August

August

இலங்கை சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில் அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.

 

இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர்.

 

இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு தடை !

வவுனியா நகரில் நாளையதினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாளையதினம்(1) வவுனியா வருகைதரவுள்ள நிலையில் வவுனியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினரால் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சிவாநந்தன் ஜெனிற்றா, தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், அந்த சங்கத்தின் தலைவிகாசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் காணாமல்போன அமைப்பைசேர்ந்த சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாளையதினம் 01.09.2024 காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் படிமுறைக்கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைசேர்ந்த காவல்துறையினரால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் மற்றும் அநுர ஆகியோர் வரிக் குறைப்பு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழப்பமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமா என்பதை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டை விட தற்போதைய பொருட்களின் விலைகள் குறைவாக இருப்பதால், நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க இதுவரை எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை பேணப்படும் என அவர் உறுதியளித்தார். .

பொலன்னறுவையில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” பேரணியின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையில், அபிவிருத்தியடைந்த நாடாக முன்னேறுவதற்கு, இலங்கை தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எவ்வாறாயினும், சஜித் மற்றும் அநுர ஆகியோர் வரிக் குறைப்பு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதாக விமர்சித்த அவர், முன்னைய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அதே தவறுகளையே அவர்கள் மீண்டும் செய்வதாக எச்சரித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வரிக் குறைப்பினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை பார்வையாளர்களுக்கு நினைவூட்டிய அவர், அந்தப் பாடத்தை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர், வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி வணக்கத்திற்குரிய திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

திம்புலாகல ரஜமஹா விகாரையில், திம்புலாகல சேனாசனாதிபதி தேரர் செத்பிரித் ஓதி ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேரர்களுடன் ஜனாதிபதி அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் இரண்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்தனர்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் – தம்பி தம்பிராசா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

“முதல் பட்ஜெட்டிலேயே உணவு மீதான வட் வரியை நீக்குவோம்.”- ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதியொன்று வழங்கப்படும் என அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.​

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நம் நாட்டின் ஏராளமான குடிமக்கள் தங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்காக அதிகச் செலவுகளைச் செய்கிறார்கள்.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

முதல் பட்ஜெட்டிலேயே உணவு மீதான வட் வரியை நீக்குவோம்.” என்றார்.

“எமது அரசாங்கம் சர்வதேச சந்தைக்கு எரிபொருள் விற்பனை செய்யும்.”- அனுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகள் உள்ளன. ஒரு தொட்டியில் 10,000 மெட்ரிக் டன் சேமிக்க முடியும். தோராயமாக பத்து லட்சம் மெட்ரிக் டன் சேமிக்க முடியும்.

எண்ணெய் நமக்கு அதிகம். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி, எண்ணெயைச் சுத்திகரித்து, சேமித்து, அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து சந்தைக்கு அனுப்பலாம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடிய சர்வதேச நிறுவனமும், எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை புத்துயிர் அளிக்கும்..” என்றார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பேரணி !

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.

 

பேரணியின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி சென்றதுடன் , பேரணியின் முடிவில் , அக்கினி சாட்சியாக தமக்கான நீதி கிடைக்கும் வரையில் போராட்டங்களை தொடர்வோம் என உறுதி எடுத்தனர்.

 

பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது – இந்தியா

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

 

இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அவர்,

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படும் நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 

“உலகளாவிய ரீதியில் யுத்தம், வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் தமது குடும்பத்தினரை, அன்புக்குரியவர்களை பிரிந்த சகலரையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம்.

 

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருக்கின்றனர் என்று செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கக் கூட்டிணைவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் இந்த எண்ணிக்கை காணாமல் ஆக்கப்படல்களின் உண்மை நிலைவரத்தையும், தீவிரத்தன்மையையும் துல்லியமாகப் புலப்படுத்தவில்லை.

 

ஒவ்வொரு வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தின் பின்னாலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்துகொள்ள முடியாததனால் உறவுகளுக்கு ஏற்படும் அளவற்ற துயரம் மறைந்திருக்கின்றது.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இத்தகையதோர் பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதும், அதற்குரிய தீர்வை வழங்குவதும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும்.

 

மாறாக இப்போதும் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் சகல சமூகத்தைச் சேர்ந்தவர்களினதும் துன்பியல் அனுபவங்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்க மறுப்பதானது அவர்கள் மத்தியில் அதீத கோபம் தூண்டப்படுவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவு ஏற்படுவதற்குமே வழிகோலும்.

 

எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிடின், தனிநபர்களால் மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்தாலும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது.

 

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப்பிரகடனங்கள் சுருக்கமாகவும் – விளக்கமாகவும் !

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப்பிரகடனங்கள் சுருக்கமாகவும் – விளக்கமாகவும் !

“யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்விக்கான கேந்திர நிலையமாக மாற்றப்படும்.” – ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் – வெளியானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் !

https://www.thesamnet.co.uk/?p=106718

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

https://www.thesamnet.co.uk/?p=106715

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் – ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ – தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனுர குமார திசாநாயக்க!

https://www.thesamnet.co.uk/?p=106690