19

19

தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் ஆதரிப்பது பிரிவினைவாதத்துக்காகவே – விமல் வீரவங்ச எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைத்துள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  பிரிவினைவாதத்துக்கு சார்பாகச் செயற்பட்டுவந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக , தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை இதன்மூலம் மக்கள் வழங்கியுள்ளனர் . ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணம் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கான எமது பொறுப்பை நாம் என்றும் கைவிடப்போவதில்லை . அந்தப் பயணம் தொடரும். பிரபுக்கள் அல்லாத தரப்புகள் வசம் ஆட்சி சென்றுள்ளது . அதை வரவேற்கின்றோம். டயஸ்போராக்கள் மற்றும் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் பயணித்தால் ஆதரவளிக்கப்படும் . அவ்வாறு இல் லையேல் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்றார்.

அனுர ஆட்சியில் மீளவும் இனவாதம் தலைதூக்கவுள்ளது – எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும், இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

மேலும், புதிய அரசமைப்பு வரைபுக்கு எதிராக, அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்புக்கு முரணானது என்ற பலமான செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

 

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் இல்லை – பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

 

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

 

இது தவிர, வருகை கொடுப்பனவாக பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

 

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

 

மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

 

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் குறிப்பிட்டார்.

2024ல் சுற்றிவளைப்புக்களில் 18000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இந்த வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புடன் 18 ஆயிரத்து 790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

 

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் கைப்ற்pயதுடன் அப் படகில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டு நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

குறித்த மீனவர்கள் 23 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட கந்தர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல நாள் மீன்பிடி படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

IMFஉடன் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார தெரிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

 

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.

 

அத்துடன் கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

 

நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

 

அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவனரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

 

இதில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.

யாழில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாம் – உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து பதின் நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ள நிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தியிருந்ததுடன், நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.