தமிழினியின் மரணத்தில் சந்தேகம் ! விசாரணையைக் கோரி பொலிஸில் முறைப்பாடு ! பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர்
கடந்த பெப்ரவர் 10 திகதி யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியான அவர் சிகிச்சை பலனின்றி பெப்ரவரி 16 இல் உயிரிழந்தார். ஆரம்பத்தில் கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனப் பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தது.
எனினும் தமிழினி இறக்க முன்னர் கொடுத்த வாக்குமூலம் வேறு மாதிரி அமைந்திருந்தது. படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் ஏற்பட்ட விபத்தே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தீக்காயங்களுக்குள்ளான தமிழினியை காப்பற்ற முற்பட்ட அவரது கணவருக்கும் சிறியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழினியின் கணவர் அசோகதாஸன் சதீஸ் கோப்பாய் பட்டமேனியில் கிராம சேவகராக பணிபுரிகிறார். இறந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினிக்கு ஆறு வயதில் இன்னொரு பெண் குழந்தையும் உள்ளது.
தமிழினி சதீஸ் அகாலமரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. தமிழினியின் மரணத்தின் பின்னணியில் அவரது கணவர் சதீஸ் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழினி மற்றும் சதீஸ் இருவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக காதலே திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் தமிழினி. திருமணத்தின் பின் நீர்வேலியில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
தமிழினியை திட்டமிட்டு சதீஸ் தீயிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சதீஸ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. பெண்களுடன் தவறான உறவில் சதீஸ் இருந்தாகவும் கூறப்படுகிறது. பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். சதீஸின் நடத்தையால் தமிழினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
தீ விபத்து நடந்த அன்று தமிழினிக்கும் கணவர் சதீஸ்க்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. தீயில் எரிந்த தமிழினிக்கு உடைமாற்றி அதிகாலை கோப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர் சதீஸ். கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்பட்டார் தமிழினி. தமிழினியின் சகோதரியின் வாக்குமூலப்படி தமிழினியின் முகமும் முன்பக்கமும் தீயினால் கடுமையாக எரிந்துள்ளது. வைத்தியர்களின் கூற்றுப்படி நுரையிரல் கிட்டத்தட்ட முற்றாகவே சிதைந்து போயுள்ளது .
தமிழினியை வைத்தியசாலையில் அனுமதித்த போது கணவர் சதீஸ் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ் அரசாங்க அதிபர் நான்காம் நாள் தமிழினியை வைத்தியசாலையில் சந்தித்துள்ளார். எப்படியாயினும் நுளம்புக்கு கொழுத்திய திரியால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது மிக அரிதான விசித்திரமான நிகழ்வு. வெளிநாடுகளில் கட்டிடங்கள் எரியக்கூடிய மூலப்பொருட்களைக்கொண்டே கட்டப்படுவதால் தீ விபத்துக்கள் உயிராபத்தானவையாக இருப்பது இயல்பு. ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலையில்லை. அதுவும் நுளம்புத் திரியால் வந்த நெருப்பு உடலை எரிப்பது ஆச்சரியமானதே.
ஆனால் சில மாதங்களுக்கு முன் திருகோணமலையில் ஒரு பெண் குடிகார கணவனுக்கு பாடம் கற்பிக்க மண்ணெண்ணையை ஊற்றி மிலட்ட எடுத்த முயற்சி மரணத்தில் முடிந்ததை தேசம்நெற் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே.
இப்படியான சந்தேக அகாலமரணங்கள் மிகவும் உண்ணிப்பாக விசாரிக்கப்பட வேண்டும். வீட்டு வன்முறைகளின் உச்சகட்டமாக பெண்கள் பரிதாபமாக கொலை செய்யப்படுவது தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் ஆகிவிட்டன. இறந்தவர் உயர் பதவி வகித்த உதவிப் பிரதேச செயலாளர். குற்றம்சாட்டப்படும் கணவர் கிராமத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க கிராம சேவகர்.
பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் மலிந்து போயுள்ள சமூகத்தில் இவ்வாறன மரண தீர விசாரிக்க வேண்டியது பொலிஸார் கடமை. வைத்தியசாலை நிர்வாகமும் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும். பெண்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என கூறிக் கொள்ளும் பெண்ணியவாதிகளும் பெண் அரசியல்வாதிகளும் கூட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழினிக்கு நீதி கேட்டு முகநூலில் “ஊழல் ஒழிப்பு அணி வன்னி’’ என்ற முகநூல் கணக்கினூடாகவே முதன் முதலில் தொடர்ச்சியாக பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்சமயம் இந்த விடயத்தில் தமிழினியின் தந்தை சண்முகராசா பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். ஏற்கனவே கோப்பாய் பொலிஸில் உள்ள முறைப்பாடு தொடர்பில் அவர் விளக்கங்களை கேட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி பிரித்தானியா வாழ் தொழிற்கட்சி உறுப்பினர் துஷாகரன் அமிர்தலிங்கமும் தமிழினியின் மரணத்திற்கு நீதி கேட்டு இலங்கை அரசின் பல்வேறு பிரிவுகளுக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழினியின் கணவர் சதீஸ் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை, தமிழினியின் அகாலமரணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை பொலிஸாரும் அரசாங்க அதிபருமே தெளிவுபடுத்த வேண்டும். தமிழினி எரிக்கப்பட்டாரா? என்பதை வீட்டுவன்முறைச் சட்டத்தின் கீழ் சந்தேக மரணமாக எடுத்து சுயாதீன விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழினி கணவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? ஏதும் அரசியல் செல்வாக்கு விசாரணைகளை திசை திருப்புகின்றதா? என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும். தமிழினியின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.