மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ ஆட்கத்தினாரா ? வந்தவர்கள் தஞ்சம் கேட்டால் அது யார் தவறு ?
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜாவுடன் நேர்காணல்
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ ஆட்கத்தினாரா ? வந்தவர்கள் தஞ்சம் கேட்டால் அது யார் தவறு ?
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜாவுடன் நேர்காணல்
வடக்குக்கு ஹெலிகாப்டரில் பயணியுங்கள் – ரவி கருணாநாயக்க மீண்டும் அட்வைஸ்
நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக குறைந்தது ஏழு மணிநேரம் பயணம் செய்கிறார். வடக்குக்கு சாலை வழியாக பயணம் செய்வதன் மூலம் முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குகிறார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும்,” என்று கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது பேசினார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் எம்.பி.க்களுக்கு உரிமையுள்ள சலுகைகளை விட்டுக்கொடுக்கும் முடிவுகளிலிருந்து இலங்கை விரும்பிய நன்மைகளைப் பெறத் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.
“சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் எனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அது தற்போது மூடப்பட்டுள்ளது, உத்தியோகபூர்வ இல்லத்தை மூடி வைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும்? அவற்றை மூடி வைத்திருப்பதன் மூலம் நீங்கள் சில மில்லியன்களை மட்டுமே சேமிக்க முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராமுக்கும் அதிக பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது லொறியின் அடிப் பகுதியில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட தொட்டியிலிருந்து 182 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 34, 40 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வாகனம் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் வடகல் எல்லையில் எம்முடைய கடல் வளத்தை அழிப்பதுடன் இந்த போதைப் பொருட்களை யாழுக்கு கடத்தி வந்து தமிழ் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய அரசை வற்புறுத்தும் செயற்பாட்டை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மட்டும் மேற்கொண்டு வருகிறார். ஏனைய தமிழ் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர். எம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஆனால் இந்தியத் தூவரை மனம்நோகச் செய்யக் கூடாது என்ற பாணியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.
மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !
மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் அண்மையில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த இந்த கும்பல் விளையாடிக்கொண்டிருந்த சிலரை துரத்தி துரத்தி வாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.
தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !
தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, இந்தப் பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றனர்.
தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !
முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு சேவைக் காலத்தையும் முடிப்பதற்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளமை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் பயிற்சி பெற்று ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் வெளியேறுபவர்கள், பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளமை நிகழ்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
தற்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அரசியல் பாதுகாப்பும் இல்லை. அரசாங்க துப்பாக்கிகள் தொடர்பான கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு, கணிசமான அளவு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன – என்றார்.
இதேவேளை, வீட்டில் கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் பதுளையில் நேற்று கைதாகியுள்ளார். அத்துடன் பேருந்துக்குள் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகள் பண்டாரவளையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்
காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மரணதண்டனையை மீளக் கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை – நீதியமைச்சர்
மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சராகவுள்ள உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார். நீதிமன்ற கொலையின் பின்னரும் இது குறித்து ஆராயப்படவில்லை.
தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் 1976ம் ஆண்டு முதல் மரணதண்டனையை நிறைவேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !
ஆளுநர் வேதநாயகன் விழாக்களில் சொற்பொழிவாற்றுவதோடு நின்று விடாமல் இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் தெருவோரம் பாடசாலை மாணவன் ஒருவர் வைத்திருந்த பழக்கடையை அகற்றி யாழ் மாநகரசபை அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.
அது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தது.
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தெருவோரம் பழ விற்பனையில் ஈடுபடும் மாணவனிடம் பழங்களை மாநகரசபை ஊழியர்கள் வழமையாக இலஞ்சமாக பெற்று வந்திருக்கின்றனர். குறிப்பிட்ட தினத்தில் தான் பழங்கள் கொடுக்காமையாலேயே அதிகாரிகள் தனது கடையை அகற்றினர் என்கிறார். மேலும் இரு அதிகாரிகள் தன்னை பிடித்துக் கொள்ள தனக்கு முதுகில் அடிகள் விழுந்ததாகவும் கூறினார்.
இம் மாணவனின் பழக்கடைக்கு விஜயம் செய்த யுரியூப்பர் ரஜித் இடம் அம் மாணவன் இவ்வாறு கூறினார். அவர் மொத்த பழ வியாபாரியான ஒரு முதலாளியிடம் பழங்களை வாங்கி விற்பனை செய்கிறார். அம் மாணவனுக்கு நாளாந்த கூலியாக 2500 ரூபாய் கிடைப்பதாக தெரிவித்தார். இந்த விடயத்தில் மாநாகர சபை அதிகாரிகள் ஏனைய நடைபாதை வியாபாரிகளிடமும் மணிக்கூடு மற்றும் ரிசேர்ட் என இலஞ்சம் வாங்கின்றனர் என்பதைக் கேள்வியுற்றதாகவும் இச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாநகரசபை நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்களை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வழிசமைத்திருக்கின்றது.
3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் !
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டம் 3000ஆவது நாளை நேற்று எட்டியது. வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் 3000ஆவது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உருவப்படத்தை தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெவ்வேறு நாடுகளாலும் வெவ்வேறு குழுக்களாலும் தத்தம் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் போராட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. மேலும் இப்போராட்டங்கள் பரவலாக அரசியல் மயப்படுத்தப்பட்டதால் தமிழ்கவி மற்றும் அனந்தி சசிதரன் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்தல் கால பிரச்சாரங்களில், காணாமல் ஆக்கப்படுதலின் வலியை நானும் உணர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஆட்சியமைக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தான் என்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் சில உறவுகள் தங்களுடைய பிரச்சினையை ஐநாவில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டதாகவும் அவ்வாறு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டதால் இவர்களை ஐநாவுக்கு அழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஐநா கூட்டத் தொடரில் ஜனவரி 16இல் கிட்டத்தட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டது போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரயதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடையே மிகுந்த பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மரியதாஸ் பொஸ்கோ தனது மனித உரிமைச் செயற்பாடுகள வைத்து வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து பணம் சேர்த்தார். என்கின்றனர்.
மற்றைய தரப்பினர், கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக அர்ப்பணித்த ஒருவரை தங்களுடைய சுயநலன்களுக்காகக் காட்டிக்கொடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். ஐநா மனித உரிமை அரங்கில் வைத்து சட்டவிரோதமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற அடிப்படை விதிமுறைகூட மரியதாஸ் பொஸ்கோ விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை யாரும் இதுவரை கேள்விக்கு உட்படுத்துவதாக இல்லை.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் சர்வதேசக் கொடிகளை ஏந்தி, காஸாவில் பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கு உதவிய சர்வதேச நாடுகள் தங்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றன. சர்வதேச நாடுகள் உள்ளிட்ட கலப்புப் பொறிமுறையை முன்மொழிந்த அமெரிக்கா நேற்று ஆரம்பித்த ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் ஐநாவுக்கு பேச்சாளர்களை அழைத்து வருகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மார்ச் 23 இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறைக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும்.
இதனிடையே காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.
இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதி போரில் இழந்த தமது உறவுகளை தேடி போராட்டம் நடாத்தி வந்த நூற்றுக்கும் அதிகமான பெற்றோர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.