15

15

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது,கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும்,நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும் கட்;டுப்பட்டவனாகாயிருக்கின்றேன் இந்த விடயத்தில் நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன்,

மக்கள் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்திருக்கின்றேன்.

10க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட தமிழ்மக்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல்,ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

 

அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார்.

 

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

 

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், முதன்முறையாக அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

 

அதேபோல்,வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

 

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மலையகத்தில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெண்கள்!

நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.

12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து அம்பிகா சாமுவேல், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஸ்ணன் கலைச்செல்வியும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மலைய பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்புமுனையாக உள்ளது .

அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்; இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!

 

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!

சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி யாழில் மூன்று ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி வீடு, தமிழ் காங்கிரஸ் சைக்கிள், ஊசி சுயேட்சைக் குழு தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு வீடு எம் ஏ சுமந்திரன் அல்லது சிறிதரன் தங்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டுள்ளார்க்ள். ஈபிடிபி வீணை டக்ளஸ் தேவானந்தா, ரஎம்விபி பிள்ளையான் ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். சங்கு இத்தேர்தலில் தன்னுடைய அத்தனை பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் தன்னுடைய ஆசனத்தை தக்க வைத்துள்ளார். வன்னியில் திசைகாட்டிக்கு இரண்டு ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் சங்குக்கு ஒரு ஆசனமும் கங்காருவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி சங்கில் போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்தனர். வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளிலும் போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் மண் கவ்வினர். வீட்டிலிருந்து பிரிந்து சென்ற சைக்கிளில் சவாரி செய்து அதிலிருந்து பிரிந்து மானில் நின்றவர்கள் யாவரும் தோல்வியடைந்தனர். சைக்கிளில் டபிள்ஸ் போனவர்கள் இப்போது சிங்கிளாகத்தான் போகவேண்டியுள்ளது. இதில் இனி யார் போறது என்ற சண்டை உருவாகி சைக்கிள் திருப்பியும் உடையலாம் எனவும் தகவல்கள் கசிகின்றது. சைக்கிளில் டபிள்ஸ் சென்ற செல்வராஜா கஜேந்திரன் ஆசனங்களை இழந்துள்ளர். தபால் பெட்டி கட்சியில் நின்ற ராமநாதன் அங்கஜன் முகவரியற்றுப்போனார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை கிலுகிலுப்பாக சுவாரஸ்யமாக வைத்திருந்த ஊசிக்குழு இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது. அண்மைய வரலாற்றில் சுயேட்சைக் குழவில் ஒருவர் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருப்பது இதுவே முதற்தடவை. நேற்று மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்றும் அர்ச்சுனா பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். ஒரு ‘கொமடிப்பீஸ்’ ஆக மாறிவரும் அர்ச்சுனா தனது சொந்தக் குடும்ப விவகாரங்களையும் சமூக வலைத்தளத்திலேயே பதிவேற்றி வருகின்றார். அவருடைய படுக்கையறையும் கழிவறையும் மட்டுமே இன்னமும் சமூகவலைத் தளங்களில் வரவில்லையெனப் பலரும் நகைக்குமளவுக்கு அவர் ஒரு சமூகவலைத்தளப் பிரியராக உள்ளார். மருத்துவ மாபியாக்களை எல்லாம்விட்டுவிட்டு இப்போது அவர் மாப்பிளை மாபியாவாக பாராளுமன்றம் செல்ல உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறாரோ இல்லையோ அரசியலை சுவாரஸ்யமாக்கி தமிழ் மக்களை முட்டாள்களாக்கிவிடுவரோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழவதும் சராசரியாக மூன்றில் ஒரு மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பதால் சிலர் தங்களுடைய வாக்குகள் அவசியமில்லை எனக் கருதியிருக்கலாம். இன்னும் சிலர் வயோதிபம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு போய்வருவதற்கான வசதிகள் இல்லாததால் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விட்டுள்ளனர். மேலும் கணிசமான வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க செல்லாத வாக்குகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் என்பிபி அலையை முடக்கிவிட்டதில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்களிப்பு கணிசமானது. ஒரு குறுகியகாலத்தில் தெற்கில் இருந்த என்பிபி அலையை வடக்குக்கும் மடைமாற்றி விட்டவர் இராமலிங்கம் சந்திரசேகர் என்பதை ஜனாதிபதி அனுராவும் யாழ் வந்திருந்த போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் மற்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த வீதிகளைத் திறப்பது, காணிகளை விடுவிப்பது, மாகாணசபையை அமுல்படுத்துவது போன்ற தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை கட்சியின் மேல்மட்டங்களுக்கு கொண்டு சென்றதில் வடக்கில் ராமலிங்கம் சந்திரசேகரும் கிழக்கில் அருண் ஹேமசந்திராவும் குறிப்பிடத்தக்கவர்கள். இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார். அருண் ஹேமச்சத்திரா திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருவரும் நவம்பர் 21 இல் கூடும் புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருண் ஹேமச்சந்திரா ஜேவிபி – என்பிபி க்குள் வளர்ந்து வருகின்ற மூவின மக்களாலும் வரவேற்கப்படுகின்ற ஒரு தலைவராக வளர்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்திற்கும் அவர் வரலாம் என சிலர் கட்டியம் கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத் தேர்தல் அது நேற்று முடிவடைந்துவிட்டது. அடுத்து பிரதேச சபைத்தெர்தலுக்கு நாடு தயாராகப் போகின்றது. ”வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மக்களைச் சேரும்” என்ற களிப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனவரியில் பிரதேச சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த உள்ளது. பாரானுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதால் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கள்ள ஒரே தடை பொருளாதாரமே. ஆனால் அதற்கான மாற்றுவழிகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். நவம்பர் 21 முதல் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி நாடு நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வெற்றி வேட்பாளர் விபரங்கள்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் தனிப்பட்ட விருப்பு வாக்குகளின் தொகை தொடர்பான விடயங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டம் மக்கள் தெரிவு.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 15135

சிவஞானம் சிறீதரன் 32833

கருணானந்தன் இளங்குமரன் 32102

சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா 20130

ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 1757

இராமநாதன் அர்ச்சுனா 20487

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கை முழுதும் சமாந்தரமாக பெற்ற வெற்றியை மீள அனுர தலையிலான என்.பி.பி பெற்றுள்ளது – இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

 

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கூறியது போல் கடந்த காலங்களில் அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர்.எனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இயற்றுவதற்கான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஊழலைச் சமாளிக்கவும், தேசிய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இயற்றவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் எதிர்பார்க்கும் வாக்காளர்களின் அசாதாரண எதிர்பார்ப்புகளை புதிய ஆட்சி நிர்வகிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைமையானது, அதன் புதிய மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் அமைச்சர்கள் கட்சி இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதையும், அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

மக்களால் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களின் தலைவிதியை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே புதிய அரசாங்கம் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்;. இலங்கை அரசாங்கம் மீண்டும் தோல்வியடைவதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிசெய்து பாராளுமன்றத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

 

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

முன்னாள் அமைச்சர்களை தூக்கி வீசிய இலங்கை மக்கள்!

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை இழந்து வெளியேறியுள்ளனர்.

 

அந்த வகையில் இதுவரை ஆட்சிசெய்து தற்போது வெளியேறிய முன்னாள் எம்.பிக்களின் விபரங்கள் பின்வருமாறு…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி ஆதிக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய,

இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

மண் கவ்வியது தமிழ்தேசிய கட்சிகள் – தேசிய மக்கள் சக்தி வசமானது யாழ்ப்பாணம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 63,327 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 22,513 வாக்குகள்