September

September

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தனித்து போட்டியிடுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (30) திங்கட்கிழமை மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.

அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

ஆகவே, நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள், யுவதிகள், ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா !

ஐரோப்பாவில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024ஆம் ஆண்டின் “Good Childhood” அறிக்கையின் படி, போலந்து (24.4%) சதவீதமும் மற்றும் மால்டா (23.6%) சதவீதமும் பெற்றுள்ள நிலையில், பிரித்தானியா (25.2%) சதவீதத்தை பெற்று மிக மோசமான இடத்திலுள்ளது.

பிரித்தானியாவில் 11 சதவீத குழந்தைகள் போதிய உணவின்மை காரணமாக உணவை தவிர்ப்பதாகவும் இவற்றில் 50 சதவீதமானவர்கள் பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விலைவாசி உயர்வு, சமூக குற்றச்செயல்கள் மற்றும் பள்ளி வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் இளைஞர்களின் நலனை மேலும் பாதிப்படைய செய்வதுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில், பள்ளி மாணவர்கள் பலர் குற்றச்செயல்கள் மற்றும் பழிவாங்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

 

அதில், 14.3 சதவீதம் மாணவர்கள் தங்கள் பள்ளி அனுபவத்தில் திருப்தியில்லையென்று கூறியுள்ளனர்.

அத்துடன், பிரித்தானியாவில் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ள நிலையில், 2.7 லட்சம் குழந்தைகள், தாங்கள் கொண்ட மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி பெற காத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நோர்டிக் நாடுகள் சிறுவர் நலனில் சிறப்பாக செயல்படுகின்றன.

இந்நிலையில், அங்கு வாழ்க்கை திருப்தியின்மை (10.8% – 11.3%) சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில் பிரித்தானியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் வாழ்க்கை திருப்தியின்மை சதவீதம் அதிகமாகவே காணப்படுகிறது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவு !

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

கொழும்பிலுள்ள ஆங்கில செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உறுதி செய்யும்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் முன்னேறும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் கவனம் செலுத்தவுள்ளது.

 

மேலும் இடையூறு இல்லாத சுமூகமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தி விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட போதைப்பொருள் களியாட்டம் 18 பாடசாலை மாணவர்கள் கைது !

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

 

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபர்களை ராகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

25000 ஆக அதிகரிக்கப்பட்ட உரமானியம் – விவசாயிகள் அனுர குமாரவுக்கு நன்றி !

ஹெக்டயருக்கான உரமானியம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஹெக்டயருக்கு 15 ஆயிரம் ரூபாவே உரமானியமாக வழங்கப்பட்டுவந்தது.இந்நிலையில் உரமானியக் கொடுப்பனவு, ஒக்டோபர் 01ம் திகதி அமுலுக்குவரும் வகையில் 25 ஆயிரம்

 

ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது போன்று, உரமானியக் கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார

 

திஸாநாயக்க அவசர நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்கு அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

விவசாய மூலப்பொருட்களை உரியவாறு முகாமைத்துவம் செய்யும் நோக்கில்,

 

நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கும் சிறந்த

 

விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயன மற்றும் சேதன உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என

 

புதிய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

கடந்த காலங்களில் உரமானியக் கொடுப்பனவு ஹெக்டயருக்கு ரூபா 15 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டது.இருந்த போதிலும் அது

 

உரிய நேரத்திற்கு விவசாயிகளை சென்றடையவில்லை. இதனால், விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். ஆகையால், அதிகரிக்கப்பட்ட உரமானியக் கொடுப்பனவை பெரும்போக விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேறகொண்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் விசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைக்காக மூன்று வருடங்களில் பல கோடி ரூபாய்கள் – அம்பலப்படுத்தப்பட்ட பகீர் தகவல்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இவர்களின் பராமரிப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். 2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக அந்த தொகை வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 45 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பேராசிரியர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இவ்வருடம் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு தலா இரண்டு கோடியே தொண்ணூற்றொரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியதாக கூறும் பேராசிரியர், இந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 273 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகக் கூறும் அத்துகோரள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஐம்பத்து நான்கு வீதமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது 329 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு ஒதுக்கப்பட்ட பணமானது 101 வீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 660 கோடி ரூபாவாகும்.

2022 ஆம் ஆண்டில், செலவு 273 கோடியாக பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 660 கோடியாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் 142 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தப்பட்டது யுக்திய நடவடிக்கைகள் – வெளியான அறிவிப்பு!

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிசார் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யுக்திய நடவடிக்கையை அமுலாக்குவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன் செயல்படுவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகிறது எளவும் அந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாக குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக கடந்த கால அரசாங்கங்கள் விலகிவிட்டன – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஐந்து வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் பாடசாலை நிதி முகாமைத்துவம் தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின்போது இனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உட்பட தேசிய பாடசாலைக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

 

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

 

கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.

 

ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும்.

இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும்.

 

ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

 

தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.

 

இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

 

ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் ஒழுங்குபடுத்தல். ஒரே இடத்தில் இல்லாதிருப்பதாகும். கல்வி அமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது.

 

சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாகச் செயற்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

 

எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும்.

நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒரு எண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமது அரசாங்கம் வழங்கும்.

 

அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாக செயற்படுத்துவது கடினம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

 

குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ள நாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும் கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

 

இலவசக் கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிக உயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும் தரமான கல்வியைப் பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது.

 

எனவே பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன் பெற்றோர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.இந்த இலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.

 

உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது உங்கள் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றார்.

இந்தியா மீண்டும் தமிழர்களைக் கொண்டு இலங்கையில் குண்டுகளை வைக்குமா? – செல்லையா மனோரஞ்ஜன் உடன் உரையாடல்..!

ஜேவிபி ஆட்சியை இந்தியாவும் மேற்குநாடுகளும் அனுமதிக்குமா?

இந்தியா மீண்டும் தமிழர்களைக் கொண்டு குண்டுகளை வைக்குமா?

செல்லையா மனோரஞ்ஜன் உடன் உரையாடல்..!