10

10

2024 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளருக்கு !

இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

 

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

 

அந்தவகையில் நடப்பாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 7ம் திகதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து 8ம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் நேற்று 9ம் திகதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் திகதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இடையே சந்திப்பு!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.

கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் விஜயமானது வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை !

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

 

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, ​​யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கஜேந்திரகுமார் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்த வேட்பாளர் இன்று தமிழரசுக்கட்சி வேட்பாளராக மனுத்தாக்கல்- வெளியானது தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ.டினேசன் மற்றும் சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன்  தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்திருந்தது.

இதேவேளை கடந்த வாரம் தமிழ் மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என பெயர் குறிப்பிடப்பட்டு பதாகைகள் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா என்பவர் இன்று தமிழரசுக்கட்சி சார்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சி சார்பாக பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் இயங்கி வரும் பலருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாமல் வேறு கட்சியில் இருந்து திடீரென தமிழரசுக் கட்சுக்குள் வந்தவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான பணத்தை கிறீஸ் நாட்டில் முதலீடு செய்தமைக்கு எதிராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

 

2012 ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, ​​இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தமிழ்பாட ஆசிரியருக்கு லண்டனில் 11 ஆண்டுகள் சிறை !

பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற 8 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனியார் வகுப்பு தமிழ்பாட ஆசிரியராகவும் தபாலக முகாமையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவரால் பல மாணவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படட்மைக்கான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு குறொய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அங்கு அவர் 8 வயது முதல் 4 வயதுக்குட்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமைகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தனிப்பட்ட பயிற்சிக்காக அவரது வீட்டிற்குச் சென்றபோது தனுஹரனால் பாலியல் ரீதியாக தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறோய்டனை ஐ உள்ளடக்கிய பொதுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சார்ஜென்ட் விக்கி தாம்சன் இது தொடர்பில் கூறிய போது “பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறைக்கு வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததன் மூலம் அதீத துணிச்சலைக் காட்டியுள்ளனர். அவர்களின் தைரியத்திற்கு நன்றி.  அதேவேளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எவரையும் நாங்கள் முன் வந்து காவல்துறையிடம் பேச ஊக்குவிப்போம். எவ்வளவு நேரம் கடந்தாலும், எங்கள் சிறப்பு அதிகாரிகளால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் – ஆதரிக்கப்படுவீர்கள். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார்.

கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர்(09) உயிரிழந்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றதுடன் அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதன்போது, ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அற்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மோட்டார் வாகன துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.