19

19

அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை ஆட்டங்காண செய்யும் சீனாவின் டீப்சீக் – தென்கொரியாவிலும் தடை !

அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை ஆட்டங்காண செய்யும் சீனாவின் டீப்சீக் – தென்கொரியாவிலும் தடை !

சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்துக்கு போட்டியாக களமிறங்கியுள்ள டீப்சீக் பாவனையாளர்கள் மத்தியில் அதிகமாக தரவிறக்கம் பட்டு வருகிறது. முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (NDvidia ) பங்குகள் 17% சரிவை சந்தித்தன, இதனால் சுமார் $600 பில்லியன் சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டது. மேலும், பிராட்காம் (Broadcom) போன்ற AI தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளும் 17% வரை குறைந்தன.

சமீபத்திய தகவல்களின் படி, டீப்சீக்கின் வருகை, அமெரிக்க பங்குச் சந்தையில் மொத்தத்தில் $1 டிரில்லியன் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் சில மாநிலங்களில் டீப்சீக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தி வருகின்றது. மேலும் உலக வங்கி வழங்கும் கடன்களிலும் பார்க்க அதிகமாக சீனா கடன்களை வழங்கி உலகின் பல பாகங்களிலும் தனது பொருளாதார மற்றும் நட்புறவை வளர்த்து வருகின்றது. இந்தியாவுடனான சீனாவின் உறவும் நெருக்கமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து அவமானப்படுத்தியது பல இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் போக்கில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. அத்தோடு விலங்குகள் இடப்பட்டு கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இன்னுமொரு தொகுதியினர் இந்தியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

 

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் பாதுகாக்கப்பட்டு, நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முந்தைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இல்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர் பயிற்சி அளித்து, ஆசிரியர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் நமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. என்றார்

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

வரவு செலவுத் திட்டத்தில் 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல எனவும் இதனை நாங்கள் எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அங்கு பா.உ சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரத்திற்காக, கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் கூட பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது. மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவின் மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள் ” என தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரி – முல்லைத்தீவில் சம்பவம்

 பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரி – முல்லைத்தீவில் சம்பவம்
மது போதையில் அரச பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிகாரி முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை மல்லாவி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பரிசோதனைக்காக நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
 வடக்கில் பொலிஸ் அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக தங்களிடம் பல தடவைகள் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

“வடக்குக்கு அள்ளிக்கொடுத்துவிட்டார் அனுர” – சாமர சம்பத் பாராளுமன்றத்தில் கூச்சல் !

“வடக்குக்கு அள்ளிக்கொடுத்துவிட்டார் அனுர” – சாமர சம்பத் பாராளுமன்றத்தில் கூச்சல் !

 

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றஞ்சாடியுள்ளார் .

வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் சாமர சம்பத் மேலும் தெரிவிதுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார். குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.

எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல. இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தமது குறைகளை எங்களிடம் குறிப்பிடுகிறார்கள். அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் குறிப்பிடுவோம். அந்த குறைகளுக்கு முறையான தீர்வை பெற்றுக் கொடுக்காவிடின் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே நேரிடும் என்றார்.

யாழ் நூலகத்துக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை என்.பி.பி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது – பா.உ கிட்ணன் செல்வராசா !

யாழ் நூலகத்துக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை என்.பி.பி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது – பா.உ கிட்ணன் செல்வராசா !

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைவாழ் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறை உழைக்கும் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர், எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள்.

மேலும் இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும்” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

 

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !.

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !

 

தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்தாவது, “எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை ! 

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை !

 

மன்னார் மாவட்ட குழந்தை நல மருத்துவர் கடமைக்கு வராமல் தலைமறைவானதைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகியுள்ள இந்த மருத்துவர் தனது நண்பரொருவருக்கு அனுப்பிய குறும்செய்தியில் வேலையிலிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை பலநாட்களாகியும் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. தொலைபேசியையும் துண்டித்துவிட்டு தொடர்பில்லாமல் இருந்துள்ளார்.

இலவசக் கல்வியில் கற்று மருத்துவத்துறைக்கு வந்தவர்கள் சில லட்சங்களை மாத வருமானமாகப் பெறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் மருத்துவத்துறைக்கு உள்ள பற்றாக்குறையால் அதிக சம்பளத்தால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. இது இலங்கை போன்ற நாடுகளில் மட்;டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போலந்து போன்ற நாடுகளிலும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் புதிய சட்டவிதிமுறைகளையும் அபராதங்களையும் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

இலவசக் கல்வியில் கற்று வெளியேறுகின்ற இவர்கள் குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் அரச மருத்துவமனைகளில் மட்டும் பணி செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன்னரே இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் ஆரம்பப் பள்ளி முதல் மருத்துவர்களை உருவாக்குவதற்கான செலவின் இரட்டிப்புத் தொகையை அபராதமாகச் செலுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்பது போன்ற விதிமுறைகள் அவசியம் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் இலங்கை மருத்துவ கலாநிதி ஜோசப் பெர்னான்டோ.

அவர் மேலும் குறிப்பிடுகையில். குறித்த குழந்தை நல மருத்துவர் மருத்துவ அசட்டையீனத்துக்காக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் தந்தை தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

“இறுதி வன்னி யுத்தத்தின் அடையாளங்களில் ஒன்று வட்டுவாகல் பாலம் அது நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும்” என பா உ துரைராசா ரவிகரன் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பிலிருந்து தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வட்டுவாகல் பாலத்தை திருத்தவும் வடக்கின் விதிகளைத் திருத்தவும் ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டால் முல்லைத்தீவு மக்கள் மிகுந்த நன்மையடைவார்கள் எனவும் ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அரசாங்கம் இன்றைய பாலத்தை நினைவுச் சின்னமாகப் பேண அனுமதி வழங்கியுள்ளதா எனத் தேசம்நெற் கேட்ட போது எமது அதிகாரிகள் அதற்கான திட்டவரைபைக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே புதிய பாலம் நிர்மாணிக்கப்படும். பழைய பாலம் நினைவுச் சின்னமாகப் பேணப்படும் எனத் தெரிவித்தார்.

வழமைபோல் எமது அதிகாரிகள் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவார்களா? அல்லது நிதியை குறித்த காலத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையையும் ஆளுமையையும் கொண்டிருக்கின்றார்களா எனக் கேட்டபோது, நிச்சயமாக அவர்கள் நிதியை திருப்பி அனுப்பாமல் குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடித்து மேலதிக நிதிக்கான வேண்டுகொளை வைப்பார்கள் என உறுதியளித்தார்