18

18

சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் – சரத் வீரசேகர

இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும்.

ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் சரத் வீரசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை மீறி சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ !

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை மாணவர்களின் கல்வி தொடர்பான குறை நிரப்பு பிரேரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமை பற்றி பேசப்படுவது சிறந்ததொரு மாற்றமாகும். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகைமை பற்றி ஏன் பேசப்படுவதில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள்.
நாமல் ராஜபக்ஷவுடன் சட்டக்கல்லூரியில் கல்வி கற்றவர் வெளிநாட்டில் இருந்து இவ்விடயம் குறித்து பேசியுள்ளார். நாமல் ராஜபக்ஷ இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனுமொரு கல்விச் சான்றிதழை பயன்படுத்தியே சட்டக்கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார். நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக அறையில் இருந்து 2010 ஆம் ஆண்டு சட்டமாணி இறுதி பரீட்சையை எழுதியதாகவும் அவருக்கு வினாத்தாள் முன்கூட்டியதாகவும் சுவிஸ்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள துசார என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பில் துசார என்ற நபர் முறைப்பாடளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனெனில் நாமல் ராஜபக்ஷவின் தந்தை அப்போதைய ஜனாதிபதி. இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டத்தின் பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் உயர் பீடம் நாமல் ராஜபக்ஷவின் முதல் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதுவே வரலாறு தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்தை முழுமையாக மீறியே நாமல் ராஜபக்ஷ சட்டமாணி பரீட்சை எழுதினார். முறையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களை இவர் இன்று கேள்வியெழுப்புகிறார் என்றார்.

சர்ச்சைக்குரிய யூரியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில்!

சர்ச்சைக்குரிய யூரியூப்பர் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில்!

குண்டர் சட்டத்தின் கீழ் காரில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே இவ்வருடத் தொடக்கத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் சவுக்கின் தாயார் இந்தியாவின் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் குண்டர் சட்டத்தை இரத்து செய்ய சவுக்கு சங்கர் விடுதலையானார். இவ்வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கு விசாரணைக்கு சமூகம் தராமையால் பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சவுக்கு சங்கர் கைது செய்ப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் காவலர்களை அவதூறாக பேட்டியளித்தும் சவுக்கு சங்கர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதற்காக அவர் சிறையிலிருந்த சமயம் பெண் பொலிஸ் காவலர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தது. அது தொடர்பில் சவுக்கு தான் சிறையில் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் முன் கூப்பாடு போட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு கார்டினல் மல்கம் ரஞ்சித்!

போப்பாண்டவருக்கான போட்டியில் கார்டினல் மல்கம் ரஞ்சித்!

தற்போதைய 88 வயதடையும் போப்பாண்டவர் பலவீனமாகவும் நோயாளியாகவும் ஆகும் நிலையில் அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு விரைவில் இடம்பெறலாம் எனவும், அடுத்த போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களும் போட்டியிடுவார் என வத்திகானோடு தொடர்பான இணையத்தளம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் 12 கார்டினல்கள் போட்டியிட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டினல் மல்கம் ரஞ்சித் வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வருபவர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிவருபவர். தற்போதைய போப்பாண்டவர் பிரன்ஸிஸ் ஒப்பீட்டளவில் லிபிரல் கொள்கையுடையவர். லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்த விடுதலை இறையியலூடாக மேலே வந்தவர்.

பொதுவாக அடுத்து வரும் போப்பாண்டவர் முன்னையவருடைய வழியில் செல்லமாட்டார் என்ற கருத்து இருப்பதாகவும் அதனால் அடுத்த போப்பாண்டவர் சற்று இறுக்கமான பழமைத்துவவாதியாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. போப்பாண்டவரை கார்டினல்கள் தெரிவு செய்வர். ஆனால் அவர்கள் 80 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்க வேண்டும். 253 கார்டினல்களில் 140 பேர் எண்பது வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்கள் நேரடியாக வத்திக்கானுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த வாக்களிப்பு நீண்ட நாட்களுக்கு நடைபெறும். ஆனால் வாக்களிக்கப் போகும் கார்டினல்களுக்கு போட்டியிடும் கார்டினல்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான சூழலும் இல்லை. போட்டியில் உள்ளவர்கள் தாம் எதிர்காலத்தில் கத்தோலிக்கத்துவத்தை எப்படிக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற அவர்களுடைய பார்வையின் அடிப்படையிலேயே தங்கள் வாக்குளை வழங்குவார்கள். தற்போதுள்ள போப் நோய்காரணமாக, முதுமை காரணமாக ஓய்வுபெற்றாலே அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு நடைபெறும். தன்னால் முடியாத போது தாங்கள் ஓய்வுபெறுவோம் என போப்பாண்டவர்கள் உடன்பட்டே வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கைக்கு சர்வதேச தனியார்கள், நிறுவனங்கள் வழங்கிய பணமுறியை 27 சதவீதத்தால் குறைத்து புதிய பணமுறியை ஏற்றுக்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி புதிய பணமுறி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஜனாதிபதி அனுர ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதார ரீதியில் இலங்கை ஸ்தீரத் தன்மையடைந்து வருகின்றது. 2022இல் இலங்கை தன்னுடைய 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த முடியாமல் இன்னல்பட்டதையடுத்து பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டு எரிபொருள் போன்ற அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கான டொலர் கையிருப்பில் இல்லாமல் போனது. அதனையடுத்து மக்கள் பெற்றோலுக்கு காத்துக்கிடந்ததும், சர்வதேச நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் நியமித்ததும் வரலாறு. அதனால் மேலதிக கடன்களைப் பெறாமல் டொலர் கையிருப்பை அதிகரிப்பதில் தற்போதைய அரசு மிகத்தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

அதனால் ஜனாதிபதி அனுராவின் ஒவ்வொரு அசைவும் சுற்றுலாத்துறையை வளர்ப்பது, முதலீட்டாளர்களைக் கவருவது, நாட்டை டிஜிற்றலைஸ் ஆக்குவது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது என்பதை நோக்கியதாக உள்ளது. இந்திய விஜயத்தின் போது இவ்விடயங்கள் மிக அழுத்தம் திருத்தமாக உரையாடப்பட்டுள்ளது. உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுராவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய முதலீட்டளர்கள் துறைசார் விற்பனர்களுடனான சந்திப்பில் இலங்கை தொழில்முனைவோருக்கான நட்பு நாடு எனச் சொல்லி அவர்களை வரவேற்றுள்ளார்.

அரசாங்கம் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு அப்பால் சென்று கடன் பெறவில்லலை எனவும் நிர்ணயிக்கப்பட்ட 3.7 ரில்லியன் ரூபாய்களே கடன்வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 2 ரில்லியன் ரூபாய்களே உள்ளுரளவில் பெறப்பட்டுள்ளதாகவும் ரெரிட்டே ரிசேர்ச் என்ற சுயாதீன சிந்தனை மையம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் தேவையானால் இன்னும் 1.7 ரில்லியன் ரூபாய்களை உள்ளுர் பணமுறியைக் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை நெருக்கடியைச் சந்தித்த போது அதன் மொத்தத் தேசிய உற்பத்தி – ஐpடிபி 1.2 சதவிகிதத்திலிருந்து தற்போதைய கடைசிக் காலாண்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகரத்திற்கு வந்தபோது 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சியைக் காட்டினாலும் கட்டிட நிர்மானம் 23.8 சதவீதமாகவும் சேவைத்துறை 18.8 விகிதமாகவும் தேயிலை 16.3 விகிதமாகவும் எரிசக்தித்துறை 15.2 விகிதமாகவும் துணித்தொழில் 13.5 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இவற்றின் பிரதிபலிப்பாக இலங்கை நாணயத்தின் பெறுமதியிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கான ஆதரவை தாங்கள் முழுமையாக வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிறி விக்கிரம் மிசிறி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கை பிரிக்ஸில் இணைவது என்பதனைக் காட்டிலும் பிரி;க்ஸினுடைய புதிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான மூலதனத்தை பெறுவதிலேயே அது ஆர்வமாக உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் திங்கட்கிழமை 15ம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நவம்பர் 30 இலங்கை வந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் நிர்வாகிகளுடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கத்திற்காக பணம் சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 இல் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், இவ்வாறானவர்களின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விஜயசுந்தரம் சங்கர் சார்பில், அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்காகப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா முன்னிலையாகி வாதிட்டார்.

“விஜயசுந்தரம் சங்கர் 2010 பிரித்தானியாவுக்குச் சென்று வாழ்கின்றார். 2012இல் அவர் பிரித்தானிய பிரஜையுமானார். அவர் பிரித்தானியா சென்ற பின் நாட்டுக்கு தன்னுடைய தாயாரின் இறுதிக் கிரியைகளுக்காக நாடு திரும்பியவர். 2009 ஆண்டுக்குப் பின் இவ்வாறு பல புலம்பெயர் தமிழர்கள் ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள். இது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கின்றது. நாட்டினது நற்பெயரையும் பாதிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வர அஞ்சுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் முதலீடு செய்வதையும் தடுக்கின்றது” போன்ற காரணங்களை முன் வைத்து கே வி தவராசா வாதிட்டார். அவர் பணத்தை அனுப்பியது உண்மைதான். அது அவருடைய தாய் தகப்பனுக்கு அதுவுமொரு குற்றமா எனவும் கேள்வி எழுப்பினார். இறுதியில் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விஜயசுந்தரம் சங்கரை விடுதலை செய்தார்.

70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

சாவகச்சேரி நகரசபையால் உலக வங்கியின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கடைத் தொகுதிகளை குத்தகைக்கு விடுவது சம்பந்தமான கேள்வி அறிவித்தல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் நேற்று நகரசபை முன்றலில் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தகர் ஒருவர் வழங்கிய நேர்காணலில் ‘’சாவகச்சேரி நகரசபை தமக்கு வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக புதிய கடைத்தொகுதிகளை, குத்தகைக்கு வழங்குவதாக பகிரங்க ஏலத்தில் விட்டு தம்மை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். அதாவது, 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் அழிவடைந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் நகரசபையால் கட்டப்படும் போது சாவகச்சேரி வர்தகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக இதுவரை கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்தவர்கள் தொடர்பிலும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது பெற்றோரின் பெயரில் கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்துள்ளனர். சாதாரணமாக சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் ஒருவர் வெளிநாட்டுக்காரருடன் போட்டியிட்டு அதிக விலையை கொடுத்து கடைகளை ஏலத்தில் எடுக்க முடியாது. உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்பட்ட கடைகளை பொது ஏலத்தில் விட்டு பணம் படைத்த புலம்பெயர் தமிழர்கள் அதிக விலை கொடுத்து கடைகளை குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி நகரசபை ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சாவகச்சேரி வியாபாரிகள் குமுறுகிறார்கள்.

ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை அதன் பெறுமதிக்கு மேலாக பணம் கொடுத்து வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உழைத்து வாழும் சாமானிய மக்கள் ஒரு பிடி நிலம் கூட வாங்க முடியாதளவிற்கு காணிகளின் விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. வடக்கில் ஒருபக்கம் போட்டிக்கு அதிக விலை கொடுத்து காணிகளை விலைக்கு வாங்கி கோடிகளை கொட்டி ஆடம்பர பங்களாக்களை கட்டும் புலம்பெயர் தமிழர்கள். அவ்வாறு கட்டிய வீடுகளை சுற்றுலா வரும்போது மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இப்படி பல வீடுகள் பூட்டிய நிலையில் பாழடைந்து காணப்படுகின்றன. அதேநேரம் இனத்தின் விடுதலைக்கு போராடியவர்கள் ஒரு தகரகொட்டகைக்கு வழியின்றி கஷ்டப்படுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் நகரசபையின் நுழைவாயிலை பூட்டி தமது எதிர்ப்பை காட்டியதோடு புதிய கடைத்தொகுதிகளுக்கான விண்ணப்பதாரிகள் சாவகச்சேரி நகராட்சி எல்லைக்குள் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் வந்த பொலிஸார் பூட்டை உடைத்து கதவை திறந்ததோடு போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது நகர சபை ஊழியர் ஒருவர் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை ஓட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது மோதப் போவதாக பயமுறுத்தியதாகவும் ஊடகவியலாளர்களோடும் முரண்பட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் கேள்விக் கோரலானது தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அரசாங்க பதவிகளை வகிப்பவர்களுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பாடல் மற்றும் உறவுகளில் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றது. அரச நிர்வாகத்தில் இடம்பெற்று வந்த அதிகார துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் ஊழலால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த மக்கள். இன்று வெகுண்டு எழுந்து போராடுவதை காணக்கூடியதாக உள்ளது.