August

August

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” – அனுரகுமார திசாநாயக்க

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று தங்காலையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலர் அரசியல் பதவிகள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி கட்சித்தாவல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் அல்லது வேறு எந்தவேட்பாளர்களாக இருந்தாலும் எத்தகையை கூட்டணிகள் அமைத்தாலும் நாட்டு மக்களை ஏமாற்றமுடியாது.பொதுமக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி, நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தீபச்செல்வன் முறைப்பாடு!

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார்.

 

இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார்.

 

குறித்த கடிதத்தில் அவா் மேலும் தொிவித்துள்ளதாவது,

 

“நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

 

போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன். புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன.

 

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை“ என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல். போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல்.

 

பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்ப்ப் பிரிவு மேற்கொண்டது.

என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது. இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள்இ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது. உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும். அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையுமாகும்.

 

பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்” என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் – எம்.ஏ.சுமந்திரன்

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழு தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.

கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.

இந்த தடவை அது ஒரு வித்தியாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. எல்லா வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.

அவர்களின் தேர்தல் அறிக்கையில் முழு நாட்டுக்கும் என்ன சொல்லியிருக்கிறார் என பார்த்து சரியான நேரத்தில் அறிவிப்போம்” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து 60 கோடி பெற்றேன் – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு வழங்கும் அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

 

அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார்.

 

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை எங்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் – அனுரகுமாரதிசநாயக்க

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகாலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும் மக்கள் பல வருடங்களாக துயரங்களை எதிர்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும்,இந்த தேர்தலை மக்களையும் துன்பத்திலிருந்து மீட்பதற்காக காப்பாற்றுவதற்காக எங்களால் பயன்படுத்த முடியும்,தேசிய மக்கள் சக்தியால் அதன் வேட்பாளரால் மாத்திரம் இதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.