15

15

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளை மையப்படுத்தி புதிய பதவி !

சாவகச்சேரி வைத்தியசாலையில்  இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

 

அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும்.

 

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே இது வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தவறிழைக்கும் வைத்தியர்களுக்காகவும் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.” என தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுகிறேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று தம்புத்தேகம மிகவும் அபிவிருத்தியடைந்த நகரமாக மாறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு நான் இந்த பிரதேசத்திற்கு வந்தபோது எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க அந்தப் பாடசாலையில் கற்றார்.

அந்தக் கல்லூரியில் உயர்தரக் கல்வி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, நாம் ஆரம்பித்த களனிப் பல்கலைக்கழகத்தில் கற்று அதிலிருந்து பட்டம் பெற்று இப்போது நாடாளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

கல்வி வெள்ளை என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ஜே.வி.பி. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த கல்வி வெள்ளை அறிக்கையில் இருந்து உருவான அவர்

இன்று ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்திருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்.

இது கல்வி முறையின் வெற்றியைக் காட்டுகிறது.

அநுரகுமார திஸாநாயக்கவும் நானும் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்படுகின்ற போதிலும் எமது அரசியல் வேறுபட்டது. சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார அரசியலின் ஆட்டக்காரர் மஹிந்த ராஜபக்ஷ என்று தெரிவித்தார்.

அது எனக்கு பிரச்சினை இல்லை. அவர் ஒரு ராஜபக்ஷவாதி என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசில் பல ராஜபக்ஷவாதிகள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.

எந்த நாட்டிலாவது பிரதமர் பதவி வேண்டுமா என கையேந்திச் சென்றதுண்டா? 3 நாட்களாக பிரதமரை தேடினார்கள்.

 

வேறு நாடுகளின் அரசியலில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எந்த நாட்டிலும், ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பவர் ஜனாதிபதியானதுண்டா? இந்த வீழ்ச்சியடைந்த அரசியல் முறைமையில் இருந்து இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

 

அரசியலை தவிர்த்து உழைத்ததால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது. அதற்குமுன் எங்களுக்குள் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தன. ஆனால் நாடு வீழ்ச்சியடையும்போது அவ்வாறு செயற்பட முடியாது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நிறுத்தக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் – மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டடிருந்தது. அதன்படி, குறித்த மனுவைப் பரிசீலிக்கப் பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

மேலும் சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவிற்கு அபராத கட்டணமாக 05 இலட்சம் ரூபாவை ஜூலை 31ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது

 

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய நாட்களாக இடம்பெற்ற திடீர் புகையிரதப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பெருமளவான பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தொழிற்சங்க தலைவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பேரில் எடுக்கப்படும் தீர்மானங்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தலின் போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் மக்களை ஒடுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் !

பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட வர்த்தமானி மூலம் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி தொழிலாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் உச்ச நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு மனு தாக்கல் செய்திருந்தது.

பொகவந்தலாவ பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அர்ச்சுனா – குவிந்த மக்கள் – ஒருவர் கைது !

வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை செய்துள்ளார்.

இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை  வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர்.

குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை காவல்துறையினர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.