25

25

மது அருந்தி விட்டு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி யாழில் கைது !

குறிகட்டுவான் பகுதியில் மது அருந்திவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில் மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

 

இதன்போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, இலஞ்சம் வாங்க முற்பட்டுள்ளார். பின்னர், அவரை தாக்கியுள்ளார்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதானவர் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வைத்தியர்களின் கவனயீனத்தால் இறந்த பெண்ணின் கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.