தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம்: Jaffna College – யாழ்ப்பாணக் கல்லூரியில் வண பிதா பத்மதயாளனுடன் முரண்படும் பழையமாணவர்கள் !
வட்டுக்கோட்டை சாதியத்தின் கோட்டையாகி தவறான காரணங்களுக்காக பிரபல்யம் அடைந்து வருகின்றது. அங்குள்ள சில சாதி வெறியர்களோடு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் தங்கள் சாதிய முகத்தைக் காட்டியுள்ளனர். தற்போதைய பிசப் வண பிதா பத்மதயாளன் கல்வியில் முன்நிற்கும் வெள்ளாளர் அல்லாத சமூகத்தவர். இதனைக் காரணமாக வைத்து பழைய மாணவர் சங்கத்தினர் அவருக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றனர். இந்தச் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் வண பிதா தியாகராஜா இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
தற்போதைய அதிபர் ஓய்வுபெறும் நிலையில் புதிய அதிபரை நியமிக்கும் பொறுப்பு வண பிதா பத்மதயாளனுக்கு உள்ளது. பழைய மாணவர் சங்கத்தினர் தங்களுடைய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வெள்ளாளரல்லாத ஒருவர் அதிபராக வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளனர்.
ஆறுமுகநாவலர், வெள்ளாளர் அல்லாதோருக்கு பெண்களுக்கு கல்வியை மறுத்துவந்தவர். ஆனால் கத்தோலிக்கத்தின் வளர்ச்சியால் வெவ்வேறு சமூகங்களிலுள்ளவர்களும் கல்வியில் வளர்ச்சி கண்டனர். அதன்பின் கன்னங்கராவின் இலவசக் கல்வித் திட்டத்தால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியிலும் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. யுத்ததைத் தொடர்ந்து வசதிபடைத்த வெள்ளாளர் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விகிதம் யாழ் மண்ணில் அதிகரித்தது. யாழில் தற்போது வெள்ளாளரல்லாத சமூகத்தவர் 60 வீதம் வரை காணப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் கல்விக்க மற்றும் கட்டமைப்புகளின் முக்கிய பொறுப்புக்களில் வெள்ளாளரல்லாதோர் வருவது இன்னமும் போராட்டமாகவே உள்ளது. அது யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எதிரொலிக்கின்றது.
கல்வி மற்றும் தகமைகளில் மேன்மையானவர்கள் இருந்த போதும் அவர்கள் பொறுப்பான பதவிகளுக்கு வருவதை வெள்ளாள சமூகத்தினர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தகுதியற்றவர்கள் வெள்ளாள சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டால் அதைப் பற்றி மௌனமாகவே இருக்கின்றனர். யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் இந்திரகுமாரை அவர் மேலதிக தகுதி பெற்றிருந்த போதும், வெள்ளாளர் அல்ல என்பதால், அவரை பதவியிலிருந்து அவரை வெளியேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது சிவபூமி அறக்கட்டளையூடாக் கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் அதிபராவதற்கான தகுதியற்ற ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராக இருந்த போது அவரை வெளியேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்கந்தவரோதயா மாணவர்களின் பெற்றோர் ஆறுதிருமுருகனை பாடசாலையிலிருந்து விரட்டினர்.
வட்டுக்கோட்டை சாதிய வெறியாட்டங்களின் பின் முக்கிய புள்ளியாக நின்றவர் தன்னை வேளாள வட்டுர் குருவி என்று சாதியை முன்நிறுத்தி அழைத்தவரும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரே. இந்த வட்டூர் குருவி மீது அடிதடி, கொள்ளை, கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளது. இருந்தாலும் சங்கரத்தை பத்திராளி கோயிலில் இவர் முடிசுடா மன்னனாக தனது மோட்டார் சைக்கிளில் குருவி என்று எழுதி, தன்னுடைய சாதியத் திமிரைக் காட்டி வருகின்றார். தேசம்நெற் இல் செய்தி வெளியானதையடுத்து இவர் தனது முகப்பக்கத்தில் சாதிய கோசத்தை நீக்கியுள்ளார்.
தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றி எவ்வளவு ஓங்கிக் குரல்கொடுத்த போதும் தம்மோடு வாழ்கின்ற 60 வீதமான ஒடுக்கப்பட்ட சமூகங்களை இன்னமும் சரிசமானமாக நடத்தவில்லை. சிங்களவர்கள் தங்களைச் சரிசமானமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தங்களுக்குள் 60 வீதமானவர்களை மிக மோசடாக இன்றும் அடக்கி ஒடுக்கி கேவலப்படுத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் வே பிரபாகரனின் சமூகத்தில் கை நனைக்க மாட்டார்கள், பெண் எடுக்க மாட்டார்கள் பெண் கொடுக்க மாட்டார்கள். தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம் மட்டுமே.