August

August

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் !

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்  திருநெல்வேலி பகுதியில் கடந்த இன்று 8 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனா அரசு ஆட்சி கவிழ்ப்பின் பின் பங்களாதேஷில் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் !

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை  கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவொன்று இந்த பேரணியினை ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில்  ஷேக் ஹசீனா  அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என தன்னை சந்தித்த தமிழ்த் தேசிய கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.அத்துடன், சமஷ்டி தீர்வு கிட்டும்வரை 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என கூறிய ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பேசி முடிவு எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் 13ஆவது திருத்தம் தொடர்பில் தான் தயாரித்து வைத்துள்ள ஆவணம் ஒன்றையும் கட்சியினரிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது தமிழ்க் கட்சிகள் முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை நிச்சயம் தான் வழங்குவேன் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னம் தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரியாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவர்களிடம் இருந்து 156 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதில் தீவிரம் காட்டும் சுமந்திரன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சுமந்திரன் எம்.பி.க்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு உயர்நீதிமன்றத்தில் ஹரீன், மனுஷவின் வழக்குத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக விடுக்கப்பட்ட அழைப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் இந்த சந்திப்பு மீண்டும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுடனான சந்திப்பொன்றிலும் சுமந்திரன் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏன் ஜனாதிபதி பொதுவேட்பாளரை நிறுத்தினோம் ..? – விளக்குகிறார் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன்!

மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம் என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை.

இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலும் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதியமைச்சராக பொறுப்பேற்றார் அலி சப்ரி !

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவியை ஏழு மாதங்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 17 பாடசாலை மாணவர்கள் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகத்திற்குரிய 17 மாணவர்களில் 14 பேரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். .

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு முதல் முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடியோவை காட்டி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிரிந்தி ஓயாவிற்கு அருகில், 7 மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் தெரியவந்துள்ளது.

தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 – நிறைவேற்றப்பட்டது தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது .

 

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார் – அனுர குமார திசாநாயக்க

நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க, வேட்புமனு பத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம். நாடு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

எமது ஆட்சியில் நாம் மிகத்தெளிவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவான காலப்பகுதியே உள்ளது.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாடு வளமிக்க நாடாக அபிவிருத்தி அடையும் என்பதுடன் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும்.

நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.

ஏனென்றால், இப்பொழுது ஏனைய அரசியல் கட்சிகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்துள்ளதுதேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம்.

நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இயன்றவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.

இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.