09

09

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கலாம் – ஜனாதிபதி அநுர குமார

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்தை வைத்திருந்த ஜனாதிபதி, மாமாவிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை எதிர்பார்த்தார். ஆனால் இந்நாட்டு மக்கள் செப்டம்பர் 21 அன்று அந்த ஊழல் மற்றும் நாசகார குடும்பங்கள் அனைத்தையும் தோற்கடித்து சாதாரண மக்களுக்கு அதிகாரத்தை மாற்றினர். அந்த ஊழல்வாதிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் தங்களது வாழ்நாள் காலத்தில் இவ்வாறானதொரு சம்பவமொன்று நடக்கும் என்று, எவ்வாறாயினும், மீண்டும் அவர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமது அரசின் மிக முக்கியமான திட்டம் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகும். நல்ல கல்வியையும் அறிவையும் அரசால் வழங்க முடியுமானால், அந்த குடும்பம் ஏழைக் குழந்தையைப் படிக்க வைத்து அவர்களின் வறுமையில் இருந்து மீண்டு வருவர். ஆனால் அந்தக் குடும்பம் ஏழ்மையானதாகவும், குழந்தை படிக்காதவராகவும் இருந்தால், அந்தக் குடும்பம் ஏழ்மையானது, இது சுழற்சி வறுமையின் நெருக்கடியாகும். எனவே, கல்வியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பாடசாலையை விட்டு வெளியேறும் வகையில் எதிர்காலத்திற்கான கல்வி அல்லது தொழில்முறை பாதையில் வர வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்களிக்காதவர்கள் இருந்தனர். சிலருக்கு சிறு சந்தேகம் இருந்தது. அவநம்பிக்கை ஏற்பட்டது. தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது… தோழர்கள் என்று அழைக்கிறார்கள்… அப்போது எங்களுக்கு வாக்களிக்காதவர்கள்தான் தற்போது தேர்தல் பணியின் போது அதிக அளவில் உதவுகிறார்கள்.“ என தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் குண்டுவெடிப்பில் 25 பேர் பலி !

பாக்கிஸ்தானில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குவாட்டா நகரிலிருந்து பாக்கிஸ்தானின் பெசாவர் நகருக்கு செல்லவிருந்தவேளையிலேயே புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது என தெரிவித்துள்ள அதேவேளை பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

சுதந்திரம் மற்றும் வளங்களிற்கான போராட்டம் இடம்பெறும் இந்த பகுதியில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆறு முதல் எட்டு கிலோ வெடிமருந்தினை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,348 முறைப்பாடுகள் !

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை) 2,348 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 615 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,678 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

 

“அனுர தரப்பு ஊழலற்றவர்கள் தான் இருந்தாலும் தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.” – எம்.ஏ.சுமந்திரன்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

கனடா அரசின் புதிய கட்டுப்பாடுகள் – வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடி !

கனடா அரசு, திடீரென நேற்று பிரபலமான SDS எனும் மாணவர் விசா திட்டம் ஒன்றை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா அரசு, மாணவர்கள் விரைவாக கல்வி விசா பெற உதவும், Student Direct Stream (SDS) என்னும் திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

வழக்கமாக மாணவர்கள் கல்வி விசா பெற 2 முதல் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இந்த SDS திட்டம் மூலம், சில நிபந்தனைகளின் பேரில், 4 முதல் 6 வாரங்களுக்குள் விசா பெற்றுவிடலாம்.

வீடு தட்டுப்பாடு பிரச்சினை மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, கனடா அரசு சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், தற்போது Student Direct Stream திட்டத்தையும் திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.