08

08

முன்பள்ளிகளை கல்வி அமைச்சுக்குள் சேர்க்க முன்மொழி – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகின்றார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் நல்ல பாடசாலைகள் மற்றும் மோசமான பாடசாலைகள், பிரபல பாடசாலைகள் மற்றும் பிரபலமற்ற பாடசாலைகள் என பிரிப்பதேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதன்படி, பள்ளிகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் என்றும், அதற்காக அரசு கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

 

மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலம் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள் அல்லது எழுதக் கற்றுக்கொடுக்கும் நேரம் அல்ல என்றும், தேர்வுக்குத் தயாராகும் நேரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

தமது ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் கல்விக் கல்வி முறையில் எட்டாம் வகுப்பு வரை போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

 

கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் படையின் முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதுபான சாலைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட சிறீதரன்..?- ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட கடிதத்தால் பரபரப்பு!

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,  மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் விசமப் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக இன்றையதினம் (08) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும் பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றையதினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன.

அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள்.

அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொ காலமானார்!

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) நேற்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் ‘தமிழ் நிதி’ விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது.

‘மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று’ என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.பி.பியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல, அது ஐந்து வருடங்களுக்கானது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றஞ்சாட்டி வருவதற்குப்  பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்கள் ஐந்தாண்டுகளில் பூர்த்திசெய்வதற்கானதாகும். சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று, ஐந்து வாரங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.

நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்ததை வைத்து அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய நிலையில், இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர். இருப்பினும் தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குகின்றனர். நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம். ஊழல்மிக்க அரசியல் கலாசாரம், மோசடி போன்ற விடயங்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களுக்கான இறுதி திகதி அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11-11-2024) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது. வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை மீறி செயற்படுவது சட்டவிரோத செயலாகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் ட்ரம்ப் – புடின் வாழ்த்து !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு தைரியசாலி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஒரு வணிகர் ஆவார். அவர் அரசியலில் போதியளவு அனுபவத்தை கொண்டவர் அல்ல என்பதால் சில தவறுகளை அவர் விடலாம்.

எனினும், அவர் மீது உயிரை பறிக்கும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக புடின் கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் எனவும் புடின் விளக்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப்பை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாம் எதுவிதமான பொய்களையும் கூறவில்லை – ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

நாம் மக்களுக்கு எவ்வித பொய்களையும் கூறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் எவ்வித பொய்களையும் மக்களிடம் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவ்வாறு ஏதேனும் பொய்யுரைத்திருந்தால் அதனை அம்பலப்படுத்துமாறு சவால் விடுப்பதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் – ஜனாதிபதி அனுர குமார உறுதி !

புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

‘எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசியலமைப்புகள் தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பரி அரசமைப்பு, 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

 

 

புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும். புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும். கோத்தாபய ஆட்சிக் காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.

 

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசியலமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்’ – என்றார்.