தையிட்டி எதிரொலி !
யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?
டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மலிங்கத்துடன் ஒரு நேர்காணல் !
தையிட்டி எதிரொலி !
யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?
டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மலிங்கத்துடன் ஒரு நேர்காணல் !
வறுமைக்கோட்டு மட்டம் உயர்த்தப்பட்டு உள்ளது !
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் உத்தியோக பூர்வ அறிவிப்பானது வறுமைக்கோடு மட்டம் தொடர்பில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திணைக்களம் டிசம்பர் 2024க்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டை ரூ. 16,191 ஆக நிர்ணயித்துள்ளது. நவம்பர் 2024 இல் ரூ. 16,017 ஆகவும், அக்டோபர் 2024 இல் ரூ. 15,994 இந்த மட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
வறுமைக்கோட்டு மட்டம் வரம்பு எனப்படுவது ஒரு தனிநபர் தனது மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதாந்த தொகையைக் குறிக்கிறது. அந்தவகையில் மாதாந்தம் ரூ 16,191 விட குறைவான வருமானத்தையுடையோரை வறுமையில் வாடுபவர்கள் என குறிப்பிடலாம்.
டிசம்பர் மாதத்தைப் பொறுத்தவரை தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (NCPI) சரிவு இருந்தபோதிலும் வறுமைக் கோட்டில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வறுமைக் கோட்டு வரம்பு நிலையாக உயர்ந்து செல்வதற்கு , இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியும் , பணவீக்கமும், வேலையில் நிலவும் ஏற்ற மற்றும் இறக்க தளம்பல்கள் காரணங்களாக காணப்படுகின்றன. மேலும் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்நிலமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை
இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க மட்டும் வருவதில்லை. அவர்கள் அங்கிருந்து போதைப்பொருட்களையும் பெருமளவில் கொண்டுவருகின்றனர் என்பதை இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. வட இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருப்பதற்கு எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பவர்களும், அவர்களுடைய ஏஜென்டுகளாகச் செயற்படும் எம்மவர்களும் காரணமாக உள்ளனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள மீனவக் கிராமங்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக மாறியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு வடக்கு இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் இளமையையும் வாழ்வையும் தொலைப்பது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே உள்ளனர். இந்திய மீனவர்கள் மூலமே பெரும்தொகையான போதைப்பொருள் யாழ் வருகின்றமையை மூடிமறைத்து, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தான் போதைப்பொருட்களை திட்டமிட்டு தமிழ் இளைஞர் மத்தியில் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டிவிட்டு பொலிஸாரும் படையினரும் தான் இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்களுடைய அரசியல் பிரச்சாராத்திற்காக இதனைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் இளைய சமூகம் சீரழிந்தது தான் மிச்சம்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள மீனவக் கிராமங்களைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பின்பு அங்கிருந்து மண்டபம் முகாமுக்கு வந்து தமிழக மீனவக் கிராமங்களிலும் அவர்களுடைய படகுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தமிழக மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழக்களை அமைக்க காவத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !
இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள். தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.
எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை’ எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !
யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .
இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிணையில் வெளிவந்த முன்னாள் எம்பி திலீபன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இந்தியாவில் கைதானார்.
முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து டிசம்பர் 19 ஆம் திகதி கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் போலிக் கடவுச்சீட்டில் இந்தியாவினூடாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குலசிங்கம் திலீபன் மதுரை விமானநிலையத்திற்கு இலங்கையிலிருந்து தனது சொந்தப் பெயரில் வந்ததாகவும் பின்னர் முகவர் ஊடாக போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. கைதான திலீபன் தமிழ்நாட்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் வழக்கு நடவடிக்கைகளுக்காக இவர் இலங்கை கொண்டு வரப்படலாம். சமீபங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் இருக்கும் போது வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறார்கள்.
2.4: திலீபன் மட்டுமல்ல கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் கூட போலி கடவுச்சீட்டிடனூடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அகதி தஞ்சம் எடுத்து வாழ்கின்றனர். இவ்வாறு இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதித் தஞ்சம் கோருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலங்களில் யாழில் கள்ள மணல் கடத்தி பிடிபட்டவர்களும், வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களும் வழக்கிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
‘தங்கம் ஐ லவ் யூ’ என்று வம்பிழுத்தவர் தலைக் காயத்துடன் மருத்துவமனையில் ! வலம்புரி ஹோட்டலில் எம்பி அர்ச்சுனாவுடன் தகராறு !
பெப்ரவரி 11 ஆம் திகதி “ நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு காத்திருந்த வேளை தங்கை கவுசல்யா என்னிடம் சொன்னாள் எங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள்” என்று தனது முகநூலில் என்ன நடந்தது என்பதை பா உ அரச்சுனா தனது முகநூலில் விளக்கியுள்ளார்.
“சரி எடுத்துவிட்டுப் போகட்டும். வெளிநாட்டுக்காரர்களின் பணத்தில் உல்லாசமாக உணவு உண்கிறோம் என்று நான்கு போஸ்ட்களை போட்டுக் கொள்வார்கள் விடுங்கோ என்று சொல்லிவிட்டு நான் நிதானமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை முதன்முதலாக நிமிர்ந்து பார்த்த போது தங்கம் என்றும் ஐ லவ் யூ என்றும் கத்தியபடி இருவர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தேன். எதுவும் அறியாதவாறு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டது ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று” சுட்டிக்காட்டிய அர்ச்சுனா தொடர்ந்தும் என்ன நடந்தது என்பதை விபரித்தார்.
“தலையை குனிந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் மீண்டும் அமைதியானோம். எலக்சன் நேரம் பிச்சை எடுப்பாய் இப்போது என்ன சீன் ஓட்டுகிறாய் என சொல்லிக் கொண்டது அந்தக் கருத்த தாடி கொண்ட உருவம். மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். என்ன நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா என்று அதட்டி கேட்டார் அந்த பெரியவர். தலையை நிமிர்ந்து சொன்னேன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் தயவு செய்து குழப்ப வேண்டாம் சாப்பிட்டு முடிய கதைக்கின்றேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியான போது அந்த இரண்டாவது வில்லன் என் பின்னால் வந்து என் தோளில் கை வைத்து அமத்தியபடி உனக்கு நாங்கள் கதைப்பது கேட்கவில்லை என்று கேட்டார்.
கௌசல்யா சற்று பதட்டத்துடன் அண்ணா நாங்கள் போவோம் என்றாள். இரு என, கைகளை பற்றிய படி சொன்னேன்” என்று அடுத்தது என்ன நடந்தது என்பதை விலாவாரியாக விபரித்தார். பா உ அர்சுனாவின் விபரணம் வலம்புரியினால் வெளியிடப்பட்ட சிசிரிவியிலும் பதிவாகியுள்ளது.
அதன்பிறகு “எனது தொலைபேசியை எடுத்து அவர்கள் உரையாடுவதை வீடியோ பண்ணினேன். அப்போது பின்னால் இருந்தவர் என் முதுகில் குத்தி என்னுடைய போனை பறித்தார். மௌனமாக எழும்பி நின்றபடி தயவுசெய்து எனது போனை தரவும் என்று கேட்டேன். தர முடியாது என்று ஒருவர் சொல்ல மற்றையவர் அந்த போனை உடை மச்சான் என சொல்லிக் கொண்டார். வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னம் என்னுடைய போனை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தார். அதனை எடுத்துப் பார்த்தேன் எந்த உடைசலும் இருக்கவில்லை” நடந்ததை சுவாரஸ்யமாக விபரித்தார் அர்ச்சுனா. எதையும் கூட்டிக் குறைக்காமல் நடந்ததை விபரித்துள்ளார்.
“மௌனமாக அதனை எடுத்து காற் சட்டை பைக்குள் வைத்தபடி ஓடர் பண்ணிய சாப்பாட்டை டேக் எவே பண்ணித் தருமாறு கேட்டேன். அதற்குள் பின்னால் இருந்தவர் மறுபடியும் என் முதுகில் குத்தி பின்னாலிருந்து என்னை தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்தவை சம்பவம் “. என ‘யாழ்ப்பாணமும் வாழ்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும் ‘ என்ற தலைப்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அர்ச்சுனா.
மேற்படி சம்பவமானது யாழ்ப்பாணத்தில் வலம்புரி ஹோட்டல் கிறீன் கிறாஸ் எனும் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியிலிருந்து வந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் தனது நண்பர்களுடன் இணைந்து வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது அதேநேரத்தில் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா நரேன் இருவரையும் அவதூறாக பேசி தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
வலம்புரி ஹோட்டல் சிசிரிவி காணொலியும் அதையே காட்டுகின்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் வேறெங்கோ இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்த மேசைக்கு சென்று பேச்சுக் கொடுப்பதும், அவருடைய கையிலிருந்த ரெலிபோனை பிடுங்குவதும் கூட தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த அத்துமீறலை சகித்துக் கொண்ட அர்ச்சுனா ஒரு கட்டத்தில் திருப்பி தாக்கியதில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கும் பொறுப்பற்ற தன்மையும் கண்டிக்கப்பட வேண்டும். வலம்புரி ஹோட்டல் நிர்வாகம் தமது விடுதியின் உணவகத்திற்கு உணவருந்த வருபவர்களாக இருந்தாலும் சரி விடுதியில் தங்க வருபவர்களாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நடந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளின்படி அநாவசியமாக அடுத்தவர் மேசைக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாத போது சம்பாஷனையில் ஈடுபடுவது அவர்களை தொந்தரவு செய்வது என்பது கண்டிக்கப்பட வேண்டியது. குறிப்பாக கௌசல்யா நரேனை வம்புக்கு இழுத்தது ஆண்களின் பொதுப்புத்தியில் உள்ள கோளாறு. இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரத்தினம் சிறிகரனுக்கு கௌசல்யாவின் வயத்தில் ஒரு மகளும் உள்ளார். அப்படியிருந்தும் அவருக்கு தாயகத்தில் ஒரு இளம்பெண்ணோடு காதல் கேட்கின்றது. பொது வெளியில் அது என்ன நேரமாக இருந்தாலும் பெண்களிடம் அத்துமீறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
அதேநேரம் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்த அநாகரீகத்தை தடுக்காது இவற்றை வேடிக்கை பார்த்ததும் தவறு. வலம்புரி நிர்வாகம் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக இருந்தால் காவலாளர்கள் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் ஒரு சிலரைப் பொறுத்தவரை இலங்கைக்கு சுற்றுலா வருபவர்கள் பல்வேறு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது நாளாந்த செய்தியாகிவிட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜேர்மனில் அகதியாக வாழும் இரத்தினம் ஶ்ரீஹரன் வலம்புரி விடுதியில் நடந்து கொண்ட மாதிரி ஜேர்மனியில் அடுத்தவர் உணவு உண்ணும் மேசைக்கு சென்று தொந்தரவு செய்திருந்தால் இப்போது அவர் ஜேர்மனியில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்.
சட்டத்தரணி கௌசல்யா நரேனிடம் அத்துமீறிய மாதிரியே பல பாலியல் ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் தமிழர்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றனர்.
ஒருபக்கம் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் மற்றும் உதவி செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும் மறுபுறம் பல சமூக சீரழிவுகளுக்கும் காரணமாகவுள்ளார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரான்ஸ்சில் இருந்து வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரிக்ரொக் ராசன் வீடு புகுந்து நபர் ஒருவரை கடத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து, பொலிஸார் முன்னிலையில் அந்நபரை தாக்கியதோடு அதனை வீடியோ பிடித்து ரிக்ரொக்கிலும் வெளியிட்டிருந்தார்.
புலம்பெயர் தமிழர்களில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட கோபதாபங்களுக்கு பழிவாங்க ஆவா குழு போன்ற வாள்வெட்டுக்குழுக்களுக்கு பணம் அனுப்பி கூலிப்படையை வைத்து எதிரிகளை பழிவாங்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலே பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு அக்குடும்பங்களில் வாழும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் பாலியல் இலஞ்சம் என பல சீரழிவுகளில் ஈடுபடுகின்றனர்.
பணம் இருப்பதாலும் வெளிநாட்டில் வாழ்வதாலும் தாங்கள் இலங்கையில் உள்ளவர்களை விட மேலானவர்கள் என்ற மனப்பாங்கு அவர்களை இவ்வாறான வேண்டத்தகாத வேலைகளில் ஈடுபட வைக்கின்றது.
வெளிநாட்டுக் குடியுரிமையுடன் இலங்கையில் குற்றவியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின் இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும். மீண்டும் இலங்கை வர முடியாத மாதிரி விசா கட்டுப்பாடு போட வேண்டும். இவ்வாறான சில இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஒரு பெண்ணுடன் உணவருந்த செல்லும் போது கிண்டல் கேலிக்கும் ஆளாக வேண்டியிருந்தால், சமானியர்களின் நிலமை என்னவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விடயத்தில் யாழ் மையவாத ஊடகங்கள் வழமைபோலவே நடுநலை தவறியே செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதளங்களிலும் தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டிருந்தன. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.