13

13

நிதி மோசடியில் ஈடுபட்ட வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் கைது !

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான சந்தேகநபர் நேற்று (12.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குருநகரை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றி 5 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்க நடவடிக்கை !

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.

மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது.

கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆகக் குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

எனினும் இதற்கு அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.இந்த சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலைமை பெண்களுக்கு ஏற்படும் என்றும் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த சட்டவரைபை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளின் பின் நீக்கப்பட்டது ஆணையிறவு சோதனைச்சாவடி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன.

1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.

இந்நிலையிலேயே தற்போது சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை சாவடி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா!

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23 திகதி அமெரிக்க தூதரகம் குறித்த பயணக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் !

ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.

 

219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

 

வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனுக்கான நிவாரண உதவிகளை தடுக்கும் இஸ்ரேல்!

காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்காலப் பிரிவு தலைவா் லூயிஸ் வாட்டரிஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸாவுக்குள் தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது. அந்தக் கெடு முடியும் நிலையிலும் போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

 

 

அதற்குப் பதிலாக, பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறியுள்ளது என்றாா் அவா்.

 

முன்னதாக, காஸாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் 12-ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

 

 

காஸா உயிரிழப்பு 43,665: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது.

 

 

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 போ் உயிரிழந்தனா்; 147 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு ஒக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,03,076 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகளை பெறாத மூன்று லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள்!

பொதுத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

 

எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் தபால் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துமீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுகூறிய அனுர குமாரவை சாடும் நா.த.க சீமான் !

இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர கூறியுள்ளமை தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.