27

27

வெளியானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாற்றுக் கொள்கை மையத்தின் புதிய ஆய்வு முடிவுகள்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் களம் கட்சி தாவல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகள் என சூடுபிடித்துவரும் நிலையில், தேர்தலில் யார் வெல்வார் என்ற கருத்து கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த அடிப்படையில், மாற்றுக் கொள்கை மையம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அனுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரையும் கருத்திற்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

“உங்கள் குடும்பத்தின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்ய யார் மிகவும் பொருத்தமானவர் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ” என்பதை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில்;

 

28.8 வீதமான மக்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ள அதேவேளை, 24.3 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளதுடன்,19.3 வீதமான மக்கள் சஜித் பிரேமதாசவை மிகவும் பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்துள்ளதாக மாற்றுக் கொள்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு 15.5 வீதமான மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், 12.1 வீதமான மக்கள் யாரை தெரிவு செய்வது என்பது தெரியாது என பதிலளித்துள்ளனர்.

 

இதேவேளை, சகோதர மொழி மக்களிடையே 24.1 வீதமானவர்கள் ரணில் எனவும் 33.1 வீதமானவர்கள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ளனர்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் – தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது .எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.

அந்த தீர்வை நோக்கிய பயணமாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஐனாதிபதி வேட்பாளராக தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

ஐனாதிபதியாக வருவதல்ல நோக்கம். இந்த தேர்தல் மூலம் எமக்கான தீர்வை பொற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாவிருக்கின்றோம் என்பதை காண்பிப்பதற்காக போட்டியிடுகின்றேன்.

எமது மக்கள் நேரகாலத்துடன் பெருவாரியாக சென்று வாக்களிப்பதன் ஊடாக எமது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும்.

தற்போது ஒரு சிலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிக் கொண்டிருக்கிறது . அவற்றை அவதானித்தால் தமிழர் பற்றியோ அவர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வுபற்றியோ எதுவும் இல்லை.

ஊழல், அபிவிருத்தி, ஒரே நாட்டுக்குள் தீர்வு, சமத்துவம் என்று கூறுகிறார்கள். சமத்துவம் என்றால் என்ன ? இந்த நாட்டில் தமிழன் ஐனாதிபதியாக வரமுடியுமா இதுதான் இந்த நாட்டின் சமத்துவமாகும்.

இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் ஐனாதிபதியாக வருவது நோக்கமல்ல. ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை காண்பிப்பதே நோக்கமாகும். ஒற்றுமையின் பலம் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – 30 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறிய 1006 குற்றச்சாட்டுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை குறித்து 105 முறைப்பாடுகளும், 19 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி !

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது.
இதன்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த லொறியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுவிஸ்லாந்தில் இருந்து இலங்கை வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்து கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியில் தங்கி இருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

66 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவிலுள்ள சின்னடம்பன் கிராமத்தில்

அவரது உறவினரின் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 

மேலும் நேற்றிரவு இரவு வீட்டிற்குள் புகுந்து குழுவினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

நேற்று காலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருவதோடு இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு பதில் நீதிபதி திருவருள் விஜயம் மேற்கொண்டு சடலத்தை பார்வையிட்டிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுக்களை மறுத்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

 

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

 

இலங்கை மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது !

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா 1,500 ரூபா தண்டம் விதித்துள்ளது.

 

குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (26) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை பொலிஸ் பிரிவில் ஒட்டும் போதே இந்த 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து சந்தேகநபர்களுக்கு நீதவான் அபராதம் விதித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான எவ்வித பிரச்சாரத்தையும் ஆரம்பிக்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்