20

20

அரச அதிகாரிகளில் பணியாளர்களில் மக்கள் கோபம் கொள்கின்றனர்! போராடவும் தயாராகின்றனர்!

அரச அதிகாரிகளில் பணியாளர்களில் மக்கள் கோபம் கொள்கின்றனர்! போராடவும் தயாராகின்றனர்!

இலங்கையில் 14 லட்சம் ஊழியர்கள் அரச பணியில் உள்ளனர். இது இலங்கையின் சனத்தொகைக்கு தேவைக்கு அதிகமானது. இத்தொகை ஏழு லட்சமாக இருக்கவேண்டும் என்பதே மதிப்பீடு. நாட்டின் தற்போதைய நிதி நிலமையை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வருகிற வருடம் வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டிருந்த சம்பள உயர்வை என்பிபி அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதனை ஒக்டோபர் 15 அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒருபுறம் அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடத் தயாராக இருக்கின்றனர். மறுபுறம் வேலையற்ற பட்டதாரிகள் தம்மை அரசுப்பணியில் இணைக்கச் சொல்லி போராடுகின்றனர். “சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம் பென்சன் எடுக்கலாம்” என்ற நினைப்பு என்கிறார் தனியார் வங்கியில் முகாமையாளராகச் செயற்படும் கதிர்காமராஜா வனோஜன்.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புக்கள் அரச துறையில் ஆளணிக்குறைப்பு செய்யும்படி இலங்கையை நிர்ப்பந்திக்கின்றன. பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் இலங்கை தற்சமயம் பணியிலுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதன் வருமானத்தில் பெரும்பங்கு செலவிடப்படுகின்றது.

அப்படியிருந்தும் அரச ஊழியர்களின் அசமந்தம், வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் மலிந்தும் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் நீண்ட காலமாகவே அரச ஊழியர்கள் மக்களை நடத்தும் விதம் தொடர்பில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பருத்தித்துறையில் கற்கோவளம் என்ற கிராமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய போது அக் கிராமசேவகர் நடந்து கொண்ட விதம். அவர் தனது கணவரின் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட பொதுமகனை கைது சிறையில் அடைத்தமை, அதனால் வீதிக்கு இறங்கி போராடிய சம்பவங்களை குறிப்பிடலாம்.

இதனையே தான் வடக்கு மாகாண ஆளுநர் டிசம்பர் 18 இல் கிளிநொச்சியில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நடந்த நிகழ்வொன்றில் இப்படி கூறுகிறார். ‘’ஏழைகளின் குரலை கிஞ்சித்தும் செவிமடுக்க தயாரில்லாத அரச ஊழியர்களால் சாதாரண சேவைகளை பெறவே மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்’’.

அரச சேவையில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் இருந்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதுடன் தகுந்த சேவையையும் வழங்காமல் தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் அவர் கூறும் போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர முடிவதாகக் குறிப்பிட்டார். உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களில் உள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை என ஆளுநர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்கள் தம்மிடம் சேவை பெற வரும் மக்களை எவ்வாறு அலட்சிய மனப்பான்மையுடன் மட்டம் தட்டுகிறார்கள் என வேதனையோடு பிரதமர் ஹரிணி அமலசூரிய குறிப்பிடுகிறார். ‘’அரச ஊழியர்கள் சரியாக பேசுவதில்லை, குறைகளை செவி கொடுத்து கேட்பதில்லை மற்றும் கேள்வி கேட்டால் பதிலும் சொல்வதில்லை மக்கள் குறைப்படுகிறார்கள்’’ என்கிறார் பிரதமர் ஹரிணி.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூட எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஒதுக்கப்பட்ட நிதிகளை அரச ஊழியர்கள் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் விமர்சனங்களையும் தெரிவித்து கேள்விகள் கேட்ட போது அரச ஊழியர்களுக்கு அது சினத்தை மூட்டியிருந்தது. அரச ஊழியர்கள் அர்ச்சுனா மீது காட்டிய உணர்வெழுச்சியான எதிர்வினையை மக்கள் ரசிக்கவில்லை. மாறாக அர்ச்சுனா அரச ஊழியர்களுக்கு தடியோட்டியதை ரசித்தனர். அரச ஊழியர்கள் தம்மை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தோரணையில் நடந்து கொண்டதாகவே இந்த விடயத்தில் மக்கள் பார்வையுள்ளது. மக்களுக்கும் அரச ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகின்றது.

இக்குற்றச்சாட்டுக்கள் ஒட்டு மொத்த அரச ஊழியர்களை நோக்கியும் கூற முடியாது என்பதையும் மக்கள் விளங்கிக் கொண்டு தான் உள்ளனர். அரச ஊழியர்களின் எதேற்ச்சதிகார போக்கை கட்டுப்படுத்த அரச சேவைத்துறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க என்பிபியின் ஆட்சியில் தருணம் வந்துவிட்டது என மறுசீரமைப்பு வாதிகள் கருதுகின்றனர். மேலும் ஜனாதிபதி அனுரா “நீங்கள் நியாயமாக நடந்தால் நான் உங்களுடன் இருப்பேன்” என மிகத் தெளிவாகவே அரச ஊழியர்களுக்குச் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அரச ஊழியர்களின் தபால் மூலமான வாக்குகளே இன்றைய அரசாங்கத்தின் வெற்றியை கட்டியம் கூறி உறுதிப்படுத்தியது. அரச ஊழியர்களும் மக்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கான்சர் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா – மருத்துவ உலகில் புதிய மைல்கல்!

கான்சர் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா – மருத்துவ உலகில் புதிய மைல்கல்!

அறிவியல் உலகில் முக்கியமான முன்னேற்றமாக, புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் மேற்குலகின் அறிவியலுக்கு ஒரு சவாலாக அமையும். எப்போது ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களுடைய திறமைகளைக் களவாடுபவர்கள் என்ற மாயை மேற்குலகில் உள்ளது. ஆனால் தொழில்நுட்பத்தில் சீனா மேற்குலகைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னாகப் பயணிக்கின்றது. மேற்குலகின் கோவிட் வக்ஸிசினில் நீண்டகால பக்கவிளைவுகளின் பாதிப்புக்கள் திட்டமிட்டு மறைக்கபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றது. ஆனால் சினோவகஸில் அவ்வாறான பிரச்சினையில்லை எனக் கூறப்படுகின்றது.

ரஷ்யாவுடைய இக்கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மிகப்பெரும் புரட்சியாக அமையும். MRNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசியை 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது மனிதனின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாகச் செய்து புற்றுநோய்க் கிருமிகளை தாக்கக் கூடிய வகையில் செயல்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தத் தடுப்பூசியின் முதன்மை நோக்கம் புற்றுநோயை தடுப்பதும், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகும்.

பல ஆண்டுகளாக இடம்பெற்ற ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளின் முடிவில் இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பரிசோதனைகளில் சிறந்த முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், மனிதர்களில் சோதிக்க தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி உலகளவில் புற்றுநோயை தடுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுடைய மரண விகிதத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா நடைமுறைகளில் இறுக்கம்!

ஆஸ்திரேலிய மாணவர் விசா நடைமுறைகளில் இறுக்கம்!

 

ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச மாணவர்களின் வருகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இலங்கையின் தென்பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தங்கள் கற்கைகளுக்காகச் செல்வது குறிப்பிடத்தக்கது. புதிய விசா கொள்கையினால் நாட்டின் வளங்களை உரியமுறையில் கையாள்வதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே விசாக் கொள்கைகளில் புதிய மாற்றங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மேற்குலகம் எங்கும் குடிவரவாளர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் தீவிரமடைந்து வருகின்றது. அந்த வகையில் வலதுசாரித்தன்மையுடன அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு ஆச்சரியமானதல்ல.

அதேவேளை புதிய விசாக் கொள்கைகள் மூலமாக நாட்டின் கல்வித் தரத்தினை உரியமுறையில் பேண முடியும் என அஅவுஸ்திரேலிய அரசு கூறினாலும், வெளிநாட்டு மாணவர்களின் வருமானத்திலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களின் நிதியிலேயே இயங்குகின்றது. இதன்படி, 80 வீதமான மாணவர் வெற்றிடங்கள் நிரம்பும் வரை தளர்வான விசா நடைமுறை இருக்கும் எனவும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்களை கையாள்வதில் தாமதங்கள் இருக்கும் எனவும் அறிய முடிகின்றது. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர் விசா கட்டணம் 710 அமெரிக்க டொலரிலிருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 1,600 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக சர்வதேச மாணவர் சேர்க்கையை 2,70,000 ஆகக் குறைக்க ஆஸ்திரெலிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு அந்த நாட்டு வலதுசாரிக் கட்சியும் கிரீன் கட்சியும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இதையடுத்தே ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இதே போன்ற கட்டுப்பாடுகளை அண்மையில் கனடிய அரசும் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

 

டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், டிக்டொக் செயலியைத் தடை செய்யும் முயற்சியை எதிர்த்து அதன் உரிமையாளர் ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதியிலிருந்து டிக்டொக் மீதான தடை அமுலுக்குவரவுள்ள நிலையில் ஜனவரி 10ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமானோர் டிக்டொக் செயலியைப் பயன்படுத்துகின்றனர். டிக்டொக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்கப் பயனாளர்களின் தகவல்களைச் சேகரிக்கக்கூடும். இது தங்களது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக்கூறி அமெரிக்க அரசாங்கம் டிக்டொக்கை தடைசெய்ய முயற்சிக்கின்றது.

ஆனால், டிக்டாக் நிறுவனம், அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தடை டிக்டொக்கில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான பயனர்களையும் அவர்களுடைய வர்த்தகத்தையும் பாதிக்கும் இது வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

சீனச் செயலியான டிக்டொக்கை முடக்க அமெரிக்கா, இந்தியா போன்ற சீன வெறுப்பு நாடுகள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் வி.பி.என் போன்ற செயலிகளின் ஊடாக பெரும்பாலானவர்கள் டிக்டொக்கை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டொகின் பயனாளிகளின் தகவல்ககளை சீன அரசு பெற்றுக்கொள்ளுமானால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக வலைத்தளங்களின் பயனாளர்களின் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன என்ற விடயமும் காலம் காலமாக உள்ளது.

இந்திய அரசு மைக்கிரோசொப்ற் வின்டோசைப் பயன்படுத்துவதில்லை. காரணம் அதனூடாக அமெரிக்க புலனாய்வு தங்களுடைய கணணிகளுக்குள் குதித்துவிடும் என்ற அச்சம். அண்மையில் இஸ்ரேல் மொசாட் உளவுப் பிரிவினர் லெபனான் ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள் வெடித்துச் சிதற வைத்தது. மிகநுட்பமான மிகத்திட்டமிட்ட இத்தாக்குதலில் பல ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டனர். காயப்பட்டனர். எதிர்காலத்தில் விமானத்தில் பறக்கின்ற போது மோபைல்போன்களை வெடிக்க வைக்கவும் இவர்கள் முயற்சிக்கலாம். தொழில்நுட்பம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துகொண்டுள்ளது. இருக்கின்ற எதையும் வைத்து யாரையாவது கொல்வதற்கான வழியை மேற்குலகு புதிது புதிதாக கண்டுபிடித்துக்கொண்டுள்ளது.

அனுர அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள். அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும். ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.

ஒவ்வொரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது. அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.

முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய கப்பல் – மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா !

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய கப்பல் – மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா !

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த படகு நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது. இந்நிலையில், இன்று (20.12/2024) காலை திருகோணமலை துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டன. பின்னராக மருத்துவ பரிசோதனைகளுக்காக படகிலிருந்து பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவேளை கப்பல் கரையொதுங்கிய விவகாரம் தொடர்பாக நேரடியாக களத்திற்கு விஜயம் செய்துள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, உள்நாட்டு யுத்தம் காரணமாக 110 நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்திருப்பதுடன் எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இவர்களுக்கான ஆரம்பநிலை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதித்துறையின் கட்டமைப்புக்களுக்கு இணங்க அவர்களுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்! 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்!
இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு 31 ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது. ஏலவே இப்பரீட்சையானது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த உள நெருக்கடியை வழங்குவதாக கல்வியாளர்கள் கண்டிக்கின்றனர். ஆளும் என்பிபி அரசாங்கமும் இப்பரீட்சை இலங்கையின் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்களை சிதைக்கிறது என கூறுகிறது. கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் மாணவர்களை உளநெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், தமது அரசு இந்த பரீட்சைகளை நிறுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்விக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி தேசம்நெற் செய்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே. அண்மையில் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்பது மற்றும் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட வகுப்புகளுக்கு தனியார் கல்விநிலையங்கள் வகுப்புகள் எடுக்கக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய உத்தரவு !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

‘முல்லைத்தீவில் கரை ஒதுங்கியவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் அவர்களை அவர்களுடைய விரும்பமின்றி எங்கும் திருப்பி அனுப்பக்கூடாது’ என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரோஹிங்யா முஸ்லீம்கள், மியன்மாரில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருந்தது. முல்லைத்தீவிற்கு வந்தவர்கள் ரோஹின்யா முஸ்லீம்கள் எனில் அவர்களுக்கு ஆளும் என்பிபி அரசு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவிடயத்தில் அந்த மக்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோருகின்றனர். வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் நீண்ட காலம் அகதி வாழ்க்கையை அனுபவித்தது. உலகின் பலநாடுகளிலும் இன்றும் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள், அந்த அடிப்படையில் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்புவது வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் குரல் கொடுக்கும் வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் இது விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மனதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டமையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்று வெளிநாட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று தத்தளித்திருக்கிறது. வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களே குறித்த படகை கண்டுள்ளனர். அப்படகில் 25 மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், இரண்டு கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட 103 பயணிகள் இருப்பதாக தெரியவந்தது. படகில் இருப்பவர்கள் மிகவும் சோர்வாகவும் பசியோடும் இருந்தனர். இவர்கள் மியான்மாரிலிருந்து வந்த சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லீம்கள். ரோஹிங்கியா முஸ்லீம்கள் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களால் திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மியான்மாரின் இனப்படுகொலையிலிருந்து தப்பி 7 இலட்சங்களுக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் பங்களாதேசில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே வறுமையில் உழலும் பங்களாதேசத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி முகாம்களில் ரோஹிங்கா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பங்களாதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கயா அகதிகளில் பலர் அதிக சன நெரிசல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் காரணமாக முகாம்களை வெளியேறுவதாகவும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் ஒதுங்கிய மாதிரியே 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து 104 பேர் கொண்ட அகதிகள் குழுவை கடற்படையினர் மீட்டனர். அவர்கள் மியன்மார் பிரஜைகள் என கடற்படையினர் அடையாளப்படுத்தினர். இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு மிரிஹான மற்றும் வெலிசர குடிவரவு தடுத்து வைத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த ரோஹிங்கியா அகதிகளைப் போன்று வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஆபத்தான படகுகளில் பயணித்துச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் கடலோடும் சங்கமமாகி உள்ளனர்.

நேற்றைய தினம் அகதிகளுடன் கடற்கலத்தை கண்டதும் மீனவர்கள் விரைந்து இத்தகவலை கடற்படை உட்பட அனைத்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்களுக்கும் அறிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர முன்னரே மீனவ சங்கத்தினர் படகில் சோர்வுடன் பசியோடு இருப்பவர்களை உடனடியாக உண்ணக் கூடிய உணவு, தண்ணீர், உலர் உணவு என்பவற்றை விநியோகித்தனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்த முல்லைத்தீவு மக்கள் படகில் வந்தவர்களுக்கு ஓடோடிச் சென்று மனிதாபிமான உதவிகளை நல்கியதில் ஆச்சரியம் இல்லை.

கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த எம்பி ரவிகரன் தெரிவித்தார். மேலும் அகதிகள் படகிற்கு வைத்தியர் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அகதிகள் யாரும் கடும் சுகவீனமுற்று இருக்கவில்லை என்றும் கூறினார். படகில் உள்ளவர்களோடு உரையாடுவதற்கு மொழி தடையாகவுள்ளதால் மேலதிக தகவல்களை பெறுவதில் சிரமம் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!
தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு ‘கட்சியின் மத்திய குழுவிலிருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை’ என்பதை உறுதிப்படுத்துவதற்காக டிசம்பர் 18இல் கட்சியின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான சிவமோகன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே தமிழரசுக் கட்சி மீது இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, கட்சி இழுபறியில் உள்ளது. அக்கட்சிக்கு யார் தலைவர் என்பதிலும் இதுவரை தெளிவில்லை. மாவை உள்ளே – வெளியே விளையாட்டில் உள்ளார். சிறீதரன் தலைவரா இல்லையா என்று பல சிக்கலில் கட்சி உள்ள நிலையில், இன்னுமொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தை கொடுத்து பின் அதனை மீளப்பெற்று நடந்த சர்ச்சையால் தலைவர் யார் என்ற பிரச்சினை எழுந்தது. கடந்தவார இறுதியில் தமிழரசுக் கட்சி கூடிய போது அதற்குத் தீர்வுகாணப்படாமல் கூட்டம் டிசம்பர் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எம் ஏ சுமந்திரன், “இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர் மற்றும் சிலர் இடைநிறுத்தப்படுவர்” எனப் பூடகமாகத் தெரிவித்திருந்தமை டிசம்பர் 15இல் தேசம்நெற்இல் வெளியானது. “தமிழரசுக் கட்சி தான் பிரதான கட்சி, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற கட்சி. ஆகவே நாங்கள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள்” என்ற தொனிப்பட கருத்து தெரிவித்தார் எம் எ சுமந்திரன். “வேறு யாராலும்: சிறிதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் உருவாக்குகின்ற வரைபுகளுக்கு இணங்கிச் செல்ல மாட்டோம்” எனவும் வைராக்கியமாக கூறினார் அவர்.
அதற்கு எதிர்வினையாகவே டிசம்பர் 18இல் சிவமோகன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை சுமந்திரன் ஏற்காததால் அதனை சுமந்திரன் ப சத்தியலிங்கத்திற்கு மடைமாற்றினார். அதனால் சுமந்திரனின் விருப்பம் ப சத்தியலிங்கத்தினூடாக நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 28 தமிழரசுக் கட்சியின் தலைவராக ஒருவர் செயற்பட வேண்டியிருப்பதால் அதற்கு சி வி கெ சிவஞானத்தை கொண்டு வரும் முயற்சிகளில் சுமந்திரன் அணி ஈடுபட்டுள்ளது. அதனால் கூட்டத்தின் ஏற்பாட்டு ஒழுங்குகளை தலைவர் மாவையின் வழிகாட்டலின்படி செய்ய வேண்டும், சுமந்திரனின் வழிகாட்டலின் படியல்ல என்பதை உறுதிப்படுத்தவுமே சிவமோகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்ந்துள்ளார்.
“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. அதனை அவர் எதிர்வரும் நாட்களில் செய்வார். இதற்கு மத்திய குழுவும் சம்மதித்துள்ளது” என்று சென்ற வார இறுதியில் எம் ஏ சுமந்திரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவர்” என்றும் தெரிவித்தார்.