August

August

ஜனாதிபதி தேர்தலுக்கான எவ்வித பிரச்சாரத்தையும் ஆரம்பிக்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்

நமது ஆட்சியில் தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் – அனுர குமார திசாநாயக்க

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் நமது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

 

கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க,

 

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.

 

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

 

குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம்.

 

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

 

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

 

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

 

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம்.

 

இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  தொிவித்துள்ளாா்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹரிணி அமரசூரிய,

 

தேர்தல் நடைபெறும் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவது வழக்கமானதே.ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டிற்கு பொருத்தமான மக்களுக்கு தேவையான கொள்கை திட்டமொன்றே அவசியமாகின்றது.

 

கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை பலர் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனர்.இது இன்று நாட்டில் அரசியல் கலாசாரமாக உள்ளது.

 

பலர் கட்சிமாறுகின்றனர் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதனை முற்றாக மாற்றுகின்றார்கள். மக்களால் தெரிவு செய்யடுகின்ற ஆட்சியாளர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 

தேர்தல் ஒன்று இடம்பெறும் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.அதன்பின்னர் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அங்கு செயலற்றுபோகின்றது.

 

இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேலும் தொிவித்தாா்.

மது அருந்தி விட்டு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி யாழில் கைது !

குறிகட்டுவான் பகுதியில் மது அருந்திவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில் மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

 

இதன்போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, இலஞ்சம் வாங்க முற்பட்டுள்ளார். பின்னர், அவரை தாக்கியுள்ளார்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதானவர் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வைத்தியர்களின் கவனயீனத்தால் இறந்த பெண்ணின் கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 30000 பாலியல் தொழில் செய்வோர் – 80000 ஓரின சேர்க்கையாளர்கள்!

இலங்கையில் தற்போது 30,000 பாலியல் தொழில் செய்வோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேற்கொண்ட ஆய்வின் படி , கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது – கஜேந்திரனுக்கு அம்பாறையில் பொலிஸார் தடை !

பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று(24) முற்பகல் வேளை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ,தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை ஏற்க முடியாது என அம்பாறை – திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பினருக்கு எதிராக பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் பொறுப்பதிகாரி தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும் நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பதிலளித்த, கஜேந்திரன் எம். பி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

வெளியானது ஜனாதிபதி வேட்பாளர்களின் மாத வருமான விபரம் – ஏழை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாவது இடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4,54,285 ரூபாய் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2,85,681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசிடம் இருந்து வாங்கிய பணத்திற்காக சாணக்கியன் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிக்கையில்,

 

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். சுமந்திரன், சாணக்கியன், CVK சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

 

அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியைச் சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன்.

 

இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.

 

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள்.

 

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

கடைசி நேரத்தில் அவர்கள் என்ற முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் ஆதரவு முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

 

தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான தீர்வுகளும் இல்லாத காலகட்டத்தில், ஏற்கனவே பல கட்சிகளுக்கு வாக்களித்தும் ஏமாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தொடர்ந்தும் அவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக எதையும் சாதிக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அவர்களுக்கு விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாக அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.

 

எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழ்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம் என தெரிவித்தார்.