பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!
சமீப வாரங்களாக கொழுந்துவிட்டெரியும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 170 மருத்துவ ஊழியர்களின் பணி நியமனப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள எம்பி அர்ச்சுனா நேற்றைய தினம் பாராளுமன்றதில் இவ்விடயத்தை சொதப்பினார். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்று நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட அர்ச்சுனா எடுத்துக் கொண்ட விடயத்தலைப்பிற்கு அப்பால் போய் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டு சபையின் நேரத்தை வீணடித்தார்.
எம்பி அர்ச்சுனா கொண்டு வந்த விடயத்தின் கனதியின் பொறுப்பையுணர்ந்து செயற்படவில்லை என மக்கள் விசனமடைந்துள்ளனர். நேற்றைய தினம் எம்பி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் பல சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தன்னிடம் பலர் முறையிட்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி கேட்டுள்ளதாகவும், இவ் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஊசி அர்ச்சுனாவுக்கு முன்னதாகவே சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராஜா அந்த ஊழியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன், அவர்கள் தங்கள் முறைப்பாட்டை சொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனா தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தொடங்கிய விடயத்தை விட்டு விலகி யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா என ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து கூச்சலிட்டார். இக் கூச்சல்களின் நடுவே எதிர்கட்சியினரைப் பார்த்து கடுமையாக விமர்சித்தார். நீங்கள் டக்ளஸ் தேவாநந்தாவை வைத்து தமிழ் மக்களை கொன்று போட்டீர்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் O/L பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் ஆதாரங்களை கொண்டு வராமல் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். இதே டக்ளஸ் தேவானந்தாவை தனது தந்தை என்றும் சில மாதங்களுக்கு முன் துதி பாடியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்மீது மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளாதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் தாக்கப்பட்டதாகவும் முறையிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு அர்ச்சுனாவை சமர்ப்பித்த விடயம் தொடர்பில் பேசும்படி எச்சரித்தார். அதை எதையும் காதில் வாங்காது அர்ச்சுனா தான் விடயத்திற்குள் நின்று கொண்டு தான் பேசுகிறேன் என்று கோபமாக கத்திக் கொண்டு “என்னுடைய கருத்துக்களை சபையில் முன்வைக்க எனக்கு சரியான வாய்ப்புக்கள் வழங்க முடியாவிட்டால், நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கிறேன்” என முரண்பட்டுக் கொண்டார். அத்தோடு நிற்காமல் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேச முற்பட்டார். அப்போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அர்ச்சுனா கிண்ணியாவில் சஜித் பிரேமதாசா தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தை ஞாபகப்படுத்தியோடு, “அது யாருடைய அரசியல் மேடை?” என சிலேடையாக கேட்க அனைவரும் நளினத்தோடு சிரிக்க ஆரம்பிக்க அர்ச்சுனா தனது குறளி வித்தையை நிறுத்தினார்.
பிந்திய செய்திகளின்படி சபாநாயகர் எம்பி அர்ச்சுனா சபைக்கு முரணாக வரம்பு மீறி உளறியவையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படியே ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எம்பி அர்ச்சுனா சபையின் கவனத்தை திசை திருப்பி சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தால் அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாது. பாராளுமன்றம் மக்களுக்கான பிரச்சினைகளை பேசி மற்றும் விவாதித்து தீர்வு காணுமிடம். ஊசி அர்ச்சுனா மாறாக தனது தனிப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமான தனி மனிதர்களுக்கிடையான பிணக்குகளை பேசும் இடமாக மாற்றி வருகின்றார்.
இப்படியிருக்க யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்றைய தினமான டிசம்பர் 18 அர்ச்சுனா மீது 100 கோடி நட்ட ஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வாறு 100 கோடி கிடைக்கும் போது அதனை யாழ்ப்பாண வைத்தியசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என முகநூலினூடாக அறிவித்துள்ளார்.
பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு ஒரு உயர்வுச் சிக்கல் மனோநிலையுண்டு. தாங்கள் ‘டொக்டர்ஸ்’ என்பதால் தங்களுக்கு அறிவுப் புலமை அதிகம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் உரையாடல்களில் நடவடிக்கைகளில் அடிமுட்டாள் தனமாகவும் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்தியல் நிலைப்பாடுடையவர்களாகவும் உள்ளனர். தங்களை ‘சேர்’ என அழைக்க மற்றவர்களை வற்புறுத்துவது, நான் ‘டொக்டர்’ நான் டொக்டர் என தங்களுக்கு தாங்களே அழைத்துக்கொள்வது போன்ற தாழ்வுச் சிக்கல்களும் இவர்களிடம் உண்டு. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். இந்த வெற்றுக் குடங்களின் குடைச்சல் தாங்க முடியிதில்லை என்கிறார் ‘சும்மா’ டொக்டர் பொன்னம்பலம்.