துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !
துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன. சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கரையும் அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும். எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள். உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால், இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும்.
வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன. சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் உலகுக்கு ஏற்ற வகையில், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.
,துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது. இதனால், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.