August

August

பங்களாதேஷ் ஆட்சிகவிழ்ப்பு கலவரம் – அமெரிக்காவே பின்னணியில் என்கிறார் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷை அமெரிக்காவை  ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பதவி விலகுவதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால், உடனடியாக கிளம்பும்படி பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் உரையாற்றாமல் அவர் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்தார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “பங்களாதேஷில் சவ ஊர்வலம் நடப்பதை பார்க்க விரும்பாததால் நான் பதவி விலகினேன். மாணவர்கள் உடல் மீதேறி ஆட்சிக்கு வர எதிராளிகள், விரும்பினர். அதனை நான் அனுமதிக்கவில்லை.

நான் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். வங்கக்கடலை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன்.

பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடித்து இருந்தால், இன்னும் பல உயிர் பறிபோயிருக்கும்.

என்னை நானே அகற்றிக் கொண்டேன். நீங்கள் தான் எனது பலம். என்னை நீங்கள் வேண்டாம் என்றீர்கள். நான் வெளியேறிவிட்டேன். அவாமி லீக் கட்சியினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரைவில் நான் மீண்டும் வருவேன். நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால், எனது குடும்பம், எனது தந்தை யாருக்காக உயிர் தியாகம் செய்தார்களோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் – பெப்ரல் அமைப்பு

தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்களை தவிர்க்க வேண்டும். இந்த செயல் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலில் சிலர் பல்வேறு தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் வேட்பாளராக களமிறங்க நாளாந்தம் முன்வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திர்ததை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் காண்கிறோம். வேட்பாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வருபவர்களில் சிலர் அவர்களின் சொந்த காரணங்களுக்காக முன்வருபவர்களை தவிர்க்க வேண்டி இருக்கிறது. வேறு சிலர் வெளிநாட்டு தூதுவர் சேவைகளுக்கு செல்வதற்கு அல்லது வெற்றிபெறும் வேட்பாளரிடமிருந்து அரச திணைக்களங்களின் தலைவர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரபல்லியமடையும் நோக்கில், சுதந்திர ஊடக சந்தர்ப்பத்தை பெறறுக்கொள்ளும் நோக்கில் அல்லது வாக்கு சாவடிகளில் தங்களின் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்வதற்கு போன்ற இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் அல்லாத வேறு காரணங்களுக்காக வேட்பாளர்களாக முன்வருகின்றனர்.

2010 ஜனாதிபதி தேர்தலில் 35பேர் வேட்பாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களில் 33 பேரும் இணைந்து 2.5 வீத வாக்குகளையே பெற்றிருந்தனர். அதனால் வரலாறு முழுவதும் நாங்கள் ஆராய்ந்து பார்த்தால், பிரதான வேட்பாளர்களைத்தவிர ஏனையவர்களுக்கு நூற்றுக்கு 2வீத வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் அனைவரதும் கட்டுப்பணம் அரசுடைமையாகிறது.

அதேநேரம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் வாக்குச்சீட்டின் அளவு அதிகரிக்கிறது. அதன் காரணமாக தேர்தல் செலவும் அதிகரிக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாள் எதிர்வரும் 14ஆம் திகதியாகும். இதுவரை 27பேர் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றனர் என்றார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் என நுவரெலியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

 

நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

 

”நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும்.

 

அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்தக் காணிகளை அரசாங்கம் மீள சுவீகரிக்கும்.அதுமாத்திரமல்ல மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.

 

வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியளிக்கும். மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் மாநாடொன்று கூட்டப்படும்.

 

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தை – புறக்கணிக்க திட்டமிட்டுள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

 

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். தேர்தல் வேலைகளில் மூழ்கி இருப்பதால், குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்து கொள்வது சிரமமாக இருக்கும். எதிர்காலத்தில் இது போன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்து கொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும்” என தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

 

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடைய செய்கின்ற நோக்கத்தோடு பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் – செ.கஜேந்திரன்

இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இன்றையதினம் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.

 

அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடைய செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

நாமல் ராஜபக்ச – சுமந்திரன் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அந்த மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயார் என சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பொருட்படுத்தாது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் விரும்புவதாக நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

 

மேலும் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் சந்தித்து குறைகளை விரிவாக கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

இந்த விடயங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்” என்றார்.

நாடாளுமன்றத்திற்கான தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை – இரா.சாணக்கியன்

நாடாளுமன்றத்திற்கான தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசாமணிக்கம் தெரிவித்தார்.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள தமிழ் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னங்களை அவருக்கு வழங்க மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரம் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் நாளைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூடி தீர்மானிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழி தோண்டி புதைக்கும் விடயமாக மாறிவிடும் இந்த பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது.

 

இது ஒரு தேவையில்லாத விடயம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தங்களுடைய தனிப்பட்ட இலாபங்களுக்காக இந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என தெரிய வருகிறது.

 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாக கூடி தான் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க கூடிய ஒருவருக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு வழங்க வேண்டும் எதிர்வரும் காலங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க கம்பெனிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொழிலாளர் அமைச்சு தனது கீழ் உள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விசேட சட்டங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளச் சபையைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

நாமல் ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெறுவார் – மகிந்த ராஜபக்ச நம்பிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தனது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

தனது மகனின் வேட்புமனுவை ஏற்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

 

“தங்கள் மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள்? நான் விரும்பியதால் அவரை முன்வைத்தேன். ஏனெனில் கட்சி அவரை விரும்பியது” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என நம்புவதாக ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை செயல் – மூவர் கைது !

வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களைப் பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைதுசெய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.