21

21

10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி !

10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ள இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மீனவர் தினம் – ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிய முல்லைத்தீவு மீனவர்கள் !

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை(21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மீனவர் தினமாகிய கார்த்திகை 21ஆம் திகதியான இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிய தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விசேடமாக முல்லைத்தீவு மாவட்டம் இந்திய மீனவர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீறல்களும், முல்லைத்தீவு கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும் இந்திய இழுவை படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று பாரிய நட்டத்துடனே தமது வாழ்வினை கழித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிற்கு முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் பெயர், முகவரி பொறிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையினை அனுப்பி வைக்கும் முகமாக இன்றையதினம் 500க்கும் மேற்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே குறித்த தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. – கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றினார்.

மேலும்,சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தமது கொள்கை உரையில் பேசிய ஜனாதிபதி

மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்.

இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக செயற்படும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நாட்டில் யாரும் நீதிக்கு மேன்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கமே அதிகப்படியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மக்கள் பெரும்பான்மையான ஆணையை வழங்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், நாடாளுமன்றின் கௌரவத்தை பேணுவது முதலாவது கடமையாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன், வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

 

தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

 

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை தாக்கி கொலை செய்த நபருக்கு 12 ஆண்டுகளகன் பின் மரணதண்டனை!

தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

நீதிபதி பி. குமரன் ரத்னம் அவர்களின் ஒப்புதலுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை மற்றும் ஒருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜுலம்பிட்டிய அமரே தன்னை விடுவிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். மேல் நீதிமன்ற விசாரணையில் பிரதிவாதி சமர்பித்த சாட்சியங்களை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என அந்த மேன்முறையீட்டில் பிரதிவாதி குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட மரண தண்டனையில் தமது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிசெய்யப்படுவதாகவும், அது தொடர்பான மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது.

யாழில் 34 ஆண்டுகளின் பின்னர் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்!

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயரத்துக்கு 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.