அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!
‘இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதார உறவை மேம்படுத்துவது, சுற்றுலாத்துறையை முதலீட்டை ஊக்குவிப்பது, எரிசக்தியில் பங்காளித்தன்மையை வலுப்படுத்தவது, பிராந்திய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாகவும், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம், இலங்கை – இந்திய உறவை மேலும் உறுதிப்படுத்துவாக அமைந்துள்ளது’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆன நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிற்பகல் 5:30 மணியளவில் டெல்லியை சென்றடைந்தார். ஐனாதிபதிக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan), இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்கூமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். மேலும் டெல்லித் தெருக்களில் இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் படி அவரது நிழற்படத்தோடு அலங்கார பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது நக்சல்பாரிகளை இல்லாதொழிப்போம் என்று சபதமிட்டு, சதீஸ்கரில் அவர்களைப் படுகொலை செய்துவரும் இந்தியா, இதே பாணியில் 1971 ஏப்ரலில் தென்பகுதிக் காடுகளில் ஜேவிபியை வேட்டையாடியது. வேட்டையாடப்பட்ட ஜேவிபியின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதியாக செங்கம்பள வரவேற்பை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை பல்வேறு நல்லவிடயங்களுக்குமாக சர்வதேசத்தில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அதில் இதுவும் ஒன்றாக அமைகின்றது. 1971 இல் இந்தியப் படைகள் தெற்கில் என்ன செய்தனர் என்பதை இக்காணொலி கூறுகின்றது:
இப்பயணம் இந்தியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம். வழக்கப்படி இலங்கையில் புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதிகள் முதன் முதலில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவிற்கேயாகும். ஜனாதிபதி அநுரவின் இந்தியப்பயணத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரும் உடனிருந்தார்கள். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
அத்துடன் டெல்லியில் நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான முதலீடு மற்றும் வியாபார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான வர்த்தகக் கூட்டத்திலும் ஜனாதிபதி அனுரா கலந்து கொள்கின்றார். இப்பயணத்தின் இறுதியாக டெல்லியில் அமைந்துள்ள புத்த காயாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.