14

14

வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க இலங்கையில் 500 ஆசிரியர்கள் நியமனம்!

கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுடன் அதன் மூலம் கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக பாடசாலைகளிலுள்ள வசதிகளை மேலும் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அவர்களுக்கு பயிற்றுவிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி!

காசாவின்  – கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஹமாஸின்  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்போது, ஹமாஸ் தரப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், மற்றுமொரு ஹமாஸ் தரப்பின் உயர் அதிகாரி ஒருவரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

 

டொக்டர் அர்ச்சுனா சாவகச்சேரிக்கு வரலாம்? போராட்டம் தொடர வேண்டும்! : காணொலி

டொக்டர் அர்ச்சுனாவின் ஆறுநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில், தான் தற்போதும் பொறுப்பிலிருப்பதாகத் தெரிவிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தான் செல்ல இருப்பதாக டொக்டர் அர்ச்சுனா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். டொக்டர் அர்சுனாவை மத்திய அரசே நியமித்த காரணத்தால், நாளை தனக்கு இடமாற்றம் தரப்பட்டால் அதற்குக் கட்டுப்படுவேன் எனத் தெரிவித்துள்ள அவர், இடமாற்றக் கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வழங்கப்படாவிட்டால் தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியைத் தொடருவேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக நேற்றையதினம் (13) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவக் குழுவினரும் சாவகச்சேரி மருத்துவமனை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தற்போது பொறுப்பேற்றுள்ள மருத்துவ குழுவினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்ததுடன், மூன்றுநாட்கள் திடீர் போராட்டத்தை நடத்த உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்டு துளைத்தெடுத்தனர். டொக்டர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாளை சாவகச்சேரிக்கு டொக்டர் அர்ச்சுனா வருவார் என்ற நம்பிக்கையில் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக பதின்ம வயது முதல் மக்கள் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளரும் லண்டன் கம்டன் கவுன்சிலில் புரஜக்ற் மனேஜராக இருந்து ஓய்வுபெற்று 2009 முதல் யாழில் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் மயில்வாகனம் சூரியசேகரம் இந்த மக்கள் போராட்டம் பற்றிய கள யதார்த்தத்தை தேசம்நெற் நேயர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.

._._._._._.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் சீரற்ற பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாலும் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்களின் பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இறுதி அறிவிப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது.
ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க அதிகாரம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை குழப்பி சில தமிழ் அரசியல் தலைவர்கள் குளிர் காய நினைக்கிறார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் !

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மகாரம்பைகுளத்தில் புனர்மைக்கப்பட்ட வீதி ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தற்போது ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதிலும் பொது வேட்பாளர் ரீதியில் இந்த ஜனாதிபதி தேர்தலை குழப்பி சில தமிழ் அரசியல் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனினும் முன்பை விட மக்கள் தற்போது விழிப்படைந்திருக்கின்றார்கள். எது சரி எது பிழை எது நடைமுறை சாத்தியமானது என்பதனை உணரத் தொடங்கி இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய் விடுகின்ற ஒரு விடயமாகவே காணப்படும்.

அத்துடன் எனது பயணம் பின்தங்கிய கிராம மக்களுக்கான பயணமாக அவர்களுக்கான அபிவிருத்திக்கான பயணமாகவே அமையும்” என நாடாளுமன்ற உறுப்பினா் கு.திலீபன்மேலும் தொிவித்தாா்.

வடக்கு வேலையில்லா பட்டதாரிகள் – தமிழ் பொதுச்சபை இடையே கலந்துரையாடல்!

தமிழ் மக்கள் பொதுச் சபையின்” பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும் வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இச்சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 100க்கும் குறையாத மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. – எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடப்பட்டது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம்.

 

ஒரு புறம் அரசாங்கம் தேர்தலை பிற்போட முனைப்பு காட்டுகிறது என்பதை அரசியலமைப்பில் 83 பி என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே தெரிகிறது.

 

அதைப் பற்றி விளக்கமாகவும் விபரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு சதி செய்யப்படுகிறது.

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த திங்கள் கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

 

5 நீதியரசர்கள் குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் ஆஜராகினேன். அது அடிப்படையில்லாத மனு என்ன தெரிவித்து அதனை தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழக்கு செலவும் செலுத்தும் படி உத்தரவிடப்பட்டது.

 

வழக்கு நிலுவையில் உள்ள போது அதனை பற்றி பேசக்கூடாது.

அத்தோடு, வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது. கட்சியினுடைய சின்னத்தை பாவிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள் என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 

கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள், சின்னம் எதுவும் முடங்கவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகிறது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது.

இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன், ஒரு ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தொிவித்தாா்.

 

 

வைத்தியர் அர்ச்சுனாவே தமிழ் மக்களுக்கு தேவை – ஊடகங்களால் மறுக்கப்பட்ட ஓர் சகோதரியின் கதை இது..! 

வைத்தியர் அர்ச்சுனாவே தமிழ் மக்களுக்கு தேவை – ஊடகங்களால் மறுக்கப்பட்ட ஓர் சகோதரியின் கதை இது..!