04

04

கருணா – பிள்ளையான் கட்சிக்காரர்கள் இடையே மோதல் – மூவர் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசதுரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

 

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

 

இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் ஒட்டப்பட்டிருந்த கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

 

இதன்போது கருணா தரப்பின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து பின்னர் கைகலப்பாகமாறியுள்ளது.

 

இதனையடுத்து கருணா தரப்பின் ஆதரவாளர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.

 

படுகாயமடைந்தவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனுக்கு எதிராக சால்ஸ்நிர்மலதான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலதான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்
நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.
இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் இன்று நான் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுபாக முடியாது.
என்பதை நான் அன்மையில் ஒரு ஊடகவியளாலரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன் ஆனாலும் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகவும் அது முற்றிலும் பொய் எனவும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்திகாரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா இல்லையா என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிகாட்டினார்
குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலைபுலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்மந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்மந்தன் ஐயாவுக்கு எழுதியிருதேன்
அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன் அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே
அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார் இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்
அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்மந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வரமுடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்
இப்பிடியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமைகாரணமாகவே இளைஞர்களுக்கு வாய்பு வழங்கு தேர்தலில் போட்டியிடவேண்டாம் என தீர்மானித்திருந்தேன்
சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன் இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது
என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபடவேண்டும் ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது
ஆனாலும் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.
அதே நேரம் சுமந்திரனுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன் நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசும் செய்யவில்லை எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிறுந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்
அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்
சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்தே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கின்றேன் எனவும் தெரிவித்தார்

மக்களின் குறைகளை நேரில் கேட்டறிய முல்லைத்தீவிற்கு ஆளுநர் விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் – பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி பயன்பெற்றனர்.

இதேபோல் மன்னார், வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை இடம்பெற உள்ள திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

வடக்கில் மதிப்பீடுகள் இல்லாமல் இராணுவ முகாம்களை அகற்றல் முடியாது – பாதுகாப்பு அமைச்சு !

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.

 

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இதனை தெரிவித்தார். ‘வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

 

இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப்பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசணையுடன் முப்படையும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

 

இது தொடர்பில் இராணுப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமையவே வீதி திறக்கப்பட்டது.

இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் சென்றதால் மூடப்பட்டிருந்தது. தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை. எனவே வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என அவர் கூறினார்.

 

 

நிறுத்தப்பட்டது இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

 

கடந்த மாதம் 23 ஆம் திகதி தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர் திருப்திக்கான உயர் மதிப்பைப் பேணுவதற்கும், நிறுவனத்திற்கு நியாயமான லாபத்தைப் பெறுவதற்கும், அதில் சமூகப் பொருளாதாரத்திற்கு உயர் நன்மைகளைப் பெறுவதற்கும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

அதேபோல், மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை தனியார்மயமாக்காமல் முழுவதுமாக அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீன அமைப்பில் செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஒற்றை வாங்குபவர் மாதிரியில் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளின் நிதி மற்றும் செயல்பாட்டு நிர்வாகத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான பொறிமுறையை நிறுவவும் முன்மொழியப்பட்டது.

 

அதேபோல், அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையை பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவைக் கொண்ட நாடாக மாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.