22
22
லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வழங்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி வரும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய பாடசாலை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளுக்காக சிவஜோதி ஞாபகார்த்த விருதுடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களையும் – சமூக செயற்பாட்டாளர்களையும் அன்புடன் லிட்டில் டெக் அக்கடமியின் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.
ரஷ்யா – உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது’ என ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா – உக்ரேன் இடையே இடம்பெற்றுவரும் போரானது 1,000 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.
இப்போரில் ரஷ்யாவின் கை ஓங்குவதை தடுக்க, அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட துாரம் பயணித்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரேன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி உக்ரேன் இராணுவமும், அமெரிக்கா மீது நீண்ட தொலைவு செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ”இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது எனவும், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு எனவும், சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
1966 இல் நிறுவப்பட்ட சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, வியன்னாவை தலைமையகமாகக் கொண்டதுடன், சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட அமைப்பாகவும் விளங்குகிறது.
வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் அடிப்படைப் பணிகளாகும்.
சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவானது, தனது உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது.
குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிய பசுபிக் குழுவில் ஆசனமொன்றிற்குப் போட்டியிட்டு மொத்தமாக 177 வாக்குகளைப் பெற்றது.
இது குழுவிற்குள் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்தொரு உறுப்பினர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக வாக்குகளாகும்.
மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகியவை ஆசிய பசிபிக் குழுவிலிருந்து, சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பு நாடுகளாகும்.
இதில் இலங்கையானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஆறு (6) வருட காலத்திற்கு பணியாற்றவுள்ளது.
இலங்கை இதற்கு முன்னர் 2004 – 2007 மற்றும் 2016 – 2022 ஆகிய காலப்பகுதிகளில் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் பெறுமதியான காசோலைகளை வழங்கி இரண்டு கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டக்ளஸ் தேவானந்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் மேலதிக நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை கொடுத்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரனிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாவது சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த சாட்சி கடந்த அமர்வில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இரு தரப்பினரின் பிரச்சினைகளையும் பரிசீலித்த மேலதிக நீதவான், அவருக்கு பிடியாணை பிறப்பித்து, முறைப்பாடு விசாரணையை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது பிரதியமைச்சுக் கடமைகளை பொறுபேற்றுக் கொண்டார்.
பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் இன்று(22.11.2024) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுபேற்றார்.
பெருந்தோட்டமக்கள் 200 வருட காலம் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும். இந்நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதியமைச்சரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், காணொளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.
இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்தோடு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அடை மழை காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது.
இதில் 175 புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்படுவதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாகனங்களுக்காக 2.8 பில்லியன் ரூபாவை வாரி இறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் இந்த தொகை பொருளாதார நெருக்கடி காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச காலத்தில் இன்னமும் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.