05

05

இன்றைய செய்திகள்: 05.12.2024 மகாவலி வந்தால் பிரச்சினை – ‘பார் பெமிட்’ வந்தால் சுயநிர்ணயம் வந்தமாதிரி !

இன்றைய செய்திகள்: 05.12.2024

மகாவலி வந்தால் பிரச்சினை – ‘பார் பெமிட்’ வந்தால் சுயநிர்ணயம் வந்தமாதிரி !

மக்களிடம் சொன்னதை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் சொன்னார் ஜனாதிபதி !

 

1. தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழு – ஜனாதிபதி சந்திப்பு: மக்களிடம் சொன்னதை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் சொன்னார் ஜனாதிபதி !

ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி புதிதாக எதுவும் சொல்லவில்லை. வாக்குறுதிகளும் வழங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் என்ன சொல்லப்பட்டதோ அதனை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் ஜனாதிபதி அனுரா சொல்லியுள்ளார். ஜனாதிபதி அநுரவை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஒரு மணிநேரம் கலந்துரையாடியுள்ளனர். வடக்கு, கிழக்கில் தெரிவு செய்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ராசமாணிக்கம் சாணக்கியன்;, ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். “இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில் கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார். 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நீதிமன்ற உத்தரவின் படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்” என்றும் பா உ சிறிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பா உ சிறிதரன் மேலும் குறிப்பிடுகையில் காணாமற்போனோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும் படிப்படியாக அந்த விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

2. ஊழலற்ற ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தை வரவேற்கின்றோம் – உலகவங்கி

ஊழலற்ற ‘சுத்தமான இலங்கை’ க்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர். சுத்தமான இலங்கை திட்டத்தை வரவேற்றுள்ள ஐயர், இதுவைர இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ள திட்டங்களை எவ்வித தடையுமின்றி தொடர்வோம் எனவும் மேலும் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் உலகவங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி அனுரவுடன் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, பிரதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சருமான கலாநிதி ஹார்சன சூரியப்பெருமா ஜனாதிபதியின் செயலாளர் நத்திக சனத் குமாரநாயக்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி அனுரா தன்னுடைய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை உலகவங்கியோடு கலந்துரையாடினார். கிராமப்புறங்களில் வறுமையை இல்லாதொழிப்பது, பொருளாதாரத்தை எண்ணியப்படுத்துவது – டிஜிற்றலைசேசன், எண்ணிய அடையாள அட்டை டிஜிற்றல் ஐடி காட் என்பன பற்றி ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறிப்பாக மலைநாட்டு மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைக் கையாள்வது பற்றியும் உரையாடப்பட்டுள்ளது. விவசாயம். மீன்பிடி, சுற்றுலாத்துறை, கல்வி, சுகாதாரம் என்பவற்றின் வளர்ச்சி தன்னுடைய அரசாங்கத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என ஜனாதிபதி அனுர சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவற்றை மேற்கொண்டு பார்ப்பதற்கான ஆலோசணைக் குழுவை அமைக்க உலக வங்கி தயாராக இருப்பதாக பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.

3. 13வது திருத்தச் சட்டம் யாருக்கு லாபம்!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை கொஞ்சம் கூட முஸ்லீம் மக்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை என சட்டத்தரணியும் – சமூக செயற்பாட்டாளருமான சைய்ட் பஷீர் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களும் – தமிழ் அரசியல்வாதிகளும் தங்களை பெரும்பான்மை சிங்களவர்கள் அடக்குகிறார்கள் என கூறிக்கொண்டே தங்களுக்குள் உள்ள இன்னுமொரு இனத்தவர்களான தமிழ்பேசும் முஸ்லீம்களை – அவர்களின் அரசியல் உரிமைகளை கிஞ்சித்தும் கணக்கெடுக்காத துயரம் தொடர்கிறது. புலிகளின் வழியில் முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் தொடர்வதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் ஓர் இணைப்பான சூழல் உள்ள நிலையில் முஸ்லீம் எதிர்ப்பை சூசகமாக வெளிப்படுத்தியே இரா.சாணக்கியன் தன் பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக் கொண்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு கொஞ்சமும் சாதகமான சூழல் இல்லாத மாகாண சபை முறையை தமிழ்தேசிய அரசியல் தரப்பு மீள மீள வலியுறுத்தி வருகிறது. கிழக்கில் தமிழ், முஸ்லீம், சிங்கள் மக்கள் சரிக்குச் சமனாக ஒவ்வொருவரும் உள்ளனர். ஆனால் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லீம்கள் 18 வீதமாகச் சிறுபான்மையினராக்கப்பட்டனர்.

தமிழர்களுக்கான தீர்வு என இந்திய நலன்விரும்பிகள் எதிர்பார்த்த மாகாண சபை முறை முழுவதுமாக ஊழல் நிறைந்ததாகவும் – பக்கச்சார்பாகவும் காணப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்த அமைப்பாக மாறியது அறிந்ததே. இதேநேரம் தமிழர்களை காக்க வந்த மீட்பர் என கஜா – கஜா அணியினர், தமிழரசுக் கட்சியினர் பதவியேற்றிய நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியையும் அனுபவித்து பார்பேர்மிட் பெற்றது தான் மிச்சம். இதேவேளை 13ஆவது திருத்தம் வேண்டாம், மாகாண சபை வேண்டாம் என கூறி தெருத்தெருவாக கோசமிட்டு திரிந்த கஜா – கஜா அணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது. இப்படியான நிலையில் எந்த பயனுமே இல்லாத மாகாண சபை முறையை நீக்கி அதற்கு மேலான அதிகாரங்களுடன் கூடிய ஓர் அரசமைப்பு முறையை கொண்டுவர எண்ணுகிறோம் என தேசிய மக்கள் சக்தி கூறியதற்கு தான் இத்தனை எதிர்ப்புக்களை முன்வைக்கின்றனர் குறுந்தேசியவாதிகள்.

இந்த நிலையில் தேசம் நெட் நேர்காணலில் பேசிய சட்டத்தரணி சைய்ட் பஷீர் “மாகாண சபை முறையால் முஸ்லீம்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மாறாக அது புதிய பல சிக்கல்களைத்தான் தோற்றுவித்தது. இதனாலேயே மூத்த அரசியல்வாதி அஷ்ரப் 13ஆவது திருத்தம் முஸ்லீம்களின் மீது எழுதப்பட்ட அடிமைசாசாசனம் என கூறுகிறார். தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க கூடிய ஓர் அரசியலமைப்பு முறையை உருவாக்க எத்தனிக்கிறது. அதற்கு சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் இடமளிக்க வேண்டும் என்கிறார். இதேவேளை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , இன்னும் மூன்று வருடங்களில் தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும். அனைத்து தரப்பினருடனும் பேசியே அரசியலமைப்பு பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

4. அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான ஒப்பந்தம் – கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்:

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார். கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க: நீதித்துறையின் மாண்பு மீள உறுதி செய்யப்படும், ஊழல் – பக்கச்சார்பற்ற அரசசேவை முன்னெடுக்கப்படும், இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை, இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை, நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் போன்ற விடயங்களை வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.

 

அவருடைய உரையின் பெரும்பகுதி பொருளாதாரம் மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவது பற்றியுமே அமைந்திருந்தது. பொருளாதார அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்துவது பற்றி தனது கொள்கைப் பிரகடன உரையில் குறிப்பிடுகையில் மேல்மாகாணம் மற்றும் அல்லாமல் பொருளாதார அபிவிருத்தி எல்லா மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு அதன் செல்வம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பகிரப்படும் எனவும் தெரிவித்திருந்தார். சிறுவர்களின் வறுமை ஒழிப்பு கல்வி என்பனவற்றுக்கும் அக்கொள்கைப் பிரகடனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

 

குறிப்பாக் தவிர்க்க முடியாமல் ஐஎம்எப் இன் விதிமுறைகளை அனுசரித்துச் செல்லவேண்டிய கட்டாயத்தையும் ஜனாதிபதி அனுரா குறிப்பிட்டிருந்தார். நாட்டு மக்கள் தேர்தல் வாக்களிப்பினூடாக அரசாங்கத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த ஒப்பந்தப்படி அம்மக்களுடைய நலனின் அடிப்படையில் ஆட்சியை நடத்துவோம் என்ற உறுதியையும் ஜனாதிபதி அனுர தனது கொள்கைப் பிரகடணத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

5. மகாவலி வந்தால் பிரச்சினை – ‘பார் பெமிட்’ வந்தால் சுயநிர்ணயம் வந்தமாதிரி !

புதிதாக மதுபான சாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார். இது பா உ சிறிதரனை குறிவைத்து சுமந்திரனால் எய்யப்பட்ட அம்பா என்றும் அரசியல் அவதானிகள் புருவத்தை உயர்த்துகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பார் பெமிட் கொடுத்தவர்கள் தேர்தலில் நிற்கவே பயந்து ஒதுங்கிக்கொண்டனர் முன்னால் வடமாகாண முதலமைச்சர். மணிவண்ணனின் மான் தோல்வியடைந்ததற்கு இவரே காரணம் என பலரும் விரல் நீட்டினர். ஒதுங்காதவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டனர். சிலர் உச்சிக்கொண்டு திரும்பவும் பாராளுமன்றம் வந்துவிட்டனர்.

 

இப்பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்களை 2024ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார், ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 21, 2024 வரை 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ”மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்களில் 172 அனுமதிப் பத்திரங்கள் குடு4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (றiநெ ளவழசநள) அனுமதிப் பத்திரங்களாகும். இதன்படி வடக்கு மாகாணத்துக்கு 32 அனுமதிப்பத்திரங்களும், கிழக்கு மாகாணத்துக்கு 22 அனுமதிப்பத்திரஙகளும் வழங்கப்பட்டிருந்தது.

 

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான மக்கள் தொகை அதிகமானதும் செறிவானதுமான கொழும்பு மாவட்டத்துக்கு 24 மதுபான சாலைகளும் கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்குமான அனுமதியே வழங்கப்பட சனத்தொகை குறைந்த களிநொச்சி மாவட்டத்தில் 16 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் மதுபானச்சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கில் மட்டக்களப்பு 1, திருகோணமலை 4, அம்பாறை 5 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதியன பா உ எஸ் சிறீதரன் தான் அவ்வாறு எந்த பார் பெமிற்றும் எடுக்கவில்லை என்றும் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் தேர்தலுக்கு முன்னதாக சூழுரைத்திருந்தார்.

 

ஏற்கனவே கிளிநொச்சியின் பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த இடங்களில் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்ற நியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமுறையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மீதும் சமூகவலைத் தளங்களில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைக்க்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

 

சர்வதேசச் செய்திகள்: சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள கொதிநிலைகள் மற்றும் பதட்டங்கள்

 

6. தென்கொரியாவில் இராணுவச் சட்டம் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் பதட்டம் தொடர்கின்றது!

தென் கொரியாவில் டிசம்பர் 03ஆம் திகதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி டிசம்பர் 4 திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து அதிபர் யூன் சாக் யோல் பதவியில் இருந்து விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி இருந்திருக்கின்றது. அதற்குப் பின் இப்போது தான் மறுபடியும் இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவும் அரசியலமைப்பை பாதுகாக்கவுமே இத்தகையை நடவடிக்கையை எடுத்தாக அதிபர் யூன் சாக் யோல் அரச தொலைக்காட்சியூடாக மக்களுக்கு உரையாற்றி உள்ளார்.

 

ஆனால் அதிபரின் மனைவி ஊழல்களில் சம்பந்தப்பட்டதும் இமெல்டா மார்க்கோஸ் போல் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அதனை எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உட்படுத்தியதும் இந்த இராணுவச் சட்டங்களுக்குப் பின்னிருந்த காரணம் எனத் தெரியவருகின்றது. அதனால் எதற்கும் சமாதானம் அடையாத தென்கொரிய மக்கள் அதிபர் யூன் சாக் யோலை பதவி விலக கோரி தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

7. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போய் டொனால் ட்ரம் வருமுன் போர்க்களங்களைத் திறக்கிறது அமெரிக்கா!

 

மறுபுறம் சிரியா உள்நாட்டு போர் தொடங்கி 14 வருடங்களின் பின்னர் இப்போது மேற்கு நாடுகளின் துணையோடு செயற்படும் கிளர்ச்சிப் படைகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஆதரவு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (ர்வுளு) எனும் ஜிகாதிகள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலப்போவை கைப்பற்றியதன் மூலம் காத்திரமான வெற்றியை அடைந்து தொடர்ந்து ரஸ்ய மற்றும் ஈரானிய ஆதரவு ஆட்சியாளர் அசாத் படைகளை சண்டையில் பின்வாங்கச் செய்து முன்னேறி வருகின்றனர்.

 

அசாத்திற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக 2016க்குப் பின்னர் ரஸ்யாவும் வான்வெளியாக விமானத் தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த 2018 முதல் சிரியா, உள்நாட்டுப் போரால் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘பஷர் அல்-அசாத், குர்திஷ் படைகள், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் வெவ்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். சிரிய உள்நாட்டுப் போர் மீண்டும் கொழுந்துவிட்டெரிய அமெரிக்காவின் பைடன் அரசாங்கத்தின் தூண்டுதல் பின்னணியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

ஜனவரியில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ரம் பதவியேற்க முன்னரே பைடன் தனது ஆட்சியின் குறுகிய இறுதிக்காலத்திற்குள் மனித சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிட்டு போகப் போறார் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

இதையே தான் உக்கிரைன்- மற்றும் ரஸ்ய போரிலும் பைடன் செய்துள்ளார். சமீப வாரங்களில் உக்கிரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்து ரஸ்யாவை தூண்டிவிட்டுள்ளார். தற்போது ரஸ்ய மற்றும் உக்கிரைனுக்கிடையிலான யுத்தம் ஐரோப்பிய நேட்டோ நாடுகளுக்கும் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. ஆயுத வியாபாரிகள் வயிறு வளர்க்க உலகெங்கும் ஆயுதமோதல்கள் காலங்காலமாக மேலாதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

8. பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

 

சிறுபான்மை அரசுகளால் ஆளப்படும் மேற்கு ஜரோப்பிய நாடுகள். ஜேர்மனி வரிசையில் பிரான்ஸிலும் நடப்பு பிரதமர் மிஷெல் பார்னியோர் தலைமையிலான அரசாங்கம் டிசம்பர் 4 இல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் கவிழ்ந்தது. இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரான்ஸில் புதிய தேர்தலுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

 

இதேபோன்று கடந்த வாரங்களில் ஜேர்மனியில் ஆளும் ஓலாப் சொல்ஸ் தலையிலான கூட்டணிக்கட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்து எப். டி. பி கட்சி வெளியேறியதை தொடர்ந்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துள்ளது. வரும் வாரங்களில் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளமையும் புதிய தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் தொழில்துறை வீழ்ச்சியால் கடும் பொருளாதார நெருக்கடியை இந்நாடுகள் சந்தித்து வருகின்றன. பிழையான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளால் விரக்கத்தியடைந்துள்ள பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நாட்டு மக்கள் தீவிர வலதுசாரி கட்சிகளின் பரப்புரைகளின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றமை இந்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு இருப்பிற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவுக்கு செல்லவுள்ளோருக்கு செக் வைத்த கனடா – தமிழிலும் வெளியான கனேடிய அரசின் அறிவித்தல் !

கனடாவுக்கு செல்லவுள்ளோருக்கு செக் வைத்த கனடா – தமிழிலும் வெளியான கனேடிய அரசின் அறிவித்தல் !

அண்மைய காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கனடா நோக்கி விசிட் விசாவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதாண்டி கனடா மோகம் தமிழர் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இடையே  ஆழமாக ஊடுருவி உள்ளதை சர்வசாதாரணமாக அவதானிக்க முடிவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வம் மிக்க பின்தங்கிய நிலையை அடைந்துள்ளதாகவும்  கல்வியாளர்கள் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கனடாக்கனவை வளர்த்துள்ள பல இலங்கை வாழ் தமிழர்களுக்கு இடியாய் ஓர் செய்தியை கனேடிய அரசு வெளியிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.

இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் ‘ரொயிட்டர்’ செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது.

அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.  இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – இரா.சாணக்கியன்

அரசு Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார்.

தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு நான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் ரத்னாயக்க அவர்கள் மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் என தெரிவித்தார்.

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். – நாடாளுமன்றத்தில்  உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் !

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். – நாடாளுமன்றத்தில்  உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் !

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும், வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகைள முன்னெடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

பதுளை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.

எமது மலையக சமூகம் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

உரிமைகள் மறுக்கப்பட்டு வெறும் சலுகை கோட்பாடுகளுக்குள் மாத்திரமே மலையக சமூகம் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் எம்மையும் இணைத்துக் கொண்டு அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளது.

200 வருடகால பின்னணியை கொண்டுள்ள நாங்கள் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

மலையக பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி கொள்கையுடைன செஞ்சட்டை அமைப்பை ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் இருந்து நடராஜா என்பவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி அமைப்பினை ஆதரிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமையை பறித்தது.

இதன் பின்னர் மலையக மக்கள் நாட்டுக்குள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு பெருந்தோட்ட மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியது.

கலவரத்தின் பின்னர் ரெட்மானா தொண்டு நிறுவனத்தின் ஊடாக வன்னி, கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் எமது மக்கள் ஈழவாத கருத்தியலுடன் ஒன்றிணைந்து 30 வருடகால போராட்டத்தில் போராளிகளானார்கள். ஆனால் தமிழ் பேரினவாத சிந்தனையுடையவர்கள். 30 வருடகால போர் வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும் , வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

எமது சமூகத்துக்கான காணி உரிமையை வழங்க வேண்டும். 1946 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் காணி அமைச்சராக பதவி வகித்த டி.எஸ். சேனாநாயக்க விசேட சட்டத்தை கொண்டு வந்தார். இந்திய வம்சாவளியுடைய பெருந்தோட்ட மக்கள் வந்தேறு குடிகள் அவர்களுக்கு இந்த நாட்டில் காணி உரிமை வழங்க கூடாது என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் எதிரொலியாக மேல்மாகாணத்தில் உருளவெல்லி தோட்டத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து முழு மலையக பகுதிகளிலும் 21 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என்பது பிரதான கோசமாக காணப்பட்டது.காணி உரிமைக்காக மலையக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிவனு லட்சுமணன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆகவே இந்த இளைஞனின் கனவை நனவாக்குவது தேசிய மக்கள் சக்தியாக எமது கடமையாகும்.காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

மதுவரி அனுமதிப்பத்திரங்களை சட்டத்திற்கு முரணான வகையில் கையாள வேண்டாம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு !

மதுவரி அனுமதிப்பத்திரங்களை சட்டத்திற்கு முரணான வகையில் கையாள வேண்டாம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு !

ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்  பட்டியல்  பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் புதிதாக வேறு மதுபான சாலை அனுமதி வழங்குவதை நிறுத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள  ஜனாதிபதி மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற புலிக்குட்டிகளின் வரிசையில் புதிய புலிக்குட்டியாக இணைந்தார் ஊசி அர்ச்சுனா – முழங்கும்  புலம்பெயர் தேசத்து ஊடகங்கள்!

பாராளுமன்ற புலிக்குட்டிகளின் வரிசையில் புதிய புலிக்குட்டியாக இணைந்தார் ஊசி அர்ச்சுனா – முழங்கும்  புலம்பெயர் தேசத்து ஊடகங்கள்!

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ மாபியாக்களை இனங்காட்டியதன் மூலமாக ஓர் புதிய பயணத்தை இலங்கை தமிழர் பகுதிகளில் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஊசி அர்ச்சுனா தன்னுடைய அதீத மேதாவித்தனத்தால் சமூக வலைத்தளவாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளானார். மேலும் அவரால் முன்வைக்கப்பட்ட சில மருத்துவ குற்றங்களை தாண்டி வேறு எவற்றுக்குமான ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தை உறுதிசெய்தார் ஊசி அர்ச்சுனா.  பாராளுமன்றத்திற்கு சென்ற பிறகாவது ஓரளவுக்கு கேலித்தனங்கள் இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் கதிரைக்கு சண்டை, எதிர்க்கட்சி உறுப்பினர் தாக்கிவிட்டார் என முன்பள்ளி மாணாக்கர்கள் போல முறைப்பாடு என தமிழர் ஓர் தெளிவற்ற நபரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள் என எண்ணுமளவிள்கு நடந்து கொண்டார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருடைய கன்னி உரை 04.12.2024 அன்று ஆற்றப்பட்டது. அதில் மருத்துவ மாபியா தொடர்பான விடயங்களையும் அதற்கு எதிராக தான் போராடியது பற்றியதும் சிறை சென்றது பற்றியும் பேசுவார் என்று பார்த்தால் வழமையான தூண்டிவிடும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் போல தலைவருக்கு வணக்கம், மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்றும் முழங்கிக் தள்ளினார். ஏற்கனவே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை புலிகள் பாணியில் துரோகி முத்திரை குத்தி செல்லும் ஊசி அர்ச்சுனா மாவீரர்கள் பற்றியும் புலம்பெயர் தேசத்து முதலீடுகள் பற்றியும் பேசியதன் மூலம் புலம்பெயர் புலிக்குட்டிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தனது பாக்கெட்டினை நிரப்பு போகிறார் என ஊசி எதிர்ப்பு குழுவினர் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.  இதேவேளை ஊசி அர்ச்சுனாவின் மொழிப்புலமை அவரை ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதனை குறிப்பிட்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இனவாதத்தை யார் தூண்டினாலும் கைதுகள் தொடரும் – ராஜபக்சக்களின் சகா ரேணுக்க பெரேராவும் கைது !

இனவாதத்தை யார் தூண்டினாலும் கைதுகள் தொடரும் – ராஜபக்சக்களின் சகாக்களை எச்சரிக்கிறது என்.பி.பி.

பொலிஸ் விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும்  எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளருமான ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு குறித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவமானது பலத்த அதிர்வலைகளை சில பொழுதுகளில் ஊடகங்களில் ஏற்படுத்தியிருந்தது.  மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவும் – இனவாத கருத்துக்களை தூண்டியமைக்காகவும்  அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக இனவாத மில்லாத ஓர் நாடு என்ற தொனிப்பொருளில் இயங்கிவருவதை தனித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் காட்டி வருகின்றது. பெரும்பாலும் இலங்கையில்  பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை இனங்களின் மீது மட்டுமே கடந்த அரசாங்க காலங்களில் பிரயோகிக்கப்பட்டு  வந்ததுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளோ அல்லது பிரஜைகளோ இனவாத கருத்துக்களை முன்வைத்த போது அதுசார்ந்த கைதுகள் இடம்பெறுவதில்லை. பொலிஸாரும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டனர்.  இந்த நிலையில் முதன்முறையாக பயங்கரவாத கருத்துக்களை முன்வைத்தோம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலும் கைது செய்யப்பட்டு வருவதுடன் தேசிய மக்கள் சக்தியின்  தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களே இனவாத கருத்துக்களை எதிர்ப்பது தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை சிறுபான்மை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத அமைப்புக்களை தோற்கடிக்க வேண்டும் என்றபுலனாய்வுச் சதியின் பின் பொதுக்கட்டமைப்பின் செல்வின், நிலாந்தன், யோதிலிங்கம். ரெலோவின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன்

ஆயுத அமைப்புக்களை தோற்கடிக்க வேண்டும் என்றபுலனாய்வுச் சதியின் பின் பொதுக்கட்டமைப்பின் செல்வின், நிலாந்தன், யோதிலிங்கம்.

ரெலோவின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன்

ரெலோவின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தனுடனான நேர்காணல். இந்த நேர்காணலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டோரின் தோல்விக்கான பின்னணி, அனுர அலை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், பாராளுமன்ற உறுப்பினராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியுள்ள நிலையில் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், உள்ளூராட்சி தேர்தல் கால திட்டமிடல்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.