24

24

“பாதாள உலக குழுக்கள் பழைய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டார்கள் – எங்களால் இல்லாதாக்கப்படுவார்கள்” – அருண் ஹேமச்சந்திரா !
 பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல என பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். முன்னாள் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கியதாக கூறிய அவர், சொத்தி உபாலி, பொட்ட நௌபர் போன்ற பல பாதாள உலக தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலனாக உருவானதாகவும் அவர்கள் அரசியல் தயாரிப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். பழைய அரசியல் கலாசாரத்தால் பாதாள உலக கோஷ்டி உருவானார்கள், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கலாசாரத்தில் அது இல்லாமல் போகும் என அவர் கூறினார்.
இதுவேளை, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும். நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவுத்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம் 

அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம்

 

யாழ் அரசாங்க அதிபர் ம. பிரதீபனின் மூத்த மகன் ஆதிரையன் செலுத்தி வந்த சொகுசு கார் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஆதிரையனும் அவரது நண்பனும் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சையான தகவல்கள் ஊடகங்களில் பரப்படுகின்றன.

அரசாங்க அதிபரின் மகன் செலுத்தி விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் உத்தியோக பூர்வ வாகனம் எனவும் அதனை சாரதி இன்றி மாவட்ட செயலாளரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மறுபுறம் விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் தனிப்பட்ட வாகனம் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் அரசாங்க அதிபரின் வாகனம் என பிறிதொரு காரின் படமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ் விபத்து தொடர்பாக பிறிதொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. காரை செலுத்திய அரசாங்க அதிபரின் மகன் ஆதிரையன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் ஆதிரையன் போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவரை இந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்க அரசாங்க அதிபரின் இரண்டாவது மகனான ஆரணனை மது அருந்தினாரா? என்ற சோதனைக்கு காவல்துறையினர் ஈடுபடுத்தியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆள்மாறாட்ட பின்னணியிலேயே அரசாங்க அதிபரின் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தை விசாரிக்கும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர் மற்றும் எம்பிக்கள் இவ்விடயம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வெளிநாட்டவரின் திட்டமிட்ட தாக்குதலால் யாழ் வடமராட்சி உறவு பலி !

வெளிநாட்டவரின் திட்டமிட்ட தாக்குதலால் யாழ் வடமராட்சி உறவு பலி !

 

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்குள்ளான நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் அடியாட்களை அழைத்து வந்து தனது தந்தை, சகோதரன், சகோதரனின் மகன் மற்றும் சகோதரனின் மனைவி மீது கடந்த 19ம் திகதி தாக்குதல் நடாத்தியிருந்தார்.

இந்த நிலையில் அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளகிய இரும்பை கண்டால் துள்ளி துள்ளி அடிக்கும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் – பண முதலைகளிடம் மண்டியிட்டு விடுகிறார்கள் !

இளகிய இரும்பை கண்டால் துள்ளி துள்ளி அடிக்கும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் – பண முதலைகளிடம் மண்டியிட்டு விடுகிறார்கள் !

 

யாழ்ப்பாணத்தில், வீதியில் பழக்கடை வைத்திருந்த சிறுவன் ஒருவரிடம் சில அதிகாரிகள் அடாவடித்தனமாக செயற்படும் வகையிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த அதிகாரிகள் அந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதிகாரியொருவர் பணம் செலுத்தாமல் பழங்களை வாங்கிச் செல்வதாகவும் சிறுவனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அண்மையில் கிளீன் சிறீலங்கா திட்டத்தின் ஒரு கட்டம் என கூறப்பட்டு யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதான பேரூந்து நிலையத்தை அண்மித்த வீதியோர கடைகளை மூடுவதற்காக மாநகர சபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டமையை எதிர்த்து வியாபாரிகள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் அரச அதிகாரிகளிடையே மலிந்து போயுள்ள ஊழல் தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டும் ஹோட்டேலியர்கள், நோர்தேன் வைத்தியசாலை உள்ளிட்ட பல முதலாளிகளுக்கு வளைந்து கொடுக்கும் அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்களின் சட்ட விரோத செயல்கள் காணி ஆக்கிரமிப்புக்கள் பற்றி வாய் திறக்காமல் சாதாரண வீதியோர வியாபாரிகளிடமும், கச்சான் விற்கும் பாட்டியிடமும் தான் தமது வீராப்பையும் கடமை உணர்வையும் காட்டுவதாக பலரும் அதிருப்திவெளியிடுகின்றனர்.

இச்சிறுவன் போன்ற நலிந்த பிரிவினருக்கு இவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். மாற்று வழியைக் காட்ட வேண்டும். அதிகாரிகளிடம் கொஞ்சம் மனிதாபிமானமும் இருக்க வேண்டும்

தோற்றுப் போன ஆண்டிகள் உள்ளூராட்சி தேர்தலில் சங்கு சின்ன மடம் கட்டட கூட்டணி ! 

தோற்றுப் போன ஆண்டிகள் உள்ளூராட்சி தேர்தலில் சங்கு சின்ன மடம் கட்டட கூட்டணி !

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 9 கட்சிகளும் கலந்துகொண்டிருந்தன. அதன்படி தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்), தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்துகொண்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன தமிழ் ஆண்டிகளும் கடந்த அனுரா அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆண்டிகளுமாகச் சேர்ந்து தற்போது உள்ளுராட்சிகளில் மடம்கட்டலாம் என்று பார்க்கின்றனர். ஆனால் இந்தக் கட்சிகள் மக்களால் தோற்கடிக்கப்பட்டதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளது. ஆனால் அக்காரணங்கள் எதனையுமே இதிலுள்ள எட்டு கட்சிகளும் ஒரு போதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. விதிவிலக்காக ஓரளவு நியாயத்தன்மையுடைன கிளிநொச்சியைத் தளமாகக் கொண்ட சமத்துவக் கட்சியும் இவர்களோடு இணைந்து தன்னுடைய தனித்துவத்தை தொலைத்துள்ளது.

வடக்கின் மாகாண சபையை சீரழித்த சி வி விக்கினேஸ்வரனும் அவருடைய அமைச்சர்களுமே மாகா மோசடிப் பேர்வழிகள் என்பதையும் அவர்கள் வடக்கு மாகாணத்தின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறியவர்கள் என்பதும் மக்களின் அபிவிருத்தியைக் கணக்கிலெடுக்காமல் தங்கள் அபிவிருத்தியை மட்டும் கருதி மோசடியில் ஈடுபட்டனர் என்பதும் சுயாதீனக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. மீண்டும் இந்த மோசடியாளர்களுக்கு வடக்குத் தமிழ் வாக்கள் வாக்களிக்குமளவுக்கு முட்டாள்களாக இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

கொள்கையற்ற எட்டுக் கட்சிகள் வெறும் வாக்கு வங்கிக்காக இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் போதே குழப்பம் ஏற்பட்டுவிடும். பாலியல் வெறியர்களை கும்பிடும் சி வி விக்கினேஸ்வரன் தலைமையில் உள்ள கட்சிகளைக் கொண்டு அவரது ஊழல் அமைச்சர்களைக் கொண்டு எவ்வாறு தமிழ் மக்களின் உள்ளுராட்சி மன்றங்களை வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எனது அண்ணன் மகேஸ்வரனின் படுகொலைக்கு தொழில் அதிபர் விண்ணணும் காரணம் ! தியாகராசா விக்கினேஸ்வரன்

எனது அண்ணன் மகேஸ்வரனின் படுகொலைக்கு தொழில் அதிபர் விண்ணணும் காரணம் ! தியாகராசா விக்கினேஸ்வரன்

 

முன்னாள் அமைச்சராக இருந்த தன்னுடைய சகோதரன் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதற்கு தொழில் அதிபர் விண்ணன் முக்கிய காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றார் மகேஸ்வரனுடைய சகோதரர் தியாகராசா விக்கினேஸ்வரன். பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் விக்கினேஸ்வரன் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் மகேஸ்வரனுடைய கொலையின் பின்னணியில் தொழில் அதிபர் விண்ணணுக்கு முக்கிய பங்கிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

விண்ணன் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் ஆயதம் ஏந்திய இயக்கங்கள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ஈபிடிபி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கங்கள் கடத்தல், கொள்ளை, கொலை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது விடுதலைப் போராட்ட அமைப்புகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் லண்டன் பிரிதிநிதி சாம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆலயத்தில் வைத்து வசந்தன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளால் ஈபிடிபிக்குள் அனுப்பி வைக்கப்பட்ட புலனாய்வுப் புலி உறுப்பினராகவே அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பில் தியாகராசா விக்கினேஸ்வரனிடம் கேட்ட போதே அவர் தொழிலதிபர் விண்ணனை நோக்கி குற்றச்சாட்டை வைத்தார்.

 

 

ஐநா மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைது ! அமெரிக்கா விலகுகின்றது !

ஐநா மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைது ! அமெரிக்கா விலகுகின்றது !

 

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இன்று முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமை அரசியலின் மிக வீச்சான காலகட்டமான இக்காலப்பகுதியில் தற்போது அசமந்த நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தமிழ் மனித உரிமை அமைப்புகளின் முதகெலும்பாகச் செயற்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சாமூவேல் பொஸ்கோ சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் தீவிர வலதுசாரிக் கொள்கைகளோடு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தள்ள டொனால் ட்ரம் இம்மனித உரிமைக் கூட்டத் தொடரிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

மார்ச் 3ம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் வாய்மூலமான புதுப்பிப்பு கேட்கப்படவுள்ளது. பொறுப்புக்கூறல் தொடர்பில் அமெரிக்கா கலப்பு நீதிமன்ற பொறிமுறையை பரிந்துரைத்து இருந்தது. தற்போது அமெரிக்க இக்கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசு உள்ளக பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்றையே வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்காவில் டொனால் ட்ரம் இன் வருகையும் ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி அரசியல் அலையும் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் அமெரிக்காவும் – ஐரோப்பிய ஒன்றியமும் முறுகல் நிலையில் உள்ள சூழலும் 2009 யுத்தம் தொடர்பான தமிழர்களின் அரசியல் சர்வதேசச் சூழலில் ஒரு பொருட்டாக அமையுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ஜேர்மனியும் வலதுசாரிகளின் பிடியில் !

ஜேர்மனியும் வலதுசாரிகளின் பிடியில் !

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை 23 பெப்ரவரி ஜேர்மனியில் நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே வந்துள்ளன. இச்செய்தி எழுதப்படும் வரை முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. இருந்த போதும் மிதவாத வலதுசாரி கட்சியான சிடியு மற்றும் சிஎஸ்யு இணைந்த ஒன்றியும் தனது தேர்தல் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. அந்த வகையில் சிடியுவின் பிரதம வேட்பாளரான கடும்போக்குடைய பிறீட்றிஜ் மெர்ட்ஸ் ஜேர்மனியின் அடுத்த கன்சிலர் ஆகிறார். சிடியு மற்றும் சிஎஸ்யு இணைந்த ஒன்றியம் இணைந்து 28 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

ஆளும் கட்சியான ஒலாப் சொல்ஸ் தலைமையிலான எஸ்பிடி இத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 9 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை இழந்து எஸ்பிடி கட்சி 16 வீதம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது.

எதிர்வு கூறிய மாதிரியே கடும்போக்கு தீவிர தேசியவாத வலதுசாரிக் கட்சியான ஏஎப்டி 20 வீத த்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜேர்மனியின் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் இம்முறை பசுமைக்கட்சி குறிப்பிடத்தக்களவு சரிவைச் சந்தித்துள்ளது. 2.4 வீத வாக்கு வீதச் சரிவை இழந்துள்ள பசுமைக் கட்சி 12.3 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை தி லிங்க என்ற இடதுசாரிக்கட்சி கடந்த முறையை விட அதிகளவு வாக்கு வீதத்தை எடுத்து முன்னேறியுள்ளது. குறிப்பாக கடந்த முறையை விட 3.6 வீத வாக்குகளை கூடுதலாக பெற்று 8.5 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இம் முறை நடந்தேறிய தேர்தலில் பெரும்பாலான வெளிநாட்டவர்களின் தெரிவாக தி லிங்க கட்சியே அமைந்திருந்ததாக ஜேர்மனியில் புலம்பெயர்ந்த மக்களுடன் வேலை சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எப்டிபி ஐந்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்வதே கேள்விக்குறியாகியுள்ளது. அதைவிட ஏனைய சிறிய கட்சிகளில் ஒன்றும் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை எடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.

ஆக ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் வலதுசாரிகள் கோலோச்சப் போகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி இணைந்த பின்னர் நடந்த பொதுத்தேர்தல்களில் இம்முறை வாக்களிப்பு வீதமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 2021, 76.4 வீதமும் இம்முறை 83.5 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.

எவ்வாறெனினும் ஜேர்மனியை பொறுத்தவரை பல கட்சிகள் இணைந்தே அரசாங்கத்தை அமைத்து வந்துள்ளன. இம்முறை சிடியு மற்றும் சிஎஸ்யு ஒன்றியம் அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஏற்கனவே சிடியு பிரதம வேட்பாளர் மஎர்ட்ஸ் (Merz) கடும்போக்கு ஏஎப்டியுடன் கூட்டு இல்லை என அறிவித்திருக்கிறார்.

அவரின் இக்கருத்தினை ஏஎப்டி கட்சியின் பிரதம வேட்பாளர் அலிஸ் வைடல் கண்டித்துள்ளார். அதேநேரம் அரசாங்கத்தில் கூட்டமைக்க எஸ்பிடி பேச்சுவார்த்தைகளுக்காக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் பசுமைக் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சியான தி லிங்க என்பனவும் அரசாங்கத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. ஆகவே வரும் நாட்களில் கூட்டணிப் பேச்சுக்கள் சூடு பிடிக்கும் என அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒன்றரை கோடி செலவழித்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்படுகின்றார்கள் ! திருப்பி அனுப்பப்படுவார்கள் !

ஒன்றரை கோடி செலவழித்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்படுகின்றார்கள் ! திருப்பி அனுப்பப்படுவார்கள் !

 

பிரித்தானியாவுக்கு அகதியாக வருவதற்கு தற்போது ஒன்றரைக் கோடி ரூபாய் செலவாகின்றது. அவ்வாறு வந்தவர்களும் கூட தற்போது கடைகளில், உணவகங்களில், பெற்றோல் ஸ்ரேசனில், தபாலகங்களில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கியர் ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையர் உட்பட 16,400 வெளிநாட்டவர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலை இதுவரை காலமும் இருந்த அகதிச்சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் ஏனைய மேற்குநாடுகளைப் போன்று பிரித்தானியாவிலும் அகதிகளின் நிலை கையறுநிலையை எட்டியுள்ளதாக சட்டத்தரணியும் சட்டவாதிமான அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். 1990க்கள் முதல் சட்டத்துறையில் உள்ள கணநாதன் தற்போதைய சூழல் கிட்டத்தட்ட அகதிகளுக்கான சலுகைகள் முற்றாக மட்டுபடபடுத்தப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட சூழல் என்றும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் முன்னையவர்கள் போன்ற போராட்ட வலிமையைக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

கல்வி கற்க, வேலை செய்ய என வருபவர்கள் சில சமயங்களில் அதனைத் தொடர முடியாமல் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். முன்னைய காலங்களில் உள்துறை அமைச்சுக்குத் தண்ணி காட்டிவிட்டு தமிழ் கடைகளில் வேலை செய்யும் வசதிகள் இருந்தது. ஆனால் தற்போது வேலை செய்வதற்கான ஆவணங்கள் இல்லாமல் ஒருவரை வேலையில் வைத்திருந்தால் அதற்கான அபராதம் 20,000 பவுண்களில் இருந்து 60,000 பவுண்கள் வரை விதிப்பதற்கு அனுமதிக்கின்றது. அதனால் அவ்வாறான அபராதத்திற்குப் பயந்து யாரும் வேலை மனுமதிதப் பத்திரம் இல்லாதவர்களை வேலையில் வைத்திருப்பதில்லை. ஒருவருக்கு வருமானம் இல்லாமல் பிரித்தானியாவில் வாழ்வது இயலாத காரியம். இன்னொருவரால் அவரை வருமான ரீதியில் பராமரிக்கவும் முடியாது.

ஜனவரி மாத்ததில் பிரித்தானிய உள்துறை அமைச்சு 800க்கும் அதிகமான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு 609 பேரைக் கைது செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியைக் காட்டிலும் 73 சதவிகிதம் அதிகம். கடந்த யூலை மாதம் தொழிற்கட்சி ஆட்சிபீடம் ஏறியது முதல் 5,424 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 3,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு யூலை தேர்தலில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது முதல் 16,400 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று வெளிவரும் புள்ளிவிபரங்களைக் கவனித்தால் இந்த எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குடிவரவு விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள யெற் கூப்பர், சில வியாபார நிறுவனங்கள் இவ்விதிகளை மீறி சட்டவிரோதமாக சட்டவிரோத குறியேற்ற வாசிகளை வேலைக்கு வைத்து சுரண்டல்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை பதவிக்கு வந்தவுடனேயே கைவிட்டுள்ளனர். ஆனால் தொழிற்கட்சி அரசு அவர்களை நேரடியாகவே தத்தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றது. கொன்சவேடிவ் அரசு தொடர்ந்தும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

வரும் மார்ச் மாதத்தில் சட்டவிரோதமாக நாடுகளின் எல்லைகளுக்குள் நுழைவோர் தொடர்பில் எல்லைப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை பிரித்தானியா கூட்ட உள்ளது என்றும் அதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளும் 40 நாடுகளும் பங்கு பெற்ற உள்ளதாகத் பிரித்தானிய அரசு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே ஐரோப்பாவில் கங்கேரி, இத்தாலி, ஸ்பெயின், ஹொலன்ட் ஆகிய நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சி அமைத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு வெளிநாட்டவர்களுக்கு எதிரான அலை ஒன்று உருவாகியுள்ளது.

இந்த அலை அமெரிக்காவில் டொனால் ட்ரம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மேலும் வீரியம் பெற்றுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனியிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. ஜேர்மனியில் நடந்த நேற்றைய தேர்தலில் பழமைவாதக் கட்சியான கிறிஸ்ரியன் டெமொகிரட் கட்சி கூட்டாட்சி ஒன்றை அமைக்க உள்ளது. இக்கட்சி முன்யை சானஸ்லர் அங்கலா மேர்களுடைய மிதவாத வலதுசாரக் கட்சி. ஆனாலும் தற்போது சான்ஸ்லராக வரவுள்ளவர் தீவிர வலதுசாரியாகவே கருதப்படுகின்றார். இந்த வலதுசாரி அலையில் அடிபட்டுச் செல்லாமலிருக்க பிரித்தானிய தொழிற்கட்சியும் தீவிர வலதுசாரிக்கொள்கைகளை வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொண்டுவருகின்றது.