15

15

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு வழங்கும் அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

 

அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார்.

 

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை எங்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் – அனுரகுமாரதிசநாயக்க

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகாலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும் மக்கள் பல வருடங்களாக துயரங்களை எதிர்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும்,இந்த தேர்தலை மக்களையும் துன்பத்திலிருந்து மீட்பதற்காக காப்பாற்றுவதற்காக எங்களால் பயன்படுத்த முடியும்,தேசிய மக்கள் சக்தியால் அதன் வேட்பாளரால் மாத்திரம் இதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் இலத்திரனியல் உபகரண பாவனை !

பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக செலவிடுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

காலி மாவட்டத்தில் தரம் 7 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் சிறார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக காலி மாவட்ட சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு !

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.