08

08

கட்சியில் அங்கத்துவம் இல்லாத பெண்கள் இருவரை சுமந்திரன் திட்டமிட்டு களமிறக்கியுள்ளார் – தமிழரசுக்கட்சி மகளிர் அணி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின்மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்..?

ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் பொய் கூறுகிறார்.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

 

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

 

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார்.

 

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர்.

 

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் – தேசிய மக்கள் சக்தி மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழலுக்கு எதிரான அமைப்பிற்கு வழங்குமாறு குறித்த அமைப்பின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொள்ளையர்களுடன் எவ்வித உறவையும் பேணாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கடந்த மாதம் 23ஆம் திகதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 24ஆம் திகதி மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து மக்கள் எதிர்பார்த்தவாறு நிதி முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 

புதிய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் மிகவும் முக்கியமானவையாகும். அந்தத் தகவல்களின் மூலம் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத வேலைகளைச் செய்த நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை பொதுமக்கள் அவதானிக்க முடியும்.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி வருவதாகவும், அவசரப்படாமல் ஆதாரங்களுடன் தகவல்களைப் பெற்ற பின்னரே இதனைச் செய்ய வேண்டுமென்பதனால் முறையாகச் செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை !

தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பாக தெரியவருவதாவது

களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையிலிருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

 

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

 

அதன் பின்னர், மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.