August

August

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் இலத்திரனியல் உபகரண பாவனை !

பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக செலவிடுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

காலி மாவட்டத்தில் தரம் 7 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் சிறார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக காலி மாவட்ட சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு !

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – முப்பது நாட்களில் 300 முறைப்பாடுகள்!

தேர்தல் தொடர்பில் 24 மணித்தியாலங்களில் 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 11 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் ஏனையவை தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று(12) வரை 366 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மன்னாரில் வைத்தியர்களின் அசமந்த போக்கால் உயிரிழந்த தாய்க்கு நீதி கோரி மக்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” – இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ்

“பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.

இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை மறைத்த பாடசாலை அதிபருக்கு பிணை !

பாடசாலை மாணவி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனமல்வில தேசிய பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு வெல்லவாய மாவட்ட நீதவான் சதுர இ.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் அதிபர், பிரதி அதிபர், ஆசிரிய ஆலோசகர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆகியோர் ஆவர்.

சாட்சிகள் மீது எவ்விதத்திலும் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டால், பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர் எனவும் பிணை வழங்கிய நீதவான் எச்சரித்துள்ளார்.

பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு !

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை சட்டத்தரணியான ஷான் ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக போட்டி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளமையினால், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நீதி அமைச்சர் பதவிக்கு அலி சப்ரியை நியமித்துள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை !

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து, இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலைகள் நினைவேந்தல் !

முல்லைத்தீவு, வள்ளிபுனம் -செஞ்சோலை வளாகத்தில் இராணுவத்தின் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்ப்பட 61 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னான் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகனேசன் பொதுமக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி !

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக, ஸ்டார்லிங்க் (Starlink) தனியார் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் அனுமதித் பத்திரத்தை வழங்க. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்றது.

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள பைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.