20

20

மாநகர சபையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பிய நான் பயங்கரவாதியா..? – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி, எமது தமிழ் மக்கள் கூட்டணி தான் என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் நேற்று (19) சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது.

 

அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து வௌியிடுகையில்,

 

பல்கலைகழக மாணவனாக 2010 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். ஒரு அரசியல் இயக்கமாக செயற்பட்டோம்.

 

பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என கூறினார்கள். நாம் தேர்தலை புறக்கணித்தால் ராஜபக்ஷர்களின் ஆட்சி மீண்டும் வரும் என கூறினோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் இருந்து அவர்களோடு கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு அவர்களோடு இணைந்து செயற்பட முடியாது என நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

 

அதுபோன்று , சர்வதேச விசாரணைகள் தேவை என வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரன் மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியதை அடுத்து அவரை தமிழரசு கட்சி வெளியேற்றியது.

 

அந்நிலையிலையே நாம் இருவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டது. நாம் தற்போது தமிழ் மக்கள் கூட்டணியாக பயணிக்கிறோம்

 

எமது தேர்தல் பிரச்சாரங்களில் நாம் மற்றைய கட்சிகள் மீது சேறு வீசும் தேவை எமக்கு இல்லை. நாங்கள் என்ன செய்தோம், என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு நாங்கள் சேவை செய்துள்ளோம். அதனை முன்னிறுத்தியே எமது தேர்தல் பிரச்சாரங்கள் இருக்கும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சூழலை அடுத்து தென்னிலங்கையில் பழைய அரசியல்வாதிகளை தென்னிலங்கை மக்கள் ஓரம் கட்டி விட்டனர். அவர்களும் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டனர்.

ஆனால், தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எதுவும் செய்யாத தமிழ் அரசியல் வாதிகள் இன்றும் தேர்தலில் நிற்கின்றனர். அவர்களை தமிழ் மக்களும் ஓரம் கட்ட வேண்டும்.

 

தற்போதைய நிலையில் மக்களை ஏமாற்றாத ஒரு அணியாக தமிழ் மக்கள் கூட்டணியே உள்ளது.

 

மற்றைய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் 10, 20 வருடங்களாக நாடாளுமன்றில் இருந்தும் எதுவும் செய்யாதவர்கள்.

 

நாங்கள் இளைஞர்களாக கடந்த காலத்தில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளோம்.

கோட்டாபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் பயங்கரவாதி என என்னை கைது செய்தார்கள். நான் பயங்கரவாதியா? மாநகர சபையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பிய நான் பயங்கரவாதி என கைது செய்தார்கள்.

 

இப்படியெல்லாம் மாநகர சபை செயற்படலாம். மாநகர முதல்வரால் ஒருவரால் இப்படியெல்லாம் செய்ய முடியும் என செய்து காட்டினோம்.

 

அதே போன்று எமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினரால் இதெல்லாம் செய்ய முடியுமா? என நீங்கள் வியக்கும் அளவுக்கு செய்து காட்டுவோம்.

நீங்கள் விரும்பும் மாற்றம் எம் ஊடாக கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா..? – விசாரணைகளுக்காக புதிய குழு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது – ஜனாதிபதி அநுரகுமார !

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு சிலர் இப்பொழுது கேட்கிறார்கள் திருடர்களை பிடித்துவிட்டீர்களா என்று. ஆனால் நான் ஒன்றைக் கூறுகிறேன் பிடிக்கும்போது யாரும் புலம்ப வேண்டாம்.

400 மேற்பட்ட கோப்புகள் இருக்கின்றன. அவை மூடப்பட்டு இருக்கின்றன. நாங்கள் பரிசீலித்துப் பார்த்தோம். ஒருசில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கிபோயுள்ளன.

 

மேலும் சில கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இறுகிப்போயுள்ளன. இன்னும் சில கோப்புகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குவிந்து இருக்கின்றன.

அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம். நாங்கள் காட்சிக்காக வேலை செய்பவர்கள் அல்ல.

2015 இல் முழுமையாகவே மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் எதிராக காட்சிக்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கோப்புக்களை எடுத்துச் செல்வார்கள். வெளியில் வந்து ஊடங்களுக்கு கருத்து சொல்லுவார்கள். தேசிய மக்கள் சக்தி அப்படியல்ல.

மிகவும் திட்டமிட்ட வகையில் எல்லா தரவுகளையும் சேகரித்து முறைப்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கத்தக்க வகையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

 

எவருமே பதற்றமடைய வேண்டாம். இந்த நாட்டு மக்களிடம் அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அதோ அந்த மோசடியாளர்களுக்கும் ஊழவாதிகளுக்கும் தண்டனை வழங்குகின்ற எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் அதனை சாதிப்போம். அத்தோடு நின்றுவிட என குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் தொடர்பில் 400 க்கு மேற்பட்ட கோப்புக்கள் உள்ளன. திருடர்களை முறையான விசாரணைகள் அடிப்படையில் அம்பலப்படுத்துவோம். அப்போது யாரும் பதற வேண்டாம் என அனுர குமார எச்சரிக்கை!

இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. – து.ரவிகரன்

இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார்.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

 

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

 

எமது மதத்தை அழித்து பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வு தான் கிடைக்கவில்லை.

 

மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று. எனவே வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 

சர்வதேசம் பாராமுகமாக இருக்க கூடாது. இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 வது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம்.

 

எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் என்ன எங்கயும் ஓடுவதா?. இலங்கை தமிழன் ஆண்ட பூமி எனவே எமக்கான தீர்வை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்றார்.

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மீது சட்ட நடவடிக்கை!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதன் பின்னர், பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்ததுடன், பத்தரமுல்லை சீலரதன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகியோர் வருமான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

 

இதன்படி, மூன்று வேட்பாளர்கள் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் ஊடாக பொலிஸாரின் தலையீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.