மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்னேற்றகரமான பாதையில் தென்னிலங்கை – போர் தின்ற வடக்கு கிழக்கில் ஆதரவற்றோராக மாற்றுத்திறனாளிகள் !
நாட்டில் 16 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையோர் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடன் நடைபெற்ற கலந்துயைாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடுள்ளோரது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. வெகுவிரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.
தென்னிலங்கை பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அதீத கவனம் சமூகம் மற்றும் அரசியல் மட்டத்தில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை சம காலத்தில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அண்மையில் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேசியப் பட்டியல் மூலம் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஓர் மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தமிழர் அரசியலில் முழுமையாக மாற்றுத்திறனாளிகளும் அவர்கள் தொடர்பான அரசியலும் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலையே தொடர்கின்றது. முன்னாள் போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்வர்கள் என ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வடக்கில் குறிப்பாக வன்னி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் காணப்படும் நிலையில் அவர்கள் சார்ந்த அரசியல் என்பது முழுமையாக தமிழ்தேசியம் பேசும் தலைவர்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த கால முப்பது வருடங்களுக்கு மேலதிகமான போர், விடுதலைப் புலிகள், நில உரிமை மீட்புக்கான போர் என்றெல்லாம் பேசி அரசியல் செய்யும் தமிழ்தேசியம் போரால் பாதிக்கப்பட்ட அத்தனை மாற்றுத்திறனாளிகளையும் கைவிட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும், அவர்களுக்கான அரசியலை முன்னெடுக்கும்படியும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும் கூட செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தொடர்ந்தும் தமிழ்தேசியம் கள்ள மௌனம் காத்து வருதிறது.