16

16

“தலைநகரில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம் – மூன்றாக அதிகரித்த முஸ்லீம் பிரதிநிதித்துவம்” – மனோகணேசன்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக செயற்பாடுகளாகும்.

ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை.

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற நான் ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு “வெற்றி பெறாமை” என்ற சூழலை எதிர் கொண்டேன்.

பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்களை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள்!

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்!

எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஏ.ஆர்.வி.லோஷன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்!

இந்நாட்டின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவர் மொரட்டுவை வேல்ஸ் குமரி கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.

தலைநகர் கோட்டையில் சரிந்தது சஜித்பிரேமதாசவின் பலம் !

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.

 

2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

 

அதன்படி, 2020 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.

 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பல கோட்டைகளின் பலத்தை முறியடித்து இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

கொழும்பு வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு போன்ற பல தொகுதிகள் நீண்ட தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த சிறப்பு கோட்டைகளாக இருந்தன.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கோட்டைகளில் வெற்றிப் பெற்றிருந்த போதும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியி குறித்த கோட்டைகளை தம்வசம் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளது.

 

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக இருந்த கொழும்பில் உள்ள பல தொகுதிகளின் அதிகாரமும் இம்முறை சஜித் பிரேமதாசவிடம் இருந்து பறிபோயுள்ளது.

அனைவரையும் இணைத்து செயற்பட அழைக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில்,ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இனப்பிரச்சினை குறித்தும், அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடையங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

 

குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும்.

 

மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல்,எமது நிலங்கள் பரிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல்,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்கிறார் நாமல்ராஜபக்ச !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷவை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை – மகிந்த ராஜபக்ச நம்பிக்கை!

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வுப் பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், தேர்தலில் நாம் எதிர்ப்பார்த்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் எமக்கு எதுவும் பிரச்சினையில்லை. புதியவர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியை தேர்தலில் வெற்றிபெற செய்தவர்கள் இந்த நாட்டு மக்கள். நாங்கள் மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றோம்.

 

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிவருகின்றோம்.

அதேபோல் அரசியலில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கில் நிராகரிக்கப்பட்ட ஒரு லட்சம் வரையிலான வாக்குகள்!

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 1,95,886பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,02,382 பேரில் 15,329பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 2,87,053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3,15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,18,425பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 2,04,888பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை )5,55,432வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,80,523பேர் வாக்களித்த அதேநேரம் 1,74909 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 3,80,523 பேரில் 17,599 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 3,62,924பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .