20

20

 யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

 

யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப வடக்கு, கிழக்குக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி கோரியுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.

வடக்கை பொறுத்தவரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது ஜே.வி.பி என்கிறது எதிர்க்கட்சி’, ‘இல்லை இல்லை புலிகளே குண்டு வைத்தனர்’ என மன்னிப்பும் கோரிய பா.உ அர்ச்சுனா !

தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது ஜே.வி.பி என்கிறது எதிர்க்கட்சி’, ‘இல்லை இல்லை புலிகளே குண்டு வைத்தனர்’ என மன்னிப்பும் கோரிய பா.உ அர்ச்சுனா !

 

யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முன்தினம் அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று எமது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.

எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார். நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.

அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.

யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா.” என தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கிட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தலதாமாளிகையை புலிகள் அழித்திருந்தால் அதற்காக வடக்கு மக்களின் பிரதிநிதியாக நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சி பா.உ காபீர் காசிம் நீங்கள் ஜே.வி.பிக்காக மன்னிப்பு கோருகிறீர்களா..? அல்லது தமிழ் மக்களுக்காகவா என கேட்டபோது நான் புலிகள் தலதாமாளிகையை தாக்கியதற்காக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.

அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !

அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !

 

கொழும்பு தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு சென்றிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மக்களோடு மக்களாக நின்று பொறுமையாக வரிசையில் சென்று மருத்துவரை சந்தித்தது பற்றி பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்தார்.

இதன்போது மக்கள் கண் சிகிச்சை பெற நின்ற நிலையில் அவரும் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் வைத்தியரை சந்தித்தார்.

அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்

எளிமையாக மக்களுடன் மக்களாக என்.பி.பி பா.உக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உலாவருவது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமானது. முன்னைய அரசாங்கங்களில் பதவி வகித்தோர் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளையே தமக்கான மருத்துவ தேவைகளுக்காக நாடி வந்த நிலையில் என்.பி.பியினர் இலவசமருத்துவத்தின் தரத்தை பேணும் வகையிலும் அதனை மக்களிடையே ஊக்குவிக்கவும் நேரடியாகவே அரச மருத்துவமனைகளை நாடுவது மாற்றமான அரசியல் கலாச்சாரம் உருவாவதை காட்டுகிறது என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தாயார் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றமையும் கவனிக்கத்தக்கது.

ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !

ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !

 

நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் இலங்கை சிறுவர் பாலியல் உல்லாசப் பயணத்துறையின் தலைநகராக விளங்கியது. மேலும் ஒன்லைனில் ‘செக்ஸ்’ என்ற அடிப்படையில் தேடல்களை மேற்கொள்வதிலும் இலங்கை முன்நின்றுள்ளது. உல்லாசப் பயணத்துறை வளர்ந்துவரும் இன்றைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC, இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த தொடர்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார். இவை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்கு உத்தரவிட்டது.

தற்போதைய வரவு செலவுத் திட்டத்திலும் சிறுவர் பாதுகாப்பு விடயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதோடு வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

 

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு படைகள் கிளீன் செய்யப்பட வேண்டும்! 39 பேரைக் கொலை செய்தவரை, 7 பேரைக் கொலை செய்தவர், நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொன்றார் ! 

பாதுகாப்பு படைகள் கிளீன் செய்யப்பட வேண்டும்! 39 பேரைக் கொலை செய்தவரை, 7 பேரைக் கொலை செய்தவர், நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொன்றார் !
இலங்கை இராணுவமும், பொலிஸாரும் கிளீன் செய்யப்பட வேண்டும். நாட்டின் பாரதூரமான குற்றச்செயல்கள் பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது. புலிகளின் ஆயதங்களை கொழும்புக்கு கடத்தி, 39 கொலைகள் புரிந்த, எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தவர் கனமுல்ல சஞ்சீவ.
கொலைக் குற்றவாளி கனமுல்ல சஞ்சீவ என்பவரை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற அறை 5இல் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலையாளி புத்தளத்தில் கைது செய்யப்பட்டார். இவர் லெப்டினன் தரத்தில் உள்ள ஒரு முன்னாள் இராணுவ வீரர். கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸை போலீஸ் பிரிவுகளில் ஏழு கொலைகளைச் செய்த நபர் இவர் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்தளம் பாலவிய பகுதியில் சொகுசு வானில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சட்டப் புத்தகத்தை ரிவோல்வர் வைக்குமளவுக்கு வெட்டி, அதற்குள் ரிவோல்வரைக் கடத்திச்சென்ற பெண்ணுடைய புகைப்படம் வெளியிடப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் களவு, கொள்ளை, ஆட்கடத்தல், கொலை ஆகியவற்றை சிறுவயது முதல் தொழிலாகக்கொண்டவர் கனமுல்ல சஞ்சீவ. இவர் மீது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கனமுல்ல சஞ்சீவ ஒரு வாடகைக் கொலையாளி, இவர் சாட்சியமளித்தால் அவர் யாருக்காக கொலைகளைச் செய்தார் என்பது தெரியவந்துவிடும் என்பதால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விடயத்தில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைக்கிறோம். இதுபோன்றதான சில சந்தர்ப்பங்களில் இதற்கு பொலிஸார் இராணுவத்தினர் ஒத்துழைப்புகளும் சந்தேகநபர்களுக்கு கிடைத்துள்ளன. எனவே இதனை எம்மால் தனித்து செய்ய முடியாது. அனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். எமக்கு கிடைக்கப்பெறும் இரகசிய தகவல்கள் மூலமே இதனை நிறுத்த முடியும் என்றார்.
நாடாளுமன்றத்திலும் இது குறித்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்ததது. நேற்றைய நாடாளுமன்ற அமரிவின் போது, பா.உ தயாசிறி ஜயசேகர, “இந்த நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை” என கூறியிருந்தார்.
அதற்கு பதளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த, “பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது எனவே, இவற்றை கட்டுபடுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதாள உலகமும், கருப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் உள்ளடக்கப்பட்டுள்ளன, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிலர் இலங்கையில் கூட இல்லை. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாது” என்றார்.
எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில், நேற்று கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்த வழங்கானாது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தபட்டனர். எனினும், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கிய நிலையில், சந்தேகநபர்களை விடுவித்து நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே நேற்று கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டிருந்ததார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை மன்னார் நீதிமன்ற வளாகத்திலும் அண்மையில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே கைதாகியிருந்ததும் கவனிக்கத்தக்கது. புதுக்கடை நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு இடம்பெற முன்னதாக நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் அவருடைய 06வயது மகள் , 09 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வருடம் ஆரம்பித்தது முதலாக இதுவரையான கால கட்டத்தில் சுமார் 15ற்கும் அதிகமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றில் கனிசமானவற்றில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டடிருப்பதாக தெரிய வருகிறது.