02

02

இலங்கையில் 300 நாட்களில் 2000 மரணங்கள் – அவதானமாக செயற்படுவார்களா மக்கள்..?

2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 676 பேர் பாதசாரிகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இவ்வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பதுளை மற்றும் ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் மாத்திரம் 62 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரை 1,818 வீதி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பலத்த காயங்களுடன் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 4,133 ஆகும். மேலும் சிறு காயங்கள் ஏற்பட்ட விபத்து சம்பங்களின் எண்ணிக்கை 7,146 ஆகும்.”

“அத்தோடு 1,818 வீதி விபத்துகளில் 1,898 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 676 பேர் பாதசாரிகள். 583 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். வாகன சாரதிகள் 135 பேர். வாகன பயணிகள் 249 பேர் மற்றும் 123 சைக்கிள் ஓட்டுநர்கள்.”

“மேற்படி 1,818 வாகன விபத்துக்களில் 730 மோட்டார் சைக்கிள்கள், 258 லொறிகள், 209 முச்சக்கர வண்டிகள், 146 தனியார் பஸ்கள், 135 கார்கள், 118 வேன்கள், 55 கெப் வாகனங்கள், 21 ஜீப்கள், 12 சைக்கிள்கள், 9 கொள்கலன் லொறிகள், 6 கன்டெய்னர் மற்றும் அட்டெக்டர் 5 ஆகும்”

“விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனங்களின் எண்ணிக்கை 42 ஆகும்”

“மக்கள் வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் – சசிகலா ரவிராஜ்

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

யாழ் . ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளின் கூட்டில் தான் நான் இணைந்துள்ளேன். எனது கணவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேளையே படுகொலை செய்யப்பட்டார்.

 

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி சார்ப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் போட்டியிட்டேன். அதன் அடிப்படையில் இந்த முறை தேர்தலிலும் தமிழரசு கட்சி ஆசனம் வழங்கும் என எதிர்பார்த்து இருந்தேன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 

பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நான் தோற்று போனவளாக இந்த தேர்தலில் இருந்து விலகி இருக்க விரும்பவில்லை. அப்போது தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டேன்.

 

பெண்களுக்காக உங்கள் முன் நிற்கும் என்னை தெரிவு செய்ய வேண்டும். பெண்கள் மிக ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 

இந்த தேர்தலில் பல கட்சிகள் பல சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது . அதில் ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

 

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு கரங்களையும் நீட்டி தயாராகவே இருக்கிறது.

 

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

எனவே ஒற்றுமையாக இருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் எனவும் , எனது கணவரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன் எனவே சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதில் எனது இலக்கமான 07ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்கினை அழிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு திட்டம் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றையதினம் (02-10-2024) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அநுர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்..? – சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட தகவல் !

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மிரிஹான பொலிஸாரால் லொஹான் ரத்வத்த கடந்த 31ஆம் திகதி கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அன்றிரவு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இருந்து நுகேகொட பதில் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, லொஹான் ரத்வத்த முன்னாள் சிறைச்சாலை அமைச்சராக இருந்ததன் காரணமாக அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில், கடந்த 31ஆம் திகதி முதல் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி முன்னாள் அமைச்சரின் உடல் நிலை குறித்து சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து அறிக்கை வரவழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவர் கல்லீரல், நுரையீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை விசேட மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொலிஸாரின் செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்வதில் எந்த தடையும் இல்லை – பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் தனக்கு கீழ் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பல்வேறு செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காணொளி காட்சிகளை எடுத்தவர்களை கைது செய்துள்ளதாகவும்,இது அலைபேசிகளில் பதிவாகியுள்ளதாகவும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தேர்தல் முறைக்கேடுகள் – 06 வேட்பாளர்கள் உட்பட 191 பேர் கைது !

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 ஆகும்.
இதேவேளை, தேர்தல் தொடர்பாக 168 முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இதில் 30 குற்றப் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 138 முறைப்பாடுகளும் அடங்கும்.

சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். – உதயகம்பன்பில காட்டம் !

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

பதுளையில் சுற்றுலா பேருந்து விபத்து – 03 மாணவிகள் உயிரிழப்பு !

பதுளை – மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனை பக்கமாக சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

குறித்த விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும், இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதில் காயமடைந்த 39 பேர் வரை பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் – இராமலிங்கம் சந்திரசேகரன்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயம் நீக்கப்படும் என்று அந்த்க கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாது என்று தொடர்ச்சியாகச் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் ஒரு பதற்றநிலையை ஏற்படுத்துவதுடன், எமக்கு எதிராக அவதூறையும் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் இவ்வாறான கருத்துக்களை போலியாகவும், திரிவுபடுத்தியும் கூறி வருகின்றார். இது ஆரோக்கியமானது அல்ல. நாம் ஆட்சிக்கு வந்தால் (தேசிய மக்கள் சக்தி) பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். இந்தச் சட்டத்தின் கொடுமையை, இந்தச் சட்டம் தரும் வலியை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆதலால், அதை நிச்சயம் நீக்கியே தீருவோம்.

இது எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், மாகாணசபைத் தேர்தல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நடத்தப்படாது என்றும், மாகாணசபைத் தேர்தல்களை தேசிய மக்கள் இல்லாமல் செய்யும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மையில் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் திரிவுபடுத்தப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும். முடியுமான விரைவில் நாம் அவற்றை நடத்துவோம். அத்துடன், தமிழ் அதிகாரிகளின் நியமனங்களை நாம் மேற்கொள்வோம். தமிழர்கள் தமது தேவைகளுக்கு கொழும்புக்கு ஓடிச்செல்லாமல், யாழ்ப்பாணத்தில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.- என்றார்.