14

14

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அதிகப்படியான பணம் ஒதுக்கப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி மக்கள் மீதான வரிச் சுமையை குறைப்பதில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது எனவும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கம் செய்யப்படவுள்ளனர்- எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார். வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள்.

கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம்.ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு.

ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது.

தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி.

ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயற்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

அநுரா தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் தமக்குள் இணங்கிக் கொண்டனர்.

என்பிபியின் ‘’ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முழுமையாக நிராகரிக்கும் இவர்கள்’’ ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை கோருகின்றனர். அந்த வகையில் தமிழ் வெகுஜன அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை 2016 இல் முன்னாள் எம்எபி பார்பெமிட் புகழ் சிசி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்களை தொடங்கப் போவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்த முன்னெடுப்புக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே செய்து வருகின்றது. சமீப வாரங்களில் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாதிரித் தலைவர் சிவஞானம் சிறிதரனுடனும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனையும் சந்தித்து தமிழ்மக்களுக்கு சமஷ்டியை கொண்டுவரும் ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.

என்பிபி ஆட்சியை ஆட்டிப்படைக்க சர்வதேச சக்திகள் தமிழ் அரசியல் கட்சிகளை மீண்டும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருவதாகவும் சில அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய, அமெரிக்க தூதரகங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு தமிழ் தரப்புக்களை காலத்திற்குக் காலம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தமிழ் தரப்புக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேசத்திடம் இருந்து வருவதால் இப்போது இவர்கள் பெயரளவில் இணைய முற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேர்தலுக்கு முன் இணைந்து செயல்படுங்கள் என்று கேட்ட போது தங்கள் தங்கள் கட்சிகளுக்கு பத்து ஆசனங்கள் கிடைக்கும் என்று திரிந்தவர்கள் இப்போது மண் கவ்வியுள்ளனர். ‘மாட்டுக்கு ஊர் மாடு சொனால் கேட்காது டெல்லி மாடுகளும் வோஷிங்டன் மாடுகளும் சொன்னால் தான் கேட்கும் போல’ என்கிறார் அரசியல் விமர்சகர் த ஜெயபாலன்.

இச்சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி முறைமைக்கான பொது வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அரசு காணி விடுவிப்புகள், பாதை திறப்புகள் என்பனவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி. அரசியல் கைதிகள் விடுதலையும், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கமும் அவ்வாறே நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைப்பது தொடர்பில் கிழக்கில் பாரிய அளவில் ஆதரவு கிடையாது. வன்னியில் உள்ள மலையகத் தமிழர்களோ, வடக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கோ பெண்களுக்கோ யாழ் சைவ வேளாள ஆணதிக்க அரசியலில் இடமில்லை. இதற்குள் மட்டக்களப்பாரை கொண்டு வந்து அடிமையாக்குவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை புரியும் அமெரிக்கா பிளஸ் நாடுகளையும் இந்தியாவையும் மத்தியஸ்துக்கு அழைப்பது இந்த ஆண்டிகள் மடம் கட்டுகின்ற கதையாகத்தான் முடியும் எனவும் த ஜெயபாலன் குறிப்பிட்டார்

“கனடா கனவுகளுக்கு ஆபத்து இல்லை – தஞ்சம் கோருவோருக்கு தடை இல்லை” – கனடா சட்டத்தரணியுடனான நேர்காணல்!

“கனடா கனவுகளுக்கு ஆபத்து இல்லை – தஞ்சம் கோருவோருக்கு தடை இல்லை” – கனடா சட்டத்தரணியுடனான நேர்காணல்!

இலங்கை தமிழர்கள் அதிகமாக கனடா நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ள நிலையில் கனடா பயணம், அங்கு தஞ்சம் கோருவதில் உள்ள இடர்பாடுகள், விசிட் விசா தொடர்பான நடைமுறைகள் என பல விடயங்களை கனடா சட்டத்தரணி ராஜ்புவன் அவர்களுடனான நேர்காணலில் அலசுகிறது தேசம்திரையின் இந்த நேர்காணல்.

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

“அதிகாரப் பரவலாக்கத்தை மக்களுக்குக் கிட்டவாக கீழ் மட்டம்வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ் மக்களோடு கலந்துரையாடி தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு வரும்வரை மாகாணசபை இயங்கும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட புதிய தீர்வு வந்தால் பழையது இல்லாமல் போகும் தானே” என ஜேவிப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஹிசாம்ஸ் இன்சைட் என்ற சிங்கள காணொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “இனவாதம், மதவாதம் மிகவும் ஆபத்தானது அதனை இல்லாமல் செய்ய, அதனை எதிர்கொள்ள சட்டம் முழுவீச்சுடன், அதன் உச்ச பலத்துடன் பிரயோகிக்கப்படும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்த ஜேவிபின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதனால் தான் ‘இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சமூகவலைப் பதிவுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்தோம்’ எனத் தெரிவித்தார். ‘இந்த இனவாதம், மதவாம் என்பது கொலைகளிலும் மோசமானது எனத் தெரிவித்த அவர் அதனை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்தது போலாகி விடும். நாங்கள் தூரநோக்கோடு இந்த நாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் கட்டி எழுப்புகின்றோம். அதனைப் பலவீனப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார் ரில்வின் சில்வா.

“தமிழ் ஊடகங்கள் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாங்கள் சொன்னதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பாகத் திரித்து வெளியிட்டு வருகின்றனர்” எனவும் ரில்வின் சில்வா தனது நேர்காணலில் குற்றம்சாட்டியிருந்தார். “எங்களுக்கு வாக்களித்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்த ரில்வின் சில்வா, எங்களுடைய வெற்றியை விரும்பாத சிலர், இவ்வாறு உண்மையில்லாத விடயங்களைப் பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ரில்வின் சில்வாவின் பேட்டி தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை ரில்வின் சில்வாவே தன்னுடைய மொழியில் தெரிவிக்கின்றார்:

நேர்காணலை மேற்கொண்டவர், “நீங்கள் ஒரு நீண்ட காலப் போராளி, கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருக்கின்றீர்கள். தற்போது உங்களுடைய கட்சி மிகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. நீங்கள் ஏன் பாராளுமன்றம் செல்லவில்லை, அமைச்சராகவில்லை” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரில்வின் சில்வா, “எனக்கு கட்சிக்குள் பெரிய பொறுப்புகள் இருக்கின்றது, அனுர தோழரின் பொறுப்பு ஜனாதிபதியாக நாட்டை கொண்டு நடத்துவது, பாராளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செய்கின்றார்கள். நான் மட்டும்மல்ல உங்களுக்கு யார் என்று கூடத் தெரியாத பெரும் தொகையானவர்கள் மாவட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் சந்தோசமாக தங்கள் கடமையைச் செய்து வருகின்றார்கள். பாராளுமன்றம் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்று யாரும் கருதவில்லை. தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது. எங்கள் கட்சியில் யாரும் அமைச்சுப் பதவி கேட்கவில்லை. தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லவும் கேட்டகவில்லை” எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் யாழ்ப்பாண மாணவிகள் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் – துணைவேந்தர் சி சற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் என துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சில ஆண்டுகளுக்கு முன் புதிய மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘மாணவிகள் இவர்கள் சொக்லேட் தந்து கூப்பிடுவார்கள், நம்பிப் போய்விடாதீர்கள்’ என்ற கருத்துப்பட குறிப்பிட்டிருந்தார். அதனையே அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் டிசம்பர் 11ஆம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 67சதவீதமான மாணவர்கள் பெண்கள். அவர்களுக்கும் பல்வேறுவிதமான பிரச்சினைகள் உள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சொல்கின்றார்:

“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் நடைபெற்ற “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாட்டில் பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொடர்பான முறையான விசாரணைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. 67 சதவீதமான பெண் மாணவிகளையும் அதிகப்படியான பெண் விரிவுரையாளர்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

ஆனாலும் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு செலுத்துவோராக பாலியல் சுரண்டலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினருமே உள்ளனர். பாலியல் ரீதியிலான பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் அவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லது நீதிகோருவதற்கு நம்பிக்கையான பொறிமுறை பல்கலைக்கழகத்தில் இல்லை. மேலும் பெரும்பாலான பெண் விரிவுரையாளர்கள் இவ்வாறான பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதிபெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை மூடிமறைப்பவர்களாகவே உள்ளனர். அல்லது அவற்றை எதிர்த்து போராடுவதற்குத் திராணியற்றவர்களாக உள்ளனர். இவையெல்லாம் இவ்வாறான பாலியல் குற்றவாளிகள் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற வேடத்தில் உலாவுவதற்கு காரணமாக அமைகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் தம் வாழ்நாள் வடுவாக இவற்றை சுமக்க நேரிடுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெறுமனே சம்பிரதாயத்துக்காகவும் அரசாங்கத்தின் கட்டாயத்துக்காகவும் மட்டும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தக்கூடாது. மாறாக இவ்வாறான பிரச்சினைகளை சமூகப் பொறுப்போடு அணுகி உரிய பொறிமுறைகளை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக பல்கலைக்கழகத்தை மாற்ற முன்வர வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குற்றிப்பாக கலைப்பிரிவில் மிக மோசமான பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருவதை கடந்த 15 ஆண்டுகளாக தேசம்நெற் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.