அவர்களுள் பெரும்பாலானவர்கள், மாதத்தில் 10 நாட்கள் மாத்திரமே வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளனர்.

இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு வைத்திய அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள், அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொது மக்கள் பாரிய போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

எனவே, குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலை நிறுத்தம் செய்யும் அரச ஊழியர்களினா சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் வெட் வரியை 20 வீதம் முதல் 21 வீதம்வரை அதிகரிக்க நேரிடும் – மஹிந்த சிறிவர்தன

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், வெட் வரியை 20 வீதம் முதல் 21 வீதம்வரை அதிகரிக்க நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போது அரசுக்கு இருக்கும் செலவீனத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 140 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இருபதாயிரம் ரூபாயால் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த வருமானத்தைப் பெறுவதற்காக தற்போதைய வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரிக்க, வெட் வரி 2 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 3 வீதத்திற்கும் மேல் வெட் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது அதை செய்ய இயலாது எனவும் ஏற்கனவே வெட் வரி 18 வீத உச்ச அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் முன்பு போன்று மத்திய வங்கியினால் பணம் அச்சிட முடியாது என சுட்டிக்காட்டிய திறைசேரி செயலாளர், அவ்வாறு செய்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை வெற்றிககரமாக முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் இங்கு கருத்துத் தெரிவித்ததோடு, அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிப்பது கடினமான பணியாக இருந்தாலும், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையினை அளிக்க விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

மெடிக்கல் மாஃபியாக்களின் கைகளில் மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சாவிகள்..? – மக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாத இலங்கை சுகாதார அமைச்சு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் நேற்று பாரிய போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா சுகவீன விடுமுறை என தெரிவித்து கொழும்புக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா;  யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் குற்றங்களையும் – ஊழல்களையும் – தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்த நிலை பற்றியும் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே பதவி நீக்கப்பட்ட நிலையில் குறித்த குற்றங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதே வேளை இன்று புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் ஏற்கனவே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தவராவார்.

இவ்வாறான நிலையில் யார் மீது குற்றஞ்சுமத்தி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தன் மக்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்தாரோ அதே குற்றவாளிகளின் கைகளுக்கே மீளவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சென்றுள்ளதா என்ற ஐயம் பல தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இலங்கை மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக கல்வி கற்று வைத்தியர்கள் ஆகும் மருத்துவர்கள் அந்த மக்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இத்தனை இழுபறிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலேயே இந்த நிலை என்றால் ஆ.கேதீஸ்வரன் போன்ற மருத்துவர்கள் பிரதானமாக இயங்கும் யாழ்ப்பாண வைத்தியசாலையின் நிலை ..? அங்கு நடக்கும் ஊழல்கள் குறித்து யார் பேசுவார்கள் போன்ற விடயங்கள் சிந்திக்க வைக்கின்றன.

இலங்கை சுகாதார அமைச்சு விரைந்து ஊழல் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து தரமான சேவையை எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். மக்கள் இலவச மருத்துவத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது இலங்கை சுகாதார அமைச்சின் முக்கியமான பணியுமாகும்.

 

யாழ் – GMOA , தமிழ் மெடிக்கல் மாபியாக்களின் கையிலா ? யாழ் GMOA , ஏன் டொக்டர் அர்ச்சுனாவை விரட்டியது ?

யாழ் – GMOA , தமிழ் மெடிக்கல் மாபியாக்களின் கையிலா ? யாழ் GMOA , ஏன் டொக்டர் அர்ச்சுனாவை விரட்டியது ?

தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!