11

11

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கி நிதி திரட்டும் ஆளுந்தரப்பு !

நாட்டில் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுகமாக நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சு மேற்கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 1,028 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

2024 மே 10 ஆம் திகதிக்குள் சுமார் 1,028 மதுக்கடைகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 30 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் 10 மில்லியனும் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் 20 மில்லியனும் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 137 அனுமதிப்பத்திரங்களும், கம்பஹா மாவட்டத்தில் 128 அனுமதிப்பத்திரங்களும், ஹோட்டல்களுக்கு 1,089 அனுமதிப்பத்திரங்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 306 அனுமதிப்பத்திரங்களும், உணவகங்களுக்கு 765 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

அதிகரிக்கும் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் – கொக்குத்தொடுவாய் எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு இராணுவ வேலிகளின் எச்சங்கள்!

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட நான்கு மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது.

இதுவரையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் நாட்களில் இவை அகழ்தெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

 

இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின் துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எச்சங்களையும் வரும் நாட்களில் முழுமையாக வெளியே எடுக்க முடியும் எனவும் தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மேலும் தெரிவித்துள்ளார்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் விழாக்களுக்காக 30 வீத கேளிக்கை வரி – ஜே.வி.பியின் பொருளாதார அறிக்கை உண்மையா..?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார நிர்வாக சபை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு ஆகியன இணைந்து கடந்த 06 மாதங்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த இறுதி வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 3/5/ 2024 0034 P EC என வரைவின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பகிரப்பட்டுள்ள ஆவணத்தில், தனிநபர் கையிருப்பு மதிப்புக் கணக்கீடு என்ற துணைத் தலைப்பின் கீழ் பொதுமக்கள் வைத்துள்ள தங்கம், வைரம் மற்றும் இரத்தின நகைகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தங்க கையிருப்புடன் கூடுதலாக தனியார் கையிருப்பு மதிப்பை கணக்கிடுவதே இதன் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் எனவும், அதற்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய கலாச்சார கூட்டு நிதியத்தில் இவை சேமிப்பில் வைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில், உணவகங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவைக்கான தனிப்பட்ட பாவனை அதிகபட்ச கொள்வனவுத் தொகை இருபதாயிரம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே உள்நாட்டு எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என அக்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த ஆவணம் அக்கட்சியினதா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

 

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபெசின்ஹ மற்றும் கட்சியின் ஊடகப் பிரிவிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த ஆவணம் போலியானது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தற்போது வரையிலும் நில அளவையாளர்கள், பொறியியலாளர்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சித் திட்டம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணமானது தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைத்திட்டம் அல்ல என்பதையும் அது போலியான ஆவணம் என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் ஆறுதிருமுருகனினால்  இயக்கப்படும் துர்க்கா சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவினர் மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

 

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.